நடப்புச் சம்பியன் பிரான்ஸ் அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கிண்ண கால்பந்து தொடரின் டி குழுவுக்கான ஆட்டத்தில் 4–1 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றியீட்ட, சவூதி அரேபிய வீரர்கள் பிரபல ஆர்ஜடீனாவை அதிர்ச்சித் தோல்விக்கு உள்ளாக்கினர். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மேலும் இரண்டு ஆட்டங்கள் சமநிலை பெற்றன.
ஜிரோடின் சாதனையுடன் பிரான்ஸ் இலகு வெற்றி
பிரான்ஸ் 4-1 என மிக இலகுவாக வெற்றி பெற்ற இந்தப் போட்டியின்போது இரட்டை கோல் பெற்ற ஒலிவியர் ஜிரோட் பிரான்ஸ் தேசிய அணிக்காக அதிக கோல்கள் பெற்ற தியரி ஹென்ரியின் (51) சாதனையை சமப்படுத்தினார்.
- ரொனால்டோவின் வாயை யாராலும் மூட முடியாதாம்
- பேலின் கடைசி நேர கோலால் தப்பித்த வேல்ஸ்; இங்கிலாந்து இலகு வெற்றி
அல் ஜனுப் அரங்கில் புதன் அதிகாலை (23) நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி தனது நட்சத்திர வீரரான கரீம் பென்சிமா காயத்தால் உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறிய நிலையிலேயே களமிறங்கியது.
போட்டி ஆரம்பித்து 9ஆவது நிமிடத்திலேயே கிரய் குட்வின் செலுத்திய அதிரடி கோலால் அவுஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. எனினும் பின்னர் பிரான்ஸ் போட்டியில் முழு ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது.
அன்ட்ரின் ரபியோட் தலையால் முட்டி 27ஆவது நிமிடத்தில் கோல் செலுத்தியதோடு ஜிரோட் (32, 71) மற்றும் ம்பாப்பே (68) கோல்கள் புகுத்த அவுஸ்திரேலிய அணியால் சுதாகரிக்க முடியாமல்போனது.
பென்சிமாவின் இழப்பை ஈடுகட்டும் வகையில் பிரான்ஸ் அணிக்காக ஜிரொட் ஆடியதோடு ம்பாப்பே அவுஸ்திரேலிய அரணை அடிக்கடி முறியடித்து அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்ததை பார்க்க முடிந்தது.
பெனால்டியை தவறவிட்டு வெற்றியை இழந்த போலந்து
போலந்து அணி பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட நிலையில் மெக்சிகோவுக்கு எதிரான உலகக் கிண்ண சி குழுவுக்கான போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.
974 அரங்கில் நடைபெற்ற போட்டியில் முதல்பாதி ஆட்டம் கோலின்றி இழுபறியோடு முடிவுற்றது. தொடர்ந்து 54ஆவது நிமிடத்தில் போலந்து முன்கள வீரர் ரொபர்ட் லொவன்டோஸ்கி எதிரணி பெனால்டி பகுதிக்குள் வீழ்த்தப்பட்டதால் போலந்துக்கு ‘ஸ்பொட் கிக்’ வாய்ப்பு கிட்டியது.
அந்த பொன்னான வாய்ப்பை பெற்ற லொவன்டோஸ்கி 58ஆவது நிமிடத்தில் பெனால்டி உதையை வலையை நோக்கி செலுத்தியபோது மெக்சிகோ கோல் காப்பாளர் கிளர்மோ ஒசோ பாய்ந்து பந்தைத் தடுத்தார்.
இது போட்டியின் பெரும் திருப்பமாக இருந்தது. தொடர்ந்து முழு நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் பெற முடியாத நிலையில் வழங்கப்பட்ட ஏழு நிமிட மேலதிய நேரத்திலும் கோல் முயற்சி தவறியது.
பார்சிலோனா முன்கள வீரரான லொவன்டோஸ்கி போலந்து அணிக்காக அதிகபட்சம் 76 கோல்களை பெற்றவராவார். எனினும் உலகக் கிண்ணத்தில் ஒரு கோலையும் பெற்றிராத அவர் அந்த கனவை நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகக் கூறியபோதும் கிடைத்த வாய்ப்பை தவறிவிட்டுள்ளார்.
பரபரப்பான டென்மார்க் – துனீசியா மோதல் சமநிலையில் முடிவு
பரபரப்பாக நடைபெற்ற துனீசியா மற்றும் டென்மார்க் அணிகளுக்கு இடையிலாக உலகக் கிண்ண கால்பந்து முதல் சுற்றுப் போட்டி கோலின்றி சமநிலையில் முடிவுற்றது.
டி குழுவுக்காக கட்டாரின் கல்வி நகர் அரங்கில் நடைபெற்ற (22) இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் உத்வேகத்தை வெளிக்காட்டிய துனீசிய அணி பந்தை எதிரணியிடம் இருந்து பறிப்பது மற்றும் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிப்பது என அதிக்கம் செலுத்தியது.
எனினும் பிந்திய நேரத்தில் டென்மார்க் மெது மெதுவாக அதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. துனீசியா சில வாய்ப்புகளை தவறிவிட்டபோதும் டென்மார்க் நூலிழையில் கோல் புகுத்துவதை தவறவிட்டது. அன்ட்ரியஸ் கொர்னலியஸ் எதிராணி கோல் கம்பத்தை நோக்கி நேராக தலையால் முட்டிய பந்து பட்டும் படாமலும் வெளியேறியது.
உலகக் கிண்ணத்தில் மிகக் கடினமான குழு ஒன்றாக இருக்கும் டி குழுவில் அணிகள் உலகத் தரவரிசையில் சராசரியாக 20.5 நிலையை பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் அனைத்து அணிகளுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவுகிறது.
இந்தப் போட்டி சமநிலையானதால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டுள்ளன. இதனால் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புக் கொண்ட அணியாக பார்க்கப்படும் டென்மார்க் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற போராட வேண்டி இருக்கும்.
ஆர்ஜன்டீனாவுக்கு பேரதிர்ச்சி கொடுத்த சவூதி அரேபியா
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் பெரதிர்ச்சியாக லியொனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணியை சவூதி அரேபியா 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
லுசைலா அரங்கில் சி குழுவுக்காக நடைபெற்ற (22) போட்டியில் உலகத் தரவரிசையில் 51ஆவது இடத்தில் இருக்கும் சவூதி அரேபியா 3ஆவது இடத்தில் உள்ள ஆர்ஜன்டீனாவுக்கு இரண்டாவது பாதியில் பெரும் நெருக்கடி கொடுத்தது.
போட்டி ஆரம்பித்த 10 ஆவது நிமிடத்திலேயே மெஸ்ஸி பெனால்டி மூலம் கோல் பெற்று ஆர்ஜன்டீன அணியை முன்னிலை பெறச் செய்தார். இதன்போது ஆர்ஜன்டீனா மூன்று கோல்களை புகுத்தியபோதும் அவை அனைத்து ஓப்சைட் ஆக இருந்தன.
என்றாலும் இரண்டாவது பாதி ஆரம்பித்தபோது ஆட்டத்தை முழுமையாக தன் பக்க திசைதிருப்பியது சவூதி அரேபியா. சலேஹ் அல் ஷெஹ்ரி 48ஆவது நிமிடத்தில் பந்தை வலைக்குள் செலுத்தி பதிலடி கொடுத்த நிலையில், ஐந்து நிமிடங்கள் கழித்து சலேம் அல் தௌசாரி அதிரடி கோல் ஒன்றை புகுத்தினார்.
சவூதி அரேபியாவின் வெற்றியுடன் சி குழுவில் அடுத்த சுற்றுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆர்ஜன்டீனா 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மெக்சிகோ மற்றும் போலந்துக்கு எதிரான அடுத்த இரு போட்டிகளும் தீர்க்கமானதாக மாறியுள்ளது.
சவூதி அரேபியா உலகக் கிண்ணத்தில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்துவது இது முதல் முறை என்பது மாத்திரம் அல்ல, இது அந்த அணி உலகக் கிண்ணத்தில் பெறும் வெறுமனே நான்காவது வெற்றியாகும்.
மறுபுறம் 36 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியுறாத அணியாகவே ஆர்ஜன்டீனா இம்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கியிருந்தது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<