கால்பந்தில் எழுச்சி கண்ட 2021ஆம் ஆண்டு

Football Review - 2021

407

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் உலகில் இருந்து விடுபடாதபோதும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 இல் அதன் வீரியம் குறைந்திருந்தது. சர்வதேச மட்டத்திலான சமூக, பொருளாதாரத்தில் அதனை நன்றாக பார்க்க முடிந்தது.

கால்பந்து விளையாட்டிலும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மீண்டு வந்த ஆண்டாக 2021ஐ பார்க்கலாம். வெறிச்சோடிய அரங்கில் நடந்த கால்பந்து போட்டிகளில் மீண்டும் ரசிகர்களின் கூச்சல் கரகோசங்களை பார்க்க முடிந்தது. இந்த நிலை கால்பந்துக்கும் பொருந்தும்.

கொரோனாவில் இருந்து மீண்டு வருவது ஒருபுறம் இருக்க கால்பந்து போட்டியிலும் இலங்கை அணி குறிப்பிடத்தக்க மீட்சி கண்ட ஆண்டாக 2021ஐ குறிப்பிடலாம்.

சர்வதேச கால்பந்து தரவரிசையில் 2020 ஆம் ஆண்டு மோசமான நிலையை பதிவு செய்து 206 ஆவது இடத்திற்கு பின்தங்கி இருந்த இலங்கை தேசிய அணி இந்த ஆண்டில் எழுச்சி பெற்று தற்போது 204 ஆவது இடத்திற்கேனும் முன்னேறி உள்ளது.

சவாலான ஆரம்பம்

என்றாலும் மிக வலுவாக அணிகளுடனேயே இலங்கை இந்த ஆண்டு தனது சர்வதேச போட்டிகளை ஆரம்பித்தது. அதாவது ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி ஆசியாவின் பலம்மிக்க அணிகளில் ஒன்றான தென் கொரியா மற்றும் லெபனான் அணிகளை எதிர்கொண்டது.

இந்த ஆண்டின் முதலாவது தகுதிகாண் போட்டியாக வட கொரியாவை இலங்கை அணி எதிர்கொள்ளவிருந்தபோதும் அந்தப் போட்டி ரத்தானது. தொடர்ந்து கடந்த ஜூன் 5ஆம் திகதி லெபனானை எதிர்த்தாடிய இலங்கை போட்டியில் கடைசிவரை ஈடுகொடுத்து ஆடியதை காண முடிந்தது.

கடைசிவரை விறுவிறுப்பாக இருந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி 2-3 என்ற கோல் வித்தியாசத்தில் கௌரவமான தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து ஜூன் 9ஆம் திகதி தென் கொரியாவை எதிர்கொண்ட இலங்கைக்கு எதிரணியின் அட்டத்தை சமாளிக்க முடியாமல்போனது. இந்தப் போட்டியில் இலங்கை அணி 0-5 என்ற கோல்களால் தோல்வியை சந்தித்தபோதும் அதுவும் கூட நல்லதொரு அனுபவமாக இருந்தது.

கட்டாரில் 2022 உலகக் கிண்ணத்திற்காக ஆசிய மண்டலத்தின் தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணியால் சோபிக்க முடியவில்லை. இந்த தகுதிகாண் போட்டிகளில் ஒன்றிலும் வெற்றிபெறாத இலங்கை உலகக் கிண்ண தகுதியையும் இழந்தது.

இந்தியாவை சமன் செய்து ஆறுதல்

கொவிட்-19 தொற்றால் பிற்போடப்பட்டு வந்த SAFF சம்பியன்ஷிப் தொடர் ஒருவாராக மாலைதீவில் கடந்த ஒக்டோபர் 1 தொடக்கம் 16 ஆம் திகதி வரை நடைபெற்றது. பாகிஸ்தான் இடைநிறுத்தப்பட்டு பூட்டான் விலகியதால் ஐந்து நாடுகளுடன் ஒரே குழுவாக போட்டியை நடத்த வேண்டி ஏற்பட்டது.

இதன் முதல் போட்டியில் இலங்க அணி பங்களாதேஷுடன் கடுமையாக போராடியபோதும் 56ஆவது நிமிடத்தில் தொபு பர்மான் அடித்த பெனால்டி கோலால் பங்களாதேஷ் வென்றது. நேபாளத்துடன் நடந்த அடுத்த போட்டியும் இதே நிலைதான் கடைசி வரை விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்திலும் இலங்கை 2-3 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்க வேண்டி ஏற்பட்டது.

எனினும் பலம்மிக்க இந்தியாவை எதிர்கொண்ட இலங்கை அணியினர் அந்தப் போட்டியில் அபாரமாக ஆடினார்கள். உலகத் தரவரிசையில் 107ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா போட்டியின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்தியபோதும் இலங்கை இந்தியாவுக்கு கோல் விட்டுக்கொடுக்காமல் தற்காத்து ஆடியது. கடைசிவரை ஈடுகொடுத்து ஆடிய இலங்கை போட்டியை கோலின்றி சமநிலை செய்தது.

எனினும் மாலைதீவு அணிக்கு எதிராக கடைசி போட்டியிலும் இலங்கை அணி 0-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியபோதும் பெரும் எதிர்பார்ப்புகளைத் தந்த தொடராக இது இருந்தது.

தொடரின் இறுதிப் போட்டியில் நேபாளத்தை எதிர்கொண்ட இந்திய அணி 3-0 என வெற்றியீட்டி 8ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

நூலிழையில் கிண்ணம் தவறியது

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு அணிகள் பங்கேற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண கால்பந்து தொடர் கடந்த நவம்பர் 9 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இலங்கையுடன் பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் சீசெல்ஸ் நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. நீண்ட காலத்திற்கு பின் இலங்கை அணி சிறந்த முறையில் ஆடிய தொடராக இதனை பார்க்க முடிந்தது.

குழு நிலை போட்டிகளில் மாலைதீவுக்கு எதிரான ஆட்டத்தை 4-4 என சமன் செய்த இலங்கை சீசெல்ஸிடம் 0-1 என தோற்றபோது பங்களாதேஷுக்கு எதிரான போட்டியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றதினால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடிந்தது.

சீசெல்ஸ் அணிக்கு எதிராக பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை அணியால் ஆட்டத்தின் முழு நேரம் முடியும்போது 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற முடிந்தது. என்றாலும் பெனால்டி சூட் அவுட்டில் 1-3 என தோற்று நூலிழையில் கிண்ணத்தை தவறவிட்டது.

இதில் ஜெர்மனியில் பிறந்து அந்நாட்டு கழக அணிகளுக்கு ஆடி இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்திருக்கும் அஹமட் வசீம் ரசீக் இந்தத் தொடரில் அதிகபட்சமாக 7 கோல்களை பெற்றார். குறிப்பாக மாலைதீவுக்கு எதிரான போட்டியில் மாலைதீவு அணி 4-0 என முன்னிலை பெற்றிருந்தபோதே இரண்டாவது பாதியில் அவர் அடுத்தடுத்து நான்கு கோல்களை பெற்று போட்டியை சமநிலை செய்தார்.

குறிப்பாக, இலங்கை அணி இந்த ஆண்டில் விளையாடிய ஆனைத்துப் போட்டிகளிலும் வசீம் ராசிக் காண்பித்த ஆபார ஆட்டம் இலங்கை கால்பந்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இழுபறியில் கழகமட்ட போட்டிகள்

கொரோனா வைரஸ் தொற்று இலங்கை உள்ளூர் கால்பந்து போட்டிகளை பெரிதும் பாதித்தது. 2020 நடுப்படுதியில் தொடங்கில் இந்த நெருக்கடி 2021இலும் நீடித்தது. பயணத் தடைகள், சமூக இடைவெளி, பொது முடக்கம் என்று கால்பந்து வீரர்கள் போட்டிகளில் பங்கேற்காதது ஒரு பக்கம் இருக்க அவர்களால் பயிற்சிகளில் கூட ஈடுபட முடியாத நிலை நீடித்தது.

போதிய பொருளாதார பலம் இல்லாத சூழலில் கொவிட்-19 என்பது இலங்கை உள்ளூர் கால்பந்து போட்டிகளில் பெரும் இடியாகவே இருந்தது. 2021 ஆம் ஆண்டு ஆரம்பம் மற்றும் நடுப்பகுதி பொது முடக்கத்தில் கழிந்ததால் கால்பந்து போட்டிகள் மாத்திரமல்ல எந்த ஒரு விளையாட்டும் இடம்பெறவில்லை.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சுப்பர் லீக் கால்பந்து போட்டிகளையும் தொடர்ச்சியாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தொடர் பல முறை ஒத்திவைக்கப்பட்டு கடைசியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. என்றாலும் இடையில் வந்த முடக்க நிலை மற்றும் சர்வதேச போட்டி அட்டவணையால் இந்தத் தொடர் இன்னும் இழுபறியோடு நீடித்து வருகிறது.

இந்த போட்டியில் வெல்லும் அணியே ஆசிய கால்பந்து சம்மேளன கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்கு தேர்வாகும் என்பதால் இந்தத் தொடர் முக்கியமானதாக உள்ளது.

மெஸ்ஸி, ரொனால்டோவின் மாற்றம்

மெஸ்ஸிக்கு தற்போது 34 வயதாவதோடு ரொனால்டோவுக்கு 36 வயதாகிறது. உலகின் மிகச் சிறந்த கால்பந்து வீரர்களான இந்த இருவரும் தனது கால்பந்து வாழ்வின் இறுதிக் காலத்தை நெருங்கியுள்ளனர்.

அதற்கு ஏற்ப இருவரினதும் வாழ்வில் திருப்புமுனைகள் நிகழ்ந்த ஆண்டாக 2021ஐ குறிப்பிடலாம். மெஸ்ஸி தனது ஆரம்ப கால கழகமான பார்சிலோனாவை விட்டு விலகி கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி பரிஸ் செயின்ட் ஜெர்மைனில் சேர்ந்தார். மூன்று வாரங்கள் கழித்து ரொனால்டோ அதிர்ச்சி முடிவாக தனது பழைய கழகமான மன்செஸ்டர் யுனைடெட்டில் இணைந்து கொண்டார்.

என்றாலும் இந்த இருவரும் தனது முந்திய கழகங்களான பார்சிலோனா மற்றும் ஜுவான்டஸ் அணிகளுக்கு இந்த பருவத்தில் அதிக கோல்கள் பெற்றவர்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது இருவரது செல்வாக்கை காட்டுவதாக இருக்கிறது.

குறிப்பாக மெஸ்ஸிக்கு 2021 ஆம் ஆண்டு சிறப்பு மிக்க ஆண்டாக இருந்தது. இதில் தனது நாட்டுக்காக கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்று கொடுத்தது அவரது கனவு நிறைவேறிய ஒன்றாக இருந்தது.

கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் பிரேசிலை ஆர்ஜன்டீனா வீழ்த்தி கிண்ணத்தை வென்றது. இதில் தொடரின் சிறந்த வீரர் மற்றும் அதிக கோல் பெற்றவராக மெஸ்ஸி விருது வென்றார்.

பார்சிலோனா அணிக்காக கோப்பா டெல் ரே கிண்ணத்தையும் இந்த ஆண்டில் வெல்லதற்கு மெஸ்ஸியால் முடிந்தது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் அட்லடிகோ பில்போ அணியை எதிர்கொண்ட பார்சிலோனா 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது. இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை பெற்ற மெஸ்ஸி சிறந்த வீரராகவும் தெரிவானார்.

எல்லாவற்றுக்கும் மேல் ஆண்டின் சிறந்த வீரருக்கான பலோன் டி ஓர் விருதை மெஸ்ஸி 2021ஆம் ஆண்டிலும் வென்றார். இந்த விருதை அவர் சாதனை எண்ணிக்கையாக ஏழாவது முறையாக வென்றார்.

எனவே, வயதானபோதும் இன்னும் காலாவதியாகவில்லை என்பதை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் 2021 இலும் நிரூபித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடலாம்.

யூரோ கிண்ணம்  

சர்வதேச கால்பந்து உலகில் உலகக் கிண்ண போட்டிக்கு மாத்திரமே இரண்டாவதாக இருக்கும் யூரோ 2020 தொடர் ஜூன், ஜூலை மாதங்களில் ஐரோப்பாவின் 11 நாடுகளைச் சேர்ந்த நகரங்களில் நடைபெற்றன. உண்மையில் 2020 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய இந்த தொடரையும், எல்லாவற்றையும் போல் கொரோனா தொற்றினால் ஓர் ஆண்டு கழித்து நடத்த வேண்டியதாயிற்று. 2016 பிரான்ஸில் நடந்த போட்டியை வென்ற நடப்புச் சம்பியனான ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி 16 அணிகள் சுற்றுலேயே வெளியேறியது.

ஜூலை 11ஆம் திகதி லண்டனின் வெம்ப்லி அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இத்தாலி அணி பெனால்டி சூட் அவுட் முறையில் இங்கிலாந்தை 3-2 என வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்றது.

கழக மட்ட கால்பந்து

2020/21 பருவத்தின் இங்கிலாந்து பிரீமியர் லீக்கை பொறுத்தவரை மன்செஸ்டர் சிட்டி ஐந்தாவது முறை சம்பியன் பட்டத்தை வென்றதோடு, ஸ்பெயினின் லா லிகாவில் அட்லடிகோ மெட்ரிட் பதினொராவது முறை சம்பியனானது. ஜெர்மனியின் புன்டஸ்லிகாவில் நடப்புச் சம்பியன் பெயர்ன் முனிச் தனது பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.

இத்தாலி சீரி ஏ லீக்கில் இன்டர்நெசனல் அணி முதல் முறை சம்பியனானதோடு பிரான்ஸின் லீக் 1 தொடரில் கடந்த மூன்று பருவங்களாக சம்பியனான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியை பின்தள்ள லில்லி அணி நான்காவது தடவையாக சம்பியனானது.

கொவிட்-19 இழுபறிகளுடன் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரில் ஏப்ரல் 7 மற்றும் 13 ஆம் திகதிகளில் நடைபெற்ற PSG அணியுடனான இரண்டு சுற்று காலிறுதிகளில் தோற்ற நடப்புச் சம்பியன் பெயார்ன் முனிச் வெளியேறியது.

இந்நிலையில் 2021 மே 29ஆம் திகதி போர்த்துகலின் போர்டோ நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரு இங்கிலாந்து கழகங்கள் மோதின. பிரீமியர் லீக் சம்பியன் மன்செஸ்டர் சிட்டி மற்றும் செல்சி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கை ஹெர்வெட்ஸ் 42 ஆவது நிமிடத்தில் போட்ட கோல் மூலம் செல்சி வெற்றியீட்டியது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் பிராந்திய சம்பியன்களான கழகங்களுக்கு இடையிலான கழக மட்ட உலகக் கிண்ணப் போட்டி பெப்ரவரி 4 – 11 ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெற்றது. ஐரோப்பிய சம்பியனான பயேர்ன் முனிச் மற்றும் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்திய சம்பியனான மெக்சிகோவின் டைகர்ஸ் UANL அணிகளுக்கு இடையே நடந்த இறுதிப் போட்டியில் பவார்டின் கோல் மூலம் பெயர்ன் முனிச் 1-0 என வென்று கிண்ணத்தை முத்தமிட்டது.

2022ஆம் ஆண்டு கால்பந்து உலகின் முக்கியமான ஆண்டாக இருக்கப்போகிறது. அந்த ஆண்டில் தான் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில் நடைபெறப்போகிறது. 32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கொவிட்-19 இழுபறியுடன் நடைபெற்று வரும் இந்தத் தகுதிகாண் போட்டிகள் 2022 ஆம் ஆண்டிலும் தொடரப்போகிறது.

கொரோனா தொற்றும் இன்னும் முடிந்தபாடில்லை. நாளுக்கு நாள் பிறழ்வுகளுடன் தன்னை புதுப்பித்து வரும் கொவிட்-19 தொற்றுக்கு மத்தியிலேயே அடுத்த ஆண்டிலும் கால்பந்து போட்டிகள் தொடரப்போகின்றன.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<