தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட தொடரின் குழு E இற்கான போட்டியில் இறுதி காற்பகுதியின் அபார ஆட்டத்தின் உதவியுடன் பார்படோஸ் அணியை 60-56 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை பதிவுசெய்துள்ளது.
இலங்கை அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த நிலையில், இறுதி லீக் போட்டியில் பார்படோஸ் அணியை எதிர்த்தாடியது.
- இலங்கைக்கு மற்றொரு மோசமான தோல்வி!
- சிங்கபூரிடம் தோல்வியடைந்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி
- சிங்கபூரிடம் தோல்வியடைந்த இலங்கை வலைப்பந்தாட்ட அணி
போட்டியின் முதல் காற்பகுதியில் இரண்டு அணிகளும் சமபலமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. சிறப்பான போட்டியை கொடுத்த இரண்டு அணிகளும் 15-15 என்ற புள்ளிகள் கணக்கில் முதல் காற்பகுதியை சமப்படுத்தின.
தொடர்ந்து ஆரம்பித்த இரண்டாவது காற்பகுதியில் இலங்கை அணி தொடர்ச்சியாக 5 புள்ளிகளை பெற்றதன் ஊடாக 21-16 என்ற முன்னிலையை பெற்றது. தொடர்ந்து அதிரடியாக ஆடி 24-17 என முன்னேறியது. எனினும் கடைசி நிமிடங்களில் 7 புள்ளிகள் என்ற முன்னிலையை 4 புள்ளிகளாக பார்படோஸ் அணி குறைக்க முதற்பாதி 30-26 என இலங்கையின் முன்னிலயுடன் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது காற்பகுதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணிக்கு மூன்றாவது காற்பகுதி மோசமாக அமைந்திருந்தது. பார்படோஸ் அணி 5-0 மற்றும் 3-0 என்ற தொடர்ச்சியான புள்ளிகள் குவிப்பின் உதவியுடன் மூன்றாவது காற்பகுதியை 22-13 என கைப்பற்றியது. எனவே, அவ்வணி மூன்றாவது காற்பகுதி நிறைவில் 48-43 என முன்னிலை பெற்றது.
இறுதியாக ஆரம்பித்த நான்காவது காற்பகுதியில் 5 புள்ளிகள் பின்னடைவில் களமிறங்கிய இலங்கை அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர்ச்சியான 5-0 என்ற புள்ளிகள் குவிப்புடன் 48-50 என எதிரணியின் புள்ளிகளை இலங்கை நெருங்கியது.
எனினும் பார்படோஸ் அணி 54-50 என்ற முன்னிலையை அடைய, அதனைத்தொடர்ந்து இலங்கை மேலும் சிறப்பாக ஆடத்தொடங்கியது. இதன்மூலம் இலங்கை அணி மேலும் 10 புள்ளிளை குவிக்க, பார்படோஸ் அணியால் 2 புள்ளிகளை மாத்திரம் பெறமுடிந்தது. எனவே ஆட்டத்தின் இறுதியில் 60-56 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பாக திசாலா அல்கம அதிகபட்சமாக தனக்கு கிடைத்த 50 வாய்ப்புகளில் 47 புள்ளிகளை குவித்ததுடன், துலாங்கி வன்னிதிலக்க 13 வாய்ப்புகளில் 13 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை கடந்த 2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் பார்படோஸ் அணியிடம் 67-33 என்ற புள்ளிகள் கணக்கில் மோசமான தோல்வியினை சந்தித்திருந்ததுடன், இம்முறை திரில் வெற்றியினை பதிவுசெய்துள்ளது.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<