பிரான்ஸ் மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலான கோலற்ற மந்தமான ஆட்டம் சமநிலையானதை அடுத்து C குழுவில் இருந்து இரண்டாவது அணியாக டென்மார்க் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மறுபுறம், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற பெரு அணி 1978க்கு பின்னர் உலகக் கிண்ண போட்டி ஒன்றில் வெற்றிபெற்ற ஆறுதலுடன் முதல் சுற்றுடன் வெளியேறியதோடு, இந்த போட்டியில் தோற்றதன் மூலம் அவுஸ்திரேலிய அணியும் ஆரம்ப சுற்றுடன் வெளியேறியது.
மொரோக்கோவை போராடி சமன் செய்த ஸ்பெயின்: போர்த்துக்கலுக்கு மற்றொரு அதிர்ச்சி முடிவு
போட்டி நிறைவை நெருங்கும் நேரத்தில் இயாகோ அஸ்பாஸ் போட்ட கோல் மூலம் மோரோக்கோவிடம் தோல்வியை…….
பிரான்ஸ் எதிர் டென்மார்க்
இம்முறை உலகக் கிண்ணத்தில் 36 போட்டிகளுக்கு பின்னரே இரு அணிகளும் கோல் பெறாமல் போட்டி ஒன்று சமநிலையில் முடிந்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் டென்மார்க் அணி 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற ஒரு புள்ளி மாத்திரம் தேவைப்படும் சவாலுடனேயே மொஸ்கோவில் இன்று (26) இந்த போட்டி நடைபெற்றது.
அரங்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடியபோதும் ஆட்டம் அதிக விறுவிறுப்புக் காட்டவில்லை. ஏற்கனவே தனது குழுவில் முதலிடத்தை உறுதி செய்ததால் பிரான்ஸ் சற்று கவனமாக இந்த ஆட்டத்தில் ஈடுபட்டது. அதற்கு ஏற்ப டென்மார்க்கும் ஆட்டம் முழுவதிலும் அவசரம் காட்டவில்லை.
போட்டியின் 39ஆவது நிமிடத்தில் வைத்தே கோல் இலக்கை நோக்கி பந்து முதல் முறை உதைக்கப்பட்டது. பிரான்ஸின் அன்டனி கிரிஸ்மான் பெனால்டி எல்லையில் இருந்து உதைத்த பந்தை டென்மார்க் கோல்காப்பாளர் கெஸ்பர் ஷிமைகல் சிறப்பான முறையில் தடுத்தார். மறுபுறம் டென்மார்க் அணிக்கு முதல் பாதி ஆட்டத்தில் குறிப்பிடத்தக்க வாய்ப்புகள் கிட்டவில்லை.
முதல் பாதி: டென்மார்க் 0 – 0 பிரான்ஸ்
இரண்டாவது பாதி ஆட்டமும் வேகம் பிடிக்கவில்லை. டென்மார்க் வீரர்கள் 54 ஆவது நிமிடத்திலேயே முதல்முறை வலையை நோக்கி பந்தை உதைத்தார்கள். பெனால்டி எல்லைக்கு வெளியில் இருந்து கிறிஸ்டியன் எரிக்சன் உதைத்த பந்தை பிரான்ஸ் கோல்காப்பாளர் தடுத்தார்.
பிரான்ஸ் மத்தியகள வீரர்களான போல் பொக்பா, ப்ளைஸ் மடுயிடி மற்றும் கொரென்டி டொலிசோ மூவருக்கும் இந்த போட்டியில் ஓய்வு அளித்திருந்தது. இந்நிலையில் அந்த அணி ஆக்ரோசமின்றி ஆடியதை காண முடிந்தது. எனினும் போட்டியின் 68 வீதமான நேரம் பிரான்ஸ் வீரர்கள் வசமே பந்து இருந்தது.
இந்நிலையில் C குழுவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கும் பிரான்ஸ் காலிறுதிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியில் D குழுவில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியுடன் வரும் சனிக்கிழமை (30) மோதவுள்ளது.
மறுபுறம் டென்மார்க் அணி D குழுவில் முதலிடத்தை பிடிக்கும் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை (01) பலப்பரீட்சை நடத்தும்.
முழு நேரம்: டென்மார்க் 0 – 0 பிரான்ஸ்
பெரு எதிர் அவுஸ்திரேலியா
ஏற்கனவே உலகக் கிண்ண போட்டியில் இருந்து பெரு அணி வெளியேறிய நிலையில் அவுஸ்திரேலியா அந்த அணியை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னெறுவதற்கு சிறிய வாய்ப்பு இருந்த நிலையிலேயே இன்று (26) களமிறங்கியது.
எனினும் சொச்சியில் நடந்த இந்த போட்டியின் 18ஆவது நிமிடத்திலேயே அன்ட்ரே கரில்லோ 15 யார்ட் தூரத்தில் இருந்து உதைத்து அபார கோல் ஒன்றை புகுத்தி தென் அமெரிக்க நாடான பெருவை முன்னிலை பெறச் செய்தார்.
இந்நிலையில் மத்தியூ லெக்கி பதில் கோல் திருப்ப நெருங்கிய தூரத்தில் இருந்து அடித்த பந்தை பெரு பின்கள வீரர் அன்டர்சன் சன்டமரியா சிறப்பாக தடுத்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணி கோல் பெறும் வாய்ப்பொன்றை பெற போராடியது.
முதல் பாதி: பெரு 1 – 0 அவுஸ்திரேலியா
இந்நிலையில் இரண்டாவது பாதி ஆரம்பித்த விரைவிலேயே பெரு அணித்தலைவர் போலோ குவெரேரோ கோலொன்றை பெற்று தனது அணியின் வெற்றி வாய்ப்பை உறுதி செய்தார். ஊக்கமருந்து விவகாரத்தில் 14 மாத போட்டித் தடையில் இருந்து மீண்டு வந்த நிலையில் குவெரேரோ தொடரில் ஆடிய முதல் போட்டியாகவும் இது இருந்தது.
வெற்றியை தவறாகக் கொண்டாடிய சுவிஸ் வீரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை
செர்பிய அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட வெற்றிக் களிப்பில் அல்பேனிய தேசிய கொடியின் சின்னத்தை அகௌரவப்படுத்திய……
இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்திய பெரு அணிக்காக கடைசி நேரத்தில் கூட கிறிஸ்டியன் குவேவா கோலை நோக்கி உதைத்தபோது அது கம்பத்தில் பட்டு வெளியேறியது.
இதன்படி பெரு அணி C குழுவில் பிரான்ஸ், டென்மார்க்கிற்கு அடுத்து 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பெற்றதோடு ஒரு போட்டியை மாத்திரம் சமன் செய்த அவுஸ்திரேலியா கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.
பெரு அணி எட்டு உலகக் கிண்ண தொடர்களில் பங்கேற்றபோதும் அந்த அணி கடைசியாக 1978 ஜுன் 11 ஆம் திகதி ஈரான் அணியை 4-1 என வீழ்த்தியே வெற்றி ஒன்றை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது அந்த அணி உலகக் கிண்ணத்தில் பெற்ற ஐந்தாவது வெற்றியாகும்.
மறுபுறம் ஐந்து முறை உலகக் கிண்ண தொடரில் ஆடி இருக்கும் அவுஸ்திரேலியா மூன்றாவது தடவையாகவும் உலகக் கிண்ணத்தில் எந்த வெற்றியையும் பெறாமல் வெளியேறியுள்ளது.
முழு நேரம்: பெரு 2 – 0 அவுஸ்திரேலியா
கோல் பெற்றவர்கள்
பெரு – அன்ட்ரே கரில்லோ 18′, போலோ குவெரேரோ 50′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<