ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் போட்டித் தடைக்குள்ளாகி நாடு திரும்பிய இலங்கை அணியின் மூன்று வீரர்களையும் விசாரணை செய்வதற்கு ஐந்து பேர் கொண்ட ஒழுக்காற்றுக் குழுவொன்று இலங்கை கிரிக்கெட் சபையினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வீரர்கள் மூவரும் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த பிறகு இந்தக் குழுவின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்ட குசல் மெண்டிஸ், டிக்வெல்ல, குணத்திலக்க
இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.
இந்த நிலையில், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூன்று வீரர்களும் கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு வலய விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி கடந்த 28ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், கடந்த 30ஆம் திகதி நாடு திரும்பிய குறித்த 3 வீரர்களும் நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதுஇவ்வாறிருக்க, தனிமைப்படுத்தல் காலத்தினைப் பூர்த்தி செய்த பிறகு குறித்த வீரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை இலங்கை கிரிக்கெட் சபை முன்னெடுக்கவுள்ளதுடன், இதற்கு அஜித் வீரசிங்க தலைமையில் ஒழுக்காற்று குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளர்.
இதன்படி, குறித்த குழுவில் நிரோஷன் பெரேரா, நலிந்த இளங்ககோன், அனுர சந்திரசிறி மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர் லத்தீப் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
எனவே, குறித்த மூன்று கிரிக்கெட் வீரர்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் ஐந்து பேர் கொண்ட ஒழுக்காற்றுக் குழுவினர் முன்னிலையில் விசாரணைகளை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதுஎவ்வாறாயினும், குறித்த வீரர்கள் மூவருக்கும் ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…