மேஜர் லீக் மூன்று நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பம்

SLC Major Clubs 3-Day Tournament 2024/25

68
SLC Major Clubs 3-Day Tournament 2024/25

இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் பங்குபற்றுகின்ற மேஜர் லீக் மூன்று நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 18 கழகங்கள் A மற்றும் B என 2 குழுக்களின் கீழ் விளையாடவுள்ளன.

இதன்படி, ‘A’ குழுவில் பொலிஸ், ஏஸ் கெப்பிட்டல், கோல்ட்ஸ், புளூம்பீல்ட், ராகம, நீர்கொழும்பு, பதுரலிய, சிலாபம் மேரியன்ஸ் மற்றும் பாணந்துறை ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ‘B’ குழுவில் SSC, NCC, தமிழ் யூனியன், முவர்ஸ், BRC, கண்டி சுங்கம், நுகேகொட மற்றும் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.

இம்முறை போட்டித் தொடரின் முதல் சுற்று அடுத்த ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இறுதிப் போட்டி பெப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை நான்கு நாள் போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த வருடம் முடிவடைந்த இப்போட்டியின் இறுதிப் போட்டிகள் மழை காரணமாக சமநிலையில் முடிவடைந்ததால், SSC மற்றும் பொலிஸ் அணிகள் இணைச் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டன.

இதேவேளை, மேஜர் லீக் மூன்று நாள் கிரிக்கெட் தொடரின் முதல் நாளான இன்று 8 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பாணந்துறை – பொலிஸ் கழகங்களுக்கிடையிலான போட்டி பாணந்துறையிலும், ஏஸ் கெப்பிடல்ஸ் – பதுரெலிய கழகங்களுக்கிடையிலான போட்டி CCC மைதானத்திலும், நீர்கொழும்பு – கோல்ட்ஸ் கழகங்களுக்கிடையிலான போட்டி கட்டுநாயக்கவிலும், ராகம – புளூம்பீல்ட் கழகங்களுக்கிடையிலான போட்டி மக்கொனவிலும், SSC – குருநாகல் இளையோர் கழகங்களுக்கிடையிலான போட்டி SSC மைதானத்திலும், கண்டி சுங்கம் – NCC கழகங்களுக்கிடையிலான போட்டி தர்ஸ்டன் கல்லூரி மைதானத்திலும், தமிழ் யூனியன் – CCC கழகங்களுக்கிடையிலான போட்டி பி சரா ஓவல் மைதானத்திலும், முவர்ஸ் – BRC கழகங்களுக்கிடையிலான போட்டி BRC கழக மைதானத்திலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<