வலைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Netball World Cup 2023

306
Netball World Cup 2023

தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ள வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர்கொண்ட இலங்கை குழாத்தில் அனுபவ வீராங்கனையான தர்ஜினி சிவலிங்கம் இடம்பெற்றுள்ளதுடன், இம்முறையும் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முக்கிய வீராங்கனையாக இவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>>ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம்

தேசிய வலைப்பந்து சம்மேளனம் (NFSL) உலகக்கிண்ணத்தொடருக்காக ஏற்கனவே 20 பேர்கொண்ட முதற்கட்ட குழாம் ஒன்றை அறிவித்து பயிற்சிகளை நடத்திவந்ததுடன், அதனைத்தொடர்ந்து குழாம் 16 வீராங்கனைகளாக மட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து இறுதியாக அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தை பொருத்தவரை தருஷி நவோத்யா பெரேரா மாத்திரம் நீக்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட குழாத்தின் ஏனைய வீராங்கனைகள் அனைவரும் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர். இந்த உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியின் தலைவியாக கயாஞ்சலி அமரவன்ச செயற்படவுள்ளார்.

வலைப்பந்து உலகக் கிண்ணத்தொடரானது இம்மாதம் 28 திகதி முதல் அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

திசால அலகம, செமினி அல்விஸ், சானிக பெரேரா, இமாஷா பெரேரா, கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, ருக்சலா ஹப்புவராச்சி, சாமுதி விக்ரமரட்ன, துலங்கி வன்னித்திலக்க, மல்மி ஹெட்டியராச்சி, கயானி திஸாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய, காயத்ரி கெளசல்யா, தர்ஜினி சிவலிங்கம், பாஷினி யோசித டி சில்வா

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<