இலங்கை மற்றும் மக்காவு அணிகளுக்கு இடையில் நாளை (11) சுகததாஸ அரங்கில் இடம்பெறவிருந்த பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் மற்றும் ஆசிய கிண்ண தொடர் என்பவற்றுக்கான பூர்வாங்க தகுதிகாண் போட்டியின் இரண்டாம் கட்ட ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) இன்று (10) அறிவித்துள்ளது.
மக்காவுவுக்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் உறுதியான பதில்
கட்டாரில் நடைபெறவுள்ள 2022 பிஃபா உலகக் கிண்ணம்…
இந்த தகுதிகாண் மோதலின் முதல் கட்டப் போட்டி கடந்த 6ஆம் திகதி சீனாவின் சுஹாய் அரங்கில் இடம்பெற்றது. அதில் 1-0 என தோல்வி கண்ட இலங்கை அணி, இரண்டாம் கட்டப் போட்டியில் கட்டாய வெற்றியைப் பெற வேண்டிய நிலையில் அதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டு வந்தது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக தமது அணியை இலங்கைக்கு அனுப்ப மக்காவு கால்பந்து சங்கம் (MFA) மறுப்பு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த போட்டி ரத்து குறித்த அறிவிப்பு வருவதற்கு முன்னர், நாளைய போட்டிக்கு முன்னரான ஊடக சந்திப்பு இன்று காலை (10) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இதில், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அநுர டி சில்வா, இலங்கை தேசிய கால்பந்து அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி, இலங்கை அணியின் தலைவர் சுஜான் பெரேரா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
>> பாதுகாப்பு காரணத்தினால் இலங்கை வர மக்காவு அணி மறுப்பு
இதன்போது, போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த FFSL தலைவர் அநுர டி சில்வா, ”நாளை மாலை 3.30 மணிக்கு சுகததாஸ அரங்கில் போட்டியை (இரண்டாம் கட்ட தகுதி காண்) நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் மேற்கொண்டுள்ளோம். முதல் கட்டப் போட்டியில் நாம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்றோம். எனினும், நாளைய போட்டியில் சிறந்த முறையில் ஆடி, வெற்றி பெறுவதற்கு நாம் முழு நம்பிக்கையுடன் உள்ளோம்.
எனினும், மக்காவு அணி போட்டிக்காக இலங்கை வருவது குறித்து அந்நாட்டு கால்பந்து சங்கத்திடமிருந்து இதுவரை எந்தவித உத்தியோகபூர்வ தகவலையும் நாம் பெறவில்லை” என்றார்.
இலங்கையின் பாதுகாப்பு குறித்து அச்சமடைந்துள்ள மக்காவு கால்பந்து சங்கம், போட்டியை இலங்கையில் இல்லாமல் பொதுவான ஒரு மைதானத்தில் (வேறு நாட்டில்) நடாத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளதாக தெரிவித்த இலங்கை கால்பந்து சம்மேளனம், போட்டி எந்தவித மாற்றமும் இன்றி நடைபெறும் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மக்காவு கால்பந்து சம்மேளனத்தின் தீர்மானத்தை எதிர்த்த மக்காவு தேசிய அணி வீரர்கள்
இலங்கைக்கு எதிரான 2022 உலகக் கிண்ணத்திற்கான…
நாளைய போட்டிக்கான தயார்படுத்தல் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி, ” எமது எதிரணி வந்தாலும், வராவிட்டாலும் நாம் நாளைய போட்டிக்கான தயார்நிலையில் உள்ளோம். வழமையான பயிற்சிகள் இடம்பெறுகின்றன. வீரர்கள் ஓய்வின்றி போட்டிக்கான தயார்படுத்தலில் உள்ளனர். நாம் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் திடமாக உள்ளோம்” என்றார்.
பிஃபா அல்லது ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் முடிவுக்கு அமைய, போட்டியில் வோக் ஓவர் முறையில் இலங்கைக்கு வெற்றி வழங்கப்படுமாயின், இலங்கை 3-1 கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் குழு நிலை மோதல்களுக்கு தெரிவாகும்.
எவ்வாறிருப்பினும், இந்த மோதலின் முடிவு குறித்து எந்தவித உத்தியோகபூர்வ தகவலும் இன்னும் வெளியிடப்படவில்லை.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<