2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் நேற்று (19) நிறைவடைந்த நிலையில், இந்த தொடரின் சிறந்த வீரர்கள் கொண்ட அணி (Team of the Tournament) சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.
>> ஆசிய விளையாட்டு விழா நாயகர்களை கௌரவிக்கும் இலங்கை கிரிக்கெட்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரினை வெற்றி கொண்டதோடு, உலகக் கிண்ணத் தொடருக்கான அணியில் தொடரின் இறுதிப் போட்டியில் ஆடிய அவுஸ்திரேலியா மற்றும் இந்திய வீரர்களே பெரும்பாலும் இடம் பெற்றிருக்கின்றனர்.
இதில் உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் தலைவராக இந்திய அணியின் ரோஹிட் சர்மா பெயரிடப்பட்டிருக்கின்றார். ரோஹிட் சர்மா இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் தனது தரப்பினை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹிட் சர்மாவுக்கு ஜோடியாக தென்னாபிரிக்க அணியின் குயின்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, உலகக் கிண்ண தொடருக்கான சிறந்த அணியின் விக்கெட்காப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். டி கொக் இந்த உலகக் கிண்ணத் தொடரில் நான்கு அபார சதங்களுடன் மொத்தமாக 594 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் மூன்றாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக இந்தியாவின் துடுப்பாட்ட ஜாம்பவான் விராட் கோலி மாறியிருக்கின்றார்.ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக சதங்கள் கடந்த வீரராக உலக சாதனை நிலைநாட்டிய விராட் கோலி இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 765 ஓட்டங்கள் விளாசி ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த துடுப்பாட்ட வீரராகவும் புதிய சாதனை படைத்தார். அத்துடன் விராட் கோலி இம்முறை உலகக் கிண்ணத் தொடரின் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>> சமரி அதபத்துவை கௌரவிக்கும் சிட்னி தண்டர்ஸ்!
நியூசிலாந்து அணியின் முன்வரிசை வீரரான டேரைல் மிச்சல், இந்திய அணியின் விக்கெட்காப்பு வீரர் KL ராகுல் ஆகியோர் மத்திய வரிசை வீரர்களாக பெயரிடப்பட்டிருக்க, அவுஸ்திரேலியாவின் கிளன் மெக்ஸ்வெல், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் உலகக் கிண்ண அணிக்கான சகலதுறைவீரர்களாக மாறியிருக்கின்றனர்.
உலகக் கிண்ணத் தொடருக்கான அணியின் பிரதான சுழல்பந்துவீச்சாளராக அவுஸ்திரேலிய அணியின் அடம் ஷம்பா மாறியிருக்கின்றார். அடம் ஷம்பா இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் 23 விக்கெட்டுக்களைச் சாய்த்து ஒரு சுழல்பந்துவீச்சாளராக உலகக் கிண்ணம் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களைச் சாய்த்த வீரராக முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த அணியின் எஞ்சிய வீரர்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான மொஹமட் சமி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகிய வீரர்களுடன் இலங்கையின் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான டில்சான் மதுசங்கவும் இடம்பெற்றிருக்கின்றார்.
டில்சான் மதுசங்க இம்முறை உலகக் கிண்ணத் தொடரில் 9 போட்டிகளில் ஆடி 21 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் உலகக் கிண்ணத் தொடருக்கான அணியில் இடம்பெற்ற இளவயது வீரராகவும் 23 வயது நிரம்பிய டில்சான் மதுசங்க காணப்படுகின்றார்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<