சர்வதேச கிரிக்கெட்டில் பிரம்மிக்க வைக்கும் பல சாதனைகளை நாம் கண்டிருக்கிறோம். ஒவ்வொரு சாதனையும் ஒவ்வொரு வீரரதும் எதிர்காலத்தை புரட்டிப்போட்டிருக்கிறது.
உதாரணத்துக்கு பல வீரர்களை கூறலாம். ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் தொடக்கம் நேபாள வீரர் சந்தீப் லமைச்சேன உட்பட கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியிருக்காத நாடுகளில் இருந்துக்கூட வியக்கவைக்கும் திறமையான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை ஆக்கிரமித்துவருகின்றனர்.
யூரோ T20 ஸ்லேம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு
இதுவொரு சிறிய உதாரணமாக இருந்தாலும், இதற்கு மேல் பல திறமைவாய்ந்த வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை பிரமிக்க வைத்திருக்கின்றனர். இன்னும் கிரிக்கெட் உலகை பிரமிக்கவைத்துக்கொண்டும் இருக்கின்றனர். இந்தப்பட்டியில் நீண்டுக்கொண்டே போகலாம்.
இப்படி சாதனைகளுக்கு மேல் சாதனைகள் புரிந்து தங்களுடைய பெயர்களை நிலைநாட்டியுள்ள வீரர்கள் மத்தியில், மோசமான சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெயரையும் சில வீரர்கள் வாங்கியுள்ளனர். மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்கள் என்பதால், இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக மோசமான வீரர்கள் என குறிப்பிட்டுவிட முடியாது.
அன்றைய ஒரு தினம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான தினமாக மாறியதால், முன்னணி வீரர்களும் மோசமான வீரர்களாக மாறியிருக்கிறார்கள். அப்படி மோசமான சாதனைகளின் பட்டியல் ஒன்றையே நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் என்னதான் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை எஎடுத்து சாதனை படைத்தாலும், இந்தப் பட்டியலில் இடம்பிடிக்கப்போவது ஒருநாள் போட்டிகளில் அதிகமான ஓட்டங்களை வாரி எதிரணிக்கு வழங்கிய ஐந்து வீரர்கள்தான். அந்தவரிசை இதோ!
- நுவன் பிரதீப் (இலங்கை எதிர் இந்தியா 2017 – மொஹாலி)
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான மறக்கமுடியாத ஒருநாள் போட்டிகளில் இந்த போட்டியும் ஒன்று. காரணம் இலங்கை அணிக்கு எதிராக 264 ஓட்டங்களை விளாசியிருந்த ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் தன்னுடைய மூன்றாவது இரட்டைச்சதத்தை பெற்றுக்கொண்டார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 392 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 141 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்தது.
ரோஹித் சர்மா இரட்டைச் சதம் விளாச, சிக்கர் தவானும், ஸ்ரேயாஷ் ஐயரும் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்திருந்தனர். இதில், பந்துவீசிய நுவான் பிரதீப் தன்னுடைய 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். இவர் வழங்கிய இந்த ஓட்ட எண்ணிக்கை, ஒருநாள் கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிக ஓட்ட எண்ணிக்கையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.
- புவ்னேஷ்வர் குமார் (இந்தியா எதிர் தென்னாபிரிக்கா 2015 – மும்பை)
இந்தியாவில் வைத்து இந்திய அணி பெற்ற மோசமான தோல்விகளில் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு, தென்னாபிரிக்க அணி வழங்கிய தோல்வி. மும்பை மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த தென்னாபிரிக்க அணி, இந்தியாவுக்கு எதிராக 438 என்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்தது.
போட்டியில் குயிண்டன் டி கொக், பெப் டு ப்ளெசிஸ், ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் சதமடிக்க, இந்திய அணி வெறும் 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.
இதில், அதிக ஓட்டங்களை எதிரணிக்கு வழங்கியவராக புவ்னேஷ்வர் குமார் மாறியிருந்தார். இவர், தன்னுடைய 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ரஷீட் கான் (ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து 2019 – மென்செஸ்டர்)
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில், ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட போது, இயன் மோர்கன், முன்னணி வீரர்களும் தடுமாறிவந்த ரஷீட் கானின் பந்துவீச்சை எதிர்த்து அபாரமாக ஓட்டங்களை குவித்திருந்தார்.
40 வீரர்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 397 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில், தனியாளாக அபாரமாக ஓட்டங்களை குவித்திருந்த இயன் மோர்கன் வெறும் 71 பந்துகளில் 148 ஓட்டங்களை குவித்திருந்தார்.
ரஷீட் கான் தன்னுடைய 9 ஓவர்களில் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார். அதிலும், ரஷீட் கானுக்கு ஒரு ஓவர் மீதமிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- வஹாப் ரியாஸ் (பாகிஸ்தான் எதிர் இங்கிலாந்து 2016 – நோட்டிங்கம்)
நோட்டிங்கமில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணியின் வஹாப் ரியாஸ் 10 ஓவர்களில் 110 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 444 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தது. இதில், அலெக்ஸ் ஹேல்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 171 ஓட்டங்களை குவித்திருந்தார்.
இவரின் அபார துடுப்பாட்டத்தின் காரணமாக வஹாப் ரியாஸ் இந்த மோசமான சாதனையை தன்வசப்படுத்திக்கொண்டதுடன், போட்டியில் பாகிஸ்தான் அணி 169 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்திருந்தது.
- மைக் லிவிஸ் (அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 2006 – ஜொஹன்னஸ்பேர்க்)
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் என்றும் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி அமைந்திருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 434 ஓட்டங்களை விளாசியிருந்த நிலையில், இந்த ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்த தென்னாபிரிக்க அணி, ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய இலக்கை எட்டிய சாதனையை தன்வசப்படுத்தியது.
பொன்டிங் விளாசிய 164 என்ற ஓட்ட எண்ணிக்கையை வீணாக்கிய ஹேர்ஷல் கிப்ஸ் 175 ஓட்டங்களை விளாசி தென்னாபிரிக்க அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுக்கொடுக்க காரணமாகியிருந்தார்.
இதில், அவுஸ்திரேலிய அணிசார்பில் பந்துவீசிய மைக் லிவிஸ், அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இவர் தன்னுடைய 10 ஓவர்களில் 113 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.
இவர் விட்டுக்கொடுத்த இந்த ஓட்ட எண்ணிக்கையானது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில், ஒரு பந்துவீச்சாளர் விட்டுக்கொடுத்த அதிகூடிய ஓட்டங்களாக மாறியதுடன், இன்றுவரை இந்த மோசமான சாதனையை மைக் லிவிஸ் சுமந்துக்கொண்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வாறு மோசமான சாதனையை இந்த வீரர்கள் படைத்திருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டில் அச்சுறுத்தலான வீரர்களாகவும் இவர்கள் வளம்வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய அணிகள் முக்கியமான வெற்றிகளை பெறுவதற்கும் காரணமாக இருந்துள்ளனர். எனவே, எத்தகையை கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும், அன்றைய நாளே அவர்களின் நாளை தீர்மானிக்கிறது என்பது இவர்களின் இந்த சாதனையிலிருந்து தெளிவாக காணமுடிகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<