பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு ரொனால்டோ, மொட்ரிக், சலாஹ் போட்டி

427

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின், 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ஐந்து முறை பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை வென்ற பார்சிலோனா மற்றும் ஆர்ஜன்டீன முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி, இம்முறை விருதுக்கான முதல் மூன்று இடங்களுக்கு வருவதற்கு தவறியுள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிக்கத் தவறுவது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஐரோப்பிய விருதுகள் அனைத்தையும் தட்டிச் சென்ற ரியல் மெட்ரிட் வீரர்கள்

பிஃபாவினால் திங்கட்கிழமை (03) வெளியிடப்பட்ட இந்த இறுதிப் பட்டியலில் உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியைச் சேர்ந்த எந்த வீரருக்கும் இடம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு தசாப்தமாக உலகக் கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த மெஸ்ஸி மற்றும் ரோனால்டோ இருவரில் உயரிய விருதில் இருந்து மெஸ்ஸி விடுபட்டிருக்கும் நிலையில் அந்த விருதை ஆறாவது முறையாக வெல்லும் போட்டியில் 33 வயதுடைய ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பிஃபா சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ, ரியெல் மெட்ரிட்டுக்காக ஐந்து முறை ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய நிலையில் கடந்த மே மாதம் 100 மில்லியன் யூரோவுக்கு ஜுவண்டஸ் அணியில் ஒப்பந்தமானார்.

ரொனால்டோவின் முன்னாள் ரியல் மெட்ரிட் சக வீரரான லூகா மொட்ரிக்கும் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கு அவருடன் போட்டியிடுகிறார். பிரான்ஸுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குரோஷிய அணி வீரரான மொட்ரிக் உலகக் கிண்ண தொடரின் சிறந்த வீரருக்கான தங்கப்பந்து விருதையும் வென்றார்.

எகிப்து முன்கள வீரரான மொஹமட் சலாஹ் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களைப் போட்டார். இதன் மூலம் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிவரை லிவர்பூல் அணியால் முன்னேற முடிந்தது.

கடந்த வாரம் இடம்பெற்ற ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் (UEFA) ஆண்டின் சிறந்த வீரராக ரொனால்டோ மற்றும் சாலாஹ் ஆகியோரைத் பின்தள்ளி மொட்ரிக் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களை பெற்று தங்கப்பாதணி விருதை வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஹெரி கேன் பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான 10 வீரர்கள் பட்டியலில் இருந்தபோதும் அவரால் இறுதிப் பட்டியலுக்கு முன்னேற முடியவில்லை.

உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் டிடியர் டிஸ்சம்ப்ஸ் ஆண்டின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருடன் அந்த விருதை வெல்லும் போட்டியில் குரோஷியாவின் ஸ்லாட்கோ டலிக் மற்றும் முன்னாள் ரியல் மெட்ரிட் முகாமையாளர் சினடின் சிடேன் உள்ளனர்.

கோல் மழையுடன் முடிவடைந்த லா லிகா மூன்றாம் வாரப் போட்டிகள்

சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனைக்கான இறுதிப் பட்டியலில் சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான லியோன் அணியின் டுவோ அடா ஹகர்பேர் (நோர்வே), ஜெர்மனியின் செனிபர் மரொசான் மற்றும் பிரேசில் முன்கள வீராங்கனை மார்டா இடம்பெற்றுள்ளனர்.

பல்லோன் டிஓர் விருதுகளில் இருந்து 2016 ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து சம்மேளனம் விலகிக் கொண்ட நிலையில் இந்த விருது தனியாகவே இடம்பெறுகிறது.

பிஃபாவின் முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஒவ்வொரு விருதுக்கும் 10 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்திருந்தது. தேசிய அணித் தலைவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், தேர்வுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியாளரை தேர்வுசெய்யவுள்ளனர்.

சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணிக்கு எதிராக ரொனால்டோ தலைக்கு மேலால் உதைத்த ‘பைசிகள் கிக்’ (Bicycle kick) மற்றும் கரெத் பேல் லிவர்பூலுக்கு எதிராக தலைக்கு மேலால் உதைத்துப் பெற்ற கோல்கள் சிறந்த கோலுக்கான 10 பரிந்துரைகளில் உள்ளன. இதில் வெற்றி கோல் ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படும்.

பிஃபா விருதின் வெற்றியாளர்கள் லண்டனில் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் நிகழ்வில் அறிவிக்கப்படவுள்ளனர்.

சிறந்த வீரர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ – ஜுவண்டஸ் மற்றும் போர்த்துக்கல்

லூகா மொட்ரிக் – ரியல் மெட்ரிட் மற்றும் குரோஷியா

மொஹமட் சலாஹ் – லிவர்பூல் மற்றும் எகிப்து

சிறந்த வீராங்கனை

டுவோ அடா ஹகர்பேர் – லியோன் மற்றும் நோர்வே

செனிபர் மரொசான் – லியோன் மற்றும் ஜெர்மனி

மார்டா – ஓர்லாண்டோ பிரைட் மற்றும் பிரேசில்

ஆடவர் பயிற்றுவிப்பாளர்

ஸ்லாட்கோ டலிக் – குரோஷியா

டிடியர் டிஸ்சம்ப்ஸ் – பிரான்ஸ்

சினடின் சிடேன் – முன்னாள் ரியல் மெட்ரிட்

பெண்கள் பயிற்றுவிப்பாளர்

ரெய்னால்ட் பெட்ரோஸ் – லியோன்

அசாகோ டககுரா – ஜப்பான்

சரினா விக்மன் – நெதர்லாந்து

லிவர்பூல், செல்சி அணிகளுக்கு அடுத்தடுத்து நான்காவது வெற்றி

கோல்காப்பாளர்

திபோட் கோர்டொயிஸ் – ரியல் மெட்ரிட் மற்றும் பெல்ஜியம்

ஹூகோ லொரிஸ் – டொட்டன்ஹாம் மற்றும் பிரான்ஸ்

கஸ்பர் ஷிமைக்கல் – லெய்சஸ்டர் மற்றும் டென்மார்க்

ரசிகர் விருது

பேரு ரசிகர்கள்

ஜப்பான் ரசிகர்கள்

செபஸ்டியன் கரேரா (டிபோர்ட் புர்டோ மொண்ட், சிலி)

புஸ்கா விருது (சிறந்த கோல்)

கரேத் பேல் (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

டெனிஸ்செரிஷேவ் (ரஷ்யா) எதிர் குரோஷியா

லசரோஸ் கிறிஸ்டோடௌலோபோலோஸ் (க்ரூசைரோ) எதிர் அமெரிக்கா எம்.ஜி.

ரிலேய் மக்ரீ (நியூகாஸில் ஜெட்) எதிர் மெல்போர்ன் சிட்டி

லியோனல் மெஸ்ஸி (ஆர்ஜன்டீனா) எதிர் நைஜீரியா

பென்ஜமின் பவார்ட் (பிரான்ஸ்) எதிர் ஆர்ஜன்டீனா

ரிகார்டோ குவரஸ்மா (போர்த்துக்கல்) எதிர் ஈரான்

கிறிஸ்டியானோ ரொனால்டோ (ரியல் மெட்ரிட்) எதிர் லிவர்பூல்

முஹமட் சலாஹ் (லிவர்பூல்) எதிர் எவர்டன்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<