இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து ஐந்து வீரர்கள் விடுவிப்பு

West Indies tour of Sri Lanka 2021

3086

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தற்போது நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பெற்றிருந்த ஐந்து வீரர்களை உயிரியல் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்க இலங்கை கிரிக்கெட் தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, துஷ்மந்த சமீர, அசித பெர்னாண்டோ, கமில் மிஷார, சுமிந்த லக்ஷான் மற்றும் ரொஷேன் சில்வா ஆகிய வீரர்களே இவ்வாறு இலங்கை டெஸ்ட் குழாத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு ஓய்வளிக்க தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

WATCH – முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற அணியில் மாற்றங்கள் வேண்டுமா?

கடந்த ஜுன் மாதம் முதல் தொடர்ச்சியாக இலங்கை அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடி வருகின்ற காரணத்தால் அவருடைய வேலைப்பளுவைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோர்பரஸ் – திசேரா கிண்ணத்துக்காக நடைபெற்று வருகின்ற இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் போட்டி நாளை (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியளர் மிக்கி ஆர்தர் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<