இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் பிரதான உள்ளூர் கழகங்கள் இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மேஜர் கழக (Women’s Invitational Major Club) ஒருநாள் மகளிர் தொடரில் விளையாடிய மன்னார் மாவட்டத்தின் சஜிந்தினி சதீஷ்குமார், மன்னார் மாவட்டத்தில் இருந்து கழக கிரிக்கெட் தொடரில் ஆடிய முதல் வீராங்கனையாக புதிய வரலாறு படைத்திருக்கின்றார்.
>> உலகக் கிண்ணத்திற்கான ICC அணியில் இலங்கை வீரர்
மேஜர் கழக தொடரில் நேற்று (20) கொழும்பு SSC மைதானத்தில் பதுரெலிய கிரிக்கெட் கழகம் மற்றும் SSC அணிகள் இடையிலான போட்டி நடைபெற்றிருந்தது. இந்தப் போட்டியில் SSC மகளிர் அணியை பிரதிநிதிப்படுத்தியிருந்த சஜிந்தினி சதீஷ்குமார், இதன் மூலமே மன்னார் மாவட்டத்தினை பிரதிநிதித்துவம் செய்து இலங்கையின் முன்னணி கிரிக்கெட் கழகங்களில் ஒன்றுக்காக விளையாடி தனது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது அறிமுக போட்டியில் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான சஜிந்தினி 4 ஓவர்கள் பந்துவீசியிருந்ததோடு, விக்கெட் ஒன்றிணையும் கைப்பற்றியிருந்தார். அத்துடன் SSC அணி குறிப்பிட்ட போட்டியில் 7 விக்கெட்டுக்களால் வெற்றியினையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
SSC அணியில் மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த மற்றுமொரு வீராங்கனையான சலோமியும் இடம்பெற்றிருப்பதோடு, இவர்கள் இருவரும் மன்னார் பேசாலை புனித பெட்டிமா கல்லூரியின் மாணவர்கள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இவர்களோடு மன்னார் மாவட்டத்தின் மற்றுமொரு வீராங்கனையான கீர்த்தனா BRC அணியில் ஆடுவதற்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
செய்தி உதவி – ரவி வர்மன்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<