இலங்கை மெய்வல்லுனர்களை பயிற்றுவிக்க வரும் பின்லாந்து பயிற்சியாளர்

202
Petteri Piironen

கொவிட் – 19 வைரஸ் காரணமாக 2021இல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தை நெருங்கியுள்ள 8 மெய்வல்லுனர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ தெரிவித்தார்.

>> இலங்கை மெய்வல்லுனர் விளையாட்டுக்கு ஒரு கோடி ரூபா அனுசரணை

இதனிடையே, ஒலிம்பிக் அடைவுமட்டத்தை பூர்த்தி செய்யும் நோக்கில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ப்ரேட் பீரன் என்ற பயிற்சியாளரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அனுசரணை தொடர்பாக ஊடகங்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களின் எதிர்கால திட்டங்கள் குறித்து பாலித்த பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்,

ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்பதற்கு இதுவரை எந்தவொரு மெய்வல்லுனர் வீரர்களும் தகுதி பெறாவிட்டாலும், எட்டு விதமான போட்டிகளில் பங்கேற்கின்ற வீரர்கள் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை நெருங்கியுள்ளனர்

>> தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வீரர்களுக்கு கட்டுப்பாடு

இதில் மரதன், ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்டம், 4X400 கலப்பு அஞ்சலோட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 800 மீற்றர், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல், ஈட்டி எறிதல் மற்றும் பெண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டல் உள்ளிட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள வீரர்களே இவ்வாறு ஒலிம்பிக் அடைவுமட்டத்தினை நெருங்கியுள்ளனர்.  

இதன்படி, ஒலிம்பிக் போட்டிகளுக்கு எமது வீரர்களை தயார்படுத்தும் நோக்கில் எதிர்வரும்க்டோபர் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி கொழும்பு சுகததாச அரங்கில் தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான வீரர்களை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகளை நடத்தவுள்ளோம்

அத்துடன், குறித்த குழாத்தில் வெளிநாடுகளில் தற்போது பயிற்சிகளைப் பெற்று வருகின்ற வீரர்களையும் உள்ளடக்குவதற்கும் அவதானம் செலுத்தியுள்ளோம்

இதுஇவ்வாறிருக்க, ஈட்டி எறிதல் போட்டிகளுக்காக மேலதிக பயிற்சிகளை வழங்கும் நோக்கில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ப்ரேட் பீரன் பயிற்சியாளரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.

>> ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு

முன்னதாக பெண்களுக்கான ஈட்டி எறிதலில் நடப்புச் சம்பியனான நதீகா லக்மாலி மற்றும் சச்சித் மதுரங்க ஆகிய வீரர்கள் குறித்த பயிற்சியாளரிடம் மேலதிக பயிற்சிகளைப் பெற்று 2013இல் ஆசிய மெய்வல்லுனர் தொடரில் பதக்கங்களையும் வெற்றி கொண்டனர். 

முன்னதாக குறித்த பின்லாந்து பயிற்சியாளர் 2015இல் பின்லாந்து விளையாட்டு அதிகாரி சபையினால் வழங்கப்படுகின்ற ஆண்டின் சிறந்த பயிற்சியாளருக்கான விருதினையும் தட்டிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கையில் கொவிட் – 19 வைரஸின் தாக்கம் முழுமையாக குறைவடைந்த பிறகு ப்ரேட் பீரன் பயிற்சியாளரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<