இலங்கையில் முதன்முறையாக அரை-தொழில்முறை கால்பந்து லீக் தொடர் ஒன்றை நடத்துவது தொடர்பிலான சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனம், கால்பந்து கழகங்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விளையாட்டு மருத்துவ பணிப்பாளர் லால் ஏக்கநாயக்க ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு நேற்று (21) Zoom செயலி மூலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
>> ஆர்சனல் அணியிலிருந்து விலகுகினார் ஓசில்
நாட்டில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முழு ஆதரவையும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதுடன், கால்பந்து விளையாட்டை சிறந்த தொழில்முறை விளையாட்டாக மாற்றவும், அதன்மூலம் FIFA தரவரிசையில் இலங்கையை முன்னேற்றி, சர்வதேச மட்டத்துக்கு கால்பந்தை கொண்டுசெல்ல வேண்டும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனை முன்னிட்டு, நாட்டின் நகரங்களை உள்ளடக்கிய அணிகளை கொண்ட தொடர் ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள வீரர்களுக்கு முதற்தர கால்பந்து அனுபவத்தை வழங்க முடியும் என்பதுடன், நாடளாவிய ரீதியில் கால்பந்தை அபிவிருத்திசெய்து, பலப்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், இந்த சந்திப்பின் போது, சுப்பர் லீக்கை நடத்துவதற்கான திகதிகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பெப்ரவரி 17ஆம் திகதி பருவத்துக்கு முந்தைய போட்டிகள் ஆரம்பமாகும். பின்னர், மார்ச் 17ஆம் திகதி பருவத்துக்கு முந்தைய போட்டிகள் நிறைவுக்கு வரும்.
அத்துடன், ஏப்ரல் 17ஆம் திகதி சுப்பர் லீக் தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாவதுடன், ஜூலை 30ஆம் திகதி 2021ஆம் ஆண்டுக்கான சுப்பர் லீக் தொடர் நிறைவுக்குவரும். முதல் பருவகாலத்துக்கான போட்டிகள் நடைபெறுவதற்கு மத்தியில், வீரர்களுக்கு கட்டாரில் நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ண மற்றும் ஆசிய கிண்ண தகுதிகாண் தொடரின் இரண்டாவது சுற்றுக்காக இரண்டு இடைவேளைகள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, 2021ம் ஆண்டு சுப்பர் லீக் தொடருக்கான வீரர்கள் பதிவு ஜனவரி 25 முதல் பெப்ரவரி 28வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது பருவகாலத்துக்கான வீரர்கள் பதிவு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15வரை நடைபெறவுள்ளது. வீரர்களை கடன் மற்றும் பரிமாற்றத்தின் மூலம் அணிகள் தெரிவுசெய்யமுடியும்.
இதேவளை, கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக சுப்பர் லீக் தொடரில் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், அனைத்து விதிமுறைகளும் பருவத்துக்கு முந்தைய பயிற்சிகளிலிருந்து அதிகாரிகள் அவதானிப்பர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<