வலைப்பந்து உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

301

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL) 2023ஆம் ஆண்டுக்கான வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கும், 12 பேர் அடங்கிய இலங்கையின் உலகக் கிண்ண வலைப்பந்து குழாத்தினை அறிவித்துள்ளது.

>>16 பேராக குறைக்கப்பட்ட இலங்கை வலைப்பந்து அணி

விளையாட்டு அமைச்சரின் அனுமதியுடன் உறுதி செய்யப்படவிருக்கும் இந்த உலகக் கிண்ண வலைப்பந்து குழாம் தேசிய வலைப்பந்து அணி பயிற்சியாளர் திலகா ஜினதாசவின் ஆளுகையில் ஜூலை மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 06ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் நடைபெறும் வலைப்பந்து உலகக் கிண்ணத்தில் பங்கெடுக்கவிருக்கின்றது. இந்த வலைப்பந்து உலகக் கிண்ணத்தின் உதவிப் பயிற்சியாளராக P.D.N. பிரசாதி செயற்படுகின்றார்.

முன்னர் 16 பேராக காணப்பட்டிருந்த உலகக் கிண்ணத்திற்கான இலங்கை வலைப்பந்து அணி தற்போது 12 பேராக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் வலைப்பந்து உலகக் கிண்ண குழாத்தில் ஏற்கனவே காணப்பட்டிருந்த வீராங்கனைகளான இமாஷா பெரேரா, ருக்ஷலா ஹப்புவராச்சி, சாமுதி விக்ரமரட்ன மற்றும் தருஷி நவோத்யா பெரேரா ஆகியோர் தற்போதைய இறுதி அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர்.

மறுமுனையில் இலங்கையின் நட்சத்திர வலைப்பந்து வீராங்கனைகளில் ஒருவரான தர்ஜினி சிவலிங்கம் உலகக் கிண்ண குழாத்தில் பெயரிடப்பட்ட போதும் அவர் தற்போது தற்போது அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வலைப்பந்து லீக்கில் ஆடிவருகின்றார்.  அவருக்கு தேசிய வலைப்பந்து அணியுடன் இணையும் வாய்ப்பு இல்லாமல் போகும் போது அவர் இமாஷா பெரேரா மூலம் பிரதியீடு செய்யப்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

>>அவுஸ்திரேலியாவில் மீண்டும் களமிறங்கும் தர்ஜினி சிவலிங்கம்!

உலகக் கிண்ண வலைப்பந்து குழாத்தில் அதிகமானோர் ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பினை வெற்றி கொண்ட இலங்கை வீராங்கனைகளே அதிகம் காணப்படுவதோடு அதில் காயத்ரி கௌசல்யா, சானிக்க பெரேரா மற்றும் திஷால அல்கம ஆகியோரே புதிய வீராங்கனைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை தற்போதைய வலைப்பந்து உலகக் கிண்ண அணித் தெரிவு இலங்கை வலைப்பந்து அணியின் முன்னாள் தலைவி தமயந்தி ஜயத்திலக்க, திசாங்கனி கொடித்துவக்கு மற்றும் சாமிக்க ஜயசேகர ஆகியோர் கொண்ட குழு மூலமாக இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண வலைப்பந்து குழாம்

திசால அலகம, செமினி அல்விஸ், சானிக்க பெரேரா, கயான்ஜலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, துலங்கி வன்னித்திலக்க, மல்மி ஹெட்டியராச்சி, கயானி திஸாநாயக்க, சத்துரங்கி ஜயசூரிய, காயத்ரி கெளசல்யா, தர்ஜினி சிவலிங்கம், பாஷினி யோசித டி சில்வா

 மேலதிக வீராங்கனைகள்

இமாஷா பெரேரா, ருக்ஷலா ஹப்புவராச்சி, சாமுதி விக்ரமரட்ன, தருஷி நவோத்யா பெரேரா

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<