இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) துணைத் தலைவர்களில் ஒருவராக செயற்பட்டு வந்த NT. பாரூக் அவர்கள் தீடிரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக திங்கட்கிழமை (18) காலை தனது 60ஆவது வயதில் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.
Video – EURO கிண்ணம் பற்றி நீங்கள் அறியாதவை !
2020 யூரோ கிண்ண போட்டிகளுக்காக …..
தனது ஆரம்ப கட்ட கால்பந்தை அக்கரைப்பற்று இளைஞர் விளையாட்டுக் கழகத்துடன் ஆரம்பித்த பாரூக், ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி, தேசிய மட்டத்திலும் முன்னணி கோல் காப்பாளராக திகழ்ந்தார். இன்னும் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் கால்பந்து போட்டிகளுக்கான தேசிய நடுவராகவும் இவர் கடமையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரூக் அவர்கள் அக்கரைப்பற்று, ஓட்டமாவடி மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றின் கால்பந்து லீக்குகள் உருவாக முக்கிய பங்களிப்புச் செய்தவராக இருக்கின்றார். அதேபோன்று அக்கரைப்பற்று, காத்தாங்குடி மற்றும் மட்டக்களப்பு ஆகிய லீக்குகளின் தலைவர் மற்றும் செயலாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
இலங்கை கால்பந்து விளையாட்டு இனம் கண்ட மிகச்சிறந்த கோல்காப்பாளர்களில் ஒருவரான NT. பாரூக், கிழக்கு மாகாணத்தில் கால்பந்து விளையாட்டு விருத்தியடைய பல்வேறு வகைகளிலும் தொண்டாற்றிய முக்கிய நபராக இருந்துள்ளார்.
தான் மரணமடையும் வரையில் காத்தான்குடி கால்பந்து லீக்கின் தலைவராகவும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் செயற்பட்டு வந்த பாரூக் அவர்கள் தனது வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளாமல் தனது மொத்த வாழ்க்கையினையும் கால்பந்து விளையாட்டிற்காகவும், அதன் வளர்ச்சிக்காவும் அர்ப்பணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பாரூக் அவர்களின் ஜனாசா (பூதவுடல்) அவரது சொந்த ஊரான அக்கரைப்பற்றில் உள்ள முஸ்லிம் மையவாடியில் (மயானத்தில்) செவ்வாய்க்கிழமை (19) காலை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறாக கால்பந்து விளையாட்டிற்கு அரும் சேவைகளை ஆற்றிய பரூக் அவர்களின் இழப்பு இலங்கை கால்பந்திற்கு பாரிய பின்னடைவாகும். பாரூக் அவர்களின் இழப்பிற்கு ThePapare.com உம் தனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றது.
>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<