இந்திய கிரிக்கெட் அணியின் முதல் குழு ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இன்று செவ்வாய்க்கிழமை (23) இங்கிலாந்து பயணமாகவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
LPL தொடருக்காக நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வீரர்களின் விபரம் வெளியானது
சுமார் 20 அங்கத்துவர்களை கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் குழுவில் அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் மற்றும் அணி ஆதரவு உறுப்பினர்கள் என முக்கியமானோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதேவேளை, இம்மாதம் 30ஆம் திகதி இந்த ஆண்டுக்கான IPL தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளதோடு, இறுதிப் போட்டியின் பின்னர் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் இங்கிலாந்தில் ஒன்றிணைவர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி ஜூன் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இன்று இங்கிலாந்து பயணமாகும் இந்திய அணிக் குழுவில் டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்ற ஷர்துல் தாக்கூர், மொஹமட் சிராஜ் மற்றும் அக்ஷார் பட்டேல் ஆகியோர் உள்ளடங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
மறுமுனையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரர் விராட் கோலி, சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் 24ஆம் திகதியின் பின்னர் இந்திய அணியுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, காயத்திற்கான சிகிச்சைகளை பெற்று தேறி வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜய்தேவ் உனட்கட் இம்மாதம் 27ஆம் திகதி இங்கிலாந்து பயணமாகி இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டிருக்க, இந்திய அணியின் மேலதிக வீரர்களாக காணப்படும் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கய்க்வாட் ஆகியோர் தமது அணிகளின் IPL பிளே ஒப் போட்டி முடிவுகளை அடுத்து இந்திய அணியுடன் இணையவிருக்கின்றனர்.
இதேநேரம் இந்திய அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் மோத முன்னர் பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<