சிரேஷ்ட, கனிஷ்ட மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் நாளை மறுதினம்

288

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றை இலக்காகக் கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டின் முதலாவது தேசிய மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

இந்த தகுதிகாண் போட்டிகளின் முதலாவது நாளான 10 ஆம் திகதி கனிஷ்ட மற்றும் தேசிய வீரர்களுக்கான 100 மீட்டர், 400 மீட்டர் மற்றும் ஆண்களுக்கான 1500 மீட்டர், கோலூன்றிப் பாய்தல் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

அதேபோன்று, 11 ஆம் திகதி 200 மீட்டர், 800 மீட்டர், 4×100 மற்றும் 4×400 அஞ்சலோட்டம் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளும், போட்டிகளின் இறுதி நாளான 12 ஆம் திகதி கனிஷ்ட மற்றும் தேசிய வீரர்களுக்கான நீளம் பாய்தல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகளின் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் மட்டுப்படுத்தப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் இந்த தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனிடையே, ஆசிய விளையாட்டு விழா மற்றும் ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான இரண்டாவது கட்ட தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

20 ஆவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஜுன் மாதம் 16 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை தென் கொரியாவிலும், 19 ஆவது ஆசிய விளையாட்டு விழா செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை சீனாவிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<