தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலியினால் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திலிருந்து விலகியிருந்த இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், கடந்த சில வாரங்களாக உபாதைக்காக முன்னெடுத்து வருகின்ற சிகிச்சைகள் பாதியளவு பூர்த்தி அடைந்துள்ளதால், எதிர்ரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு T-20 தொடரில் களமிறங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[rev_slider LOLC]
நீண்ட காலமாக தசைப்பிடிப்பு, கெண்டைக்கால் மற்றும் கணுக்கால் காயங்களுக்கு முகம்கொடுத்து வருகின்ற அஞ்செலோ மெதிவ்ஸ், கடந்த வருடத்தில் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை.
பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை T-20 குழாம் அறிவிப்பு
பங்களாதேஷ் அணிக்கெதிரான 2 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 …
இந்நிலையில், கடந்த வருடம் நடைபெற்ற ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் தொடரில் இலங்கை அணி படுதோல்வியை தழுவியதை அடுத்து மெதிவ்ஸ் தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். எனினும், சந்திக ஹத்துருசிங்க இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் தலைமைப் பதவியை பொறுப்பேற்க முன்வந்த மெதிவ்ஸ், 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான அணித் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து கடந்த மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேயுடனான போட்டியில் துடுப்பெடுத்தாடும்போது மெதிவ்ஸின் தொடைப் பகுதியில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதனால் எஞ்சிய போட்டிகளிலிருந்து மெதிவ்ஸ் விலகிக் கொண்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக நாடு திரும்பினார்.
தற்போது உபாதையிலிருந்து குணமடைந்துள்ள மெதிவ்ஸ், அடுத்த மாதம் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் தான் பங்கேற்க தயாராக இருப்பதாக இந்தியாவின் க்ரிக்பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
‘இலங்கையின் கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டித் தொடரை காண எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எல்லா வீரர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இத்தொடர் முழுவதும் இந்திய அணி மிகப் பெரிய சவாலைக் கொடுப்பார்கள். அதேபோல பங்களாதேஷ் அணியும் கடந்த சில வருடங்களாக முன்னேற்றம் கண்டு வருகின்ற அணியாக இருப்பதால் இப்போட்டித் தொடர் சவால்மிக்கதாக இருக்கும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
பங்களாதேஷுக்கு எதிரான T-20 தொடரில் மெதிவ்ஸின் தலைமைப் பதவி சந்திமாலுக்கு
தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்டிருக்கும் வலி முழுமையாக குணமடையாத காரணத்தினால் …
‘எனக்கு ஏற்படுகின்ற தொடர் காயங்களினால் நாங்கள் எமது திட்டங்களை மாற்றியுள்ளோம். குறிப்பாக பேராசிரியர் அர்ஜுன டி சில்வா மற்றும் மருத்துவ நிபுணர் வைத்தியர் தமிந்து வேதாதிலக்க ஆகியோர் மருத்துவ ரீதியில் பார்த்துக் கொள்வதைக் காட்டிலும் ஸ்கேன்களைக் கவனிப்பதை வலியுறுத்தியுள்ளனர். கடந்த காலங்களில், உபாதை முழுமையாக குணமடைவதற்கு முன்பே நான் மீண்டும் விளையாடத் தொடங்கி விடுவேன். ஆனால் தற்போது எனது நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அது நடக்கும் வரை நான் மீண்டும் விளையாட மாட்டேன். எனினும், முழுமையாக அதை சரிசெய்வதற்கான முயற்சியில் நான் களமிறங்கியுள்ளேன். இப்போதைக்கு நான் ஓட்டப் பயிற்சி மற்றும் மேலதிக உடற்பயிற்சிகளை மாத்திரம் மேற்கொண்டு வருகின்றேன். அதுமாத்திரமின்றி நான் அடிக்கடி உபாதைக்குள்ளாவது, என்னைப் பொறுத்தவரையில் அணிக்கு மிகப் பெரிய இழப்பாகவே அமைந்துள்ளது.
இதன்காரணமாக எனது பயிற்சி முறைகளிலும் ஒருசில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளேன். இதனால் காயத்தை குறைக்க மட்டுமே முடியும். ஆனால், எதிர்பார்த்தவை எல்லாம் அவ்வாறே நடக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. எனினும், உபாதைகள் இல்லாமல் தொடர்ந்து விளையாடுவதற்கு உடல் ரதீயாக பயிற்சிகளையும், முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், அண்மைக்காலமாக ஒரு துடுப்பாட்ட வீரராக பிராகாசிப்பதில் அஞ்செலோ மெதிவ்ஸ் தொடர்ந்து சிரமப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் அணியின் சமபலத்துக்காக மெதிவ்ஸ் பந்துவீச்சிலும் ஈடுபட வேண்டும் என அணி முகாமைத்துவம் எதிர்பார்க்கின்றது.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட மெதிவ்ஸ், ”மருத்துவர்களின் ஆலோசனைக்கு அமையவே இதுதொடர்பில் தீர்மானிக்கப்படும். முதல் விடயம், நான் முழுமையாக உபாதையிலிருந்து குணமடைய வேண்டும். அதைவிடுத்து அவசரப்படுவதில் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. நான் பந்துவீசுவதற்கு தயாராக இருந்தாலும், உபாதையிலிருந்து முழுமையாக குணமடையும் வரை துடுப்பாட்ட வீரராக களமிறங்குவதற்கு எதிர்பார்த்திருக்கின்றேன்” என்றும் மெதிவ்ஸ் இதன்போது தெரிவித்தார்.