உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமவாதற்கு இன்னும் 2 மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக பிலோய்ட் ரீபர் (Floyd Reifer) செயற்படுவார் என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் டேவ் கெமரூனை வீழ்த்தி ரிக்கி ஸ்கெரீட் புதிய தலைவராகத் தெரிவானார். இவரது தலைமையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையில் முக்கிய சில மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஐ.பி.எல். நட்சத்திரங்களின்றி முக்கோண ஒருநாள் தொடரில் பங்கெடுக்கும் மேற்கிந்திய தீவுகள்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக…
இதன் ஓரு பகுதியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த ரிச்சர்ட் பைபஸை அந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான பிலோய்ட் ரீபரை உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துன்ளது.
அத்துடன், அந்நாட்டு தேர்வுக் குழு முழுமையாக கலைக்கப்பட்டு அதன் தலைவராக இருந்த கோர்ட்னி பிரவுனுக்குப் பதிலாக ரொபர்ட் ஹெய்ன்ஸ் தேர்வுக் குழுவின் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்த ஸ்டுவர்ட் லோ தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் பிரிவின் பணிப்பாளராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த ரிச்சர்ட் பைபஸ் அந்த அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இவரது பயிற்றுவிப்பின் கீழ் மேற்கிந்திய தீவுகள் அணி தமது சொந்த மண்ணில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. எனினும், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டித் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டிருந்த 46 வயதான முன்னாள் வீரரான பிலோய்ட் ரீபர், எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு அந்த அணியின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு முதல் மேற்கிந்திய திவுகளின் உள்ளூர் போட்டிகளில் முன்னணி பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த ரீபர், அந்த வருடம் மேற்கிந்திய A அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான தொடரை கைப்பற்றியதுடன், அதே வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான டி-20 தொடரில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு டி-20 தொடரை வென்று கொடுக்கவும் முக்கிய காரணமாக இருந்தார்.
1997ஆம் ஆண்டு இலங்கை அணிக்கெதிராக சென். ஜோன்ஸில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பிலோய்ட் ரீபர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடிய அவர், 8 ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி-20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். அத்துடன், மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டமை குறித்து பிலோய்ட் ரீபர் கருத்து வெளியிடுகையில், ”இந்தப் பதவி எனக்கு கிடைத்தமை மிகப் பெரிய பாக்கியம் எனது கருதுகிறேன். கரீபியன் தீவுகள் மற்றும் உலகம் பூராகவும் உள்ள எமது ரசிகர்களுக்கு மீண்டும் பெருமையைப் பெற்றுக்கொடுக்க விரும்புகிறேன் என தெரிவித்த அவர், நாங்கள் போட்டியிட வரவில்லை மாறாக வெற்றிபெற வந்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
ThePapare.com இன் உலகக் கிண்ண உத்தேச இலங்கை அணி
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள…
இதேவேளை, இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக பிலோய்ட் ரீபர் நியமிக்கப்பட்டது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் ரிக்கி ஸ்கெரீட் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளில் உள்ள பயிற்றுவிப்பாளர்களுக்கு சர்வதேச அளவில் அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதன் ஓர் அங்கமாகவே பிலோய்ட் ரீபரை இடைக்காலப் பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, தமது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<