கொரோனா வைரஸுக்கு ஆளாகி முதல் சுமோ மல்யுத்த வீரர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் சுமோ சம்மேளனம் அறிவித்துள்ளது.
ஜப்பானின் பாரம்பரிய மல்யுத்த விளையாட்டான சுமோ, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் கியொடக்கா சுஎடெக்கி என்ற 28 வயதான சுமோ வீரர் உயிரிழந்துள்ளார். இவர் ஷெர்பஷி என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்
சுமோ விளையாட்டில் மூன்றாம் நிலை வீரரான இவருக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் ஆரம்பித்துள்ளன. பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
வளர்ந்துவரும் இளம் மல்யுத்த வீரர் ஒருவர் கொரோனா வைரஸினால் பலியாகி இருப்பது ஜப்பானில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜப்பானில் உள்ள சுமோ வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஐந்து வீரர்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.
பங்களாதேஷ் பயிற்சியாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று
முன்னதாக கடந்த மார்ச் மாதம் கோடைக்கால சுமோ சம்பியன்ஷிப் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர் இன்றி ஒசாகாவில் நடைபெற்றது.
அடுத்ததாக மே மாதம் 24 முதல் ஜூன் 7 வரை ஜப்பானின் தேசிய சுமோ தொடர் நடப்பதாக இருந்தது. தற்போது ஜப்பானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த தொடரை ஜப்பான் சுமோ அமைப்பு ரத்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 657 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<