ஒலிம்பிக்கில் களமிறங்கும் இலங்கையின் முதல் பெண் நடுவர்

Tokyo Olympic - 2020

296

இலங்கையின் விளையாட்டுத்துறை வரலாற்றில் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியின் பெண் நடுவராக இலங்கையைச் சேர்ந்த டி.நெல்கா ஷிரோமலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள 2020 ஒலிம்பிக் போட்டிகளின் குத்துச்சண்டை போட்டிக்கு இலங்கை பொலிஸின் தலைமை ஆய்வாளர் டி.நெல்கா ஷிரோமலா நடுவராக செயல்படவுள்ளார்.

காலி, ரிபன் மகளிர் வித்தியாலயத்தில் கல்வி பயின்றுள்ள ஷிரோமலா, 1997ஆம் ஆண்டு பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளதுடன், பொலிஸ் கழகம் சார்பில் 2001ஆம் ஆண்டு முதல் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றவராவார்.

ஒலிம்பிக் கிராமத்தில் 2 கால்பந்து வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று

அத்துடன், தலைமை ஆய்வாளர் ஷிரோமலா சர்வதேச அளவில் பல குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கை பொலிஸைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

இலங்கையில் 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பெண்களுக்கான முதலாவது குத்துச்சண்டைப் போட்டியில் பெண்கள் அணியில் ஷிரோமலா  இடம்பெற்றிருந்தார்.

இலங்கையில் நடைபெறுகின்ற முன்னணி குத்துச்சண்டை தொடரான நோவீஸ் குத்துச்சண்டைப் போட்டியில் முதன்முதலாக வெற்றியீட்டிய ஷிரோமலா, 2001 முதல் 2006 வரை தேசிய குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில், 2009ஆம் ஆண்டில் உள்ளூர் குத்துச்சண்டைப் போட்டிகளின் நடுவராக செயல்பட்ட ஷிரோமலா, 2011ஆம் ஆணடு இந்தோனேசிய ஜனாதிபதி கிண்ண குத்துச்சண்டைப் போட்டியில் பெண் நடுவராகச் செயல்பட்ட முதல் இலங்கையராக அறிமுகமானார்.

ஒலிம்பிக் போட்டிக்குச் சென்ற உகண்டா நாட்டு வீரர் மாயம்

அதனையடுத்து, 2011இல் நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 2 நட்சத்திர சர்வதேச குத்துச்சண்டை நடுவராக ஷிரோமலா பதவி உயர்வு பெற்றார்.

இதன்பின்னர் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 3 நட்சத்திர முதல் பெண் நடுவர் என்ற பெருமையையும் டி.நெல்கா ஷிரோமலாவுக்குக் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து 2017ஆம் ஆண்டில், ஆசியாவின் சிறந்த குத்துச்சண்டை நடுவராக ஷிரோமலாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் நடுவராக செயல்பட்ட முதலாவது பெண் இலங்கையர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஒலிம்பிக் குழு இன்று டோக்கியோ புறப்படுகிறது

இந்த நிலையிலேயே தற்போது டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குத்துச்சண்டை நடுவராகவும், தீர்மானிப்பாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி.நெல்கா ஷிரோமலா, மறைந்த கடற்படை குத்துச்சண்டை சம்பியன் தம்பு சம்பத்தின் மகள் ஆவார்.

கடந்த மாதம் பரிஸில் நடைபெற்ற ஐரோப்பிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் இவர் நடுவராக செயல்பட்ட போது அவரது தந்தை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<