தானும் கெட்டு அடுத்தவனையும் கெடுத்த கதையாக உலகக் கிண்ண கால்பந்து கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியா வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. உலகின் முதல்நிலை அணியாகவும், நடப்புச் சம்பியன் அந்தஸ்துடனும் இருந்த ஜேர்மனி ஏமாற்றத்துடன் உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.
உலகக் கிண்ண கால்பந்து சம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறும் மோசமான வரலாறு கடந்த இருபது வருடங்களாக தொடர்கிறது. இதில் இறுதியாக 2014ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை வென்று சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனி இந்த முறையா முதல் சுற்றோடு வெளியேறியிருக்கின்றது.
நடப்புச் சம்பியன் வெளியேற்றம்: மெக்சிகோவை வீழ்த்திய சுவீடன் அடுத்த சுற்றில்
தென் கொரியாவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித்…
F பிரிவில் புதன்கிழமை (27) நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் ஜேர்மனி அணி, உலக கால்பந்து தரவரிசையில் 57ஆவது இடத்தில் உள்ள ஆசிய கண்டத்தைச் சேர்ந்த தென்கொரியாவை எதிர்கொண்டது.
இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் ஜேர்மனி அணி களம் கண்டது. நடப்பு சம்பியனும், உலகின் முதல்நிலை அணியுமான ஜேர்மனி அணியில் அதிக அளவில் நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றனர். அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோச்சிம் லோ அணியை சிறப்பாக வழிநடத்துவதில் ஆற்றல் படைத்தவர். இதனால் இந்தப் போட்டி தொடரில் சம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக ஜேர்மனி கருதப்பட்டது.
ஆனால் தென்கொரியா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணி தன் மீதான எதிர்பார்ப்பை நிறவேற்ற முடியாமல் ஏமாற்றம் அளித்தது. அந்த அணியினர் அதிக நேரம் பந்தை தன்வசம் வைத்திருந்தாலும் (70 சதவீதம்) கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. தென்கொரியா அணியின் தடுப்பு அரணை தகர்க்க ஜேர்மனி அணியினர் எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. தென்கொரிய அணியின் கோல்காப்பாளர் ஜோ ஹெயினூ அபாரமாக செயற்பட்டு ஜேர்மனி வீரர்களின் 20 இற்கும் மேற்பட்ட கோல்போடும் முயற்சிகள்ளை முறியடித்து சிம்மசொப்பனமாக விளங்கினார்.
கோல் எதுவும் பெற்றுக்கொள்ள முடியாது தவித்த ஜேர்மனி அணியினர் கடைசி கட்டத்தில் பதற்றத்துடன் விளையாட ஆரம்பித்தனர். அதனை தென்கொரியா அணியினர் சரியாக பயன்படுத்தி கொண்டனர். வீரர்கள் காயம் உள்ளிட்ட காரணங்களுக்க்காக (Injury tme/Additional time) வழங்கப்படும் மேலதிக நேரத்தில் தென்கொரிய அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கட்டாயம் வெற்றிபெற வேண்டிய நிலையில் களமிறங்கிய ஜேர்மனி, தென் கொரிய அணியின் கடைசி நிமிட கோல்கள் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியது.
1938 இற்குப் பிறகு அதாவது 80 வருடங்களுக்குப் பிறகு ஜேர்மனி உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளது. அதேபோன்று கடந்த 5 உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் கடந்த முறை உலகக் கிண்ண சம்பியன்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிய வரலாற்றுப் பட்டியலில் ஜேர்மனியும் இடம்பிடித்தது.
உலகக் கிண்ணத்திலிருந்து முதன்முறையாக முதல் சுற்றோடு வெளியேறிய நடப்புச் சம்பியன இத்தாலி அணிதான். கடந்த 1934, 1938ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களில் அந்த அணி உலச் சம்பியன் பட்டம் வென்றிருந்தது.
பிரேசில் நெருக்கடி இன்றி அடுத்த சுற்றில் : நொக் அவுட்டில் சுவீடனுடன் மோதும் சுவிட்சர்லாந்து
செர்பியாவுடனான தீர்க்கமான போட்டியில் வெற்றிபெற்ற…
இரண்டாவது உலகப் போர் காரணமாக 12 வருடங்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவில்லை. மீண்டும் 1950ஆம் ஆண்டு பிரேசிலில் உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடர் நடைபெற்றது. 1949ஆம் ஆண்டு இத்தாலியில் டொரினா கால்பந்து அணி வீரர்கள் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அனைத்து வீரர்களும் உயிரிழிந்தனர். விமானப் பயணத்துக்கு பயந்த இத்தாலி அணி கப்பல் மூலம் பிரேசில் வந்து சேர்ந்தது. முதல் ஆட்டத்தில் ஸ்வீடன் அணியிடம் 3-1 என்ற கோல்கள் கணக்கில் தோற்றது. அடுத்து பரகுவே அணியிடம் 2-0 என்று வெற்றி பெற்றாலும், ஸ்வீடன் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற, இத்தாலி சோகத்துடன் நாடு திரும்பியது.
1966ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரை பிரேசில் அணியால் மறக்க முடியாது. இந்தத் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இத்தாலி போன்றே முன்னதாக நடைபெற்ற இரு தொடர்களில் பிரேசில் அணி சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருந்தது. முதல் ஆட்டத்தில் பீலே, கரிஞ்சா கூட்டணி அசத்த பல்கேரியாவை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. பல்கேரியா வீரர்கள் பீலேவின் காலை குறி வைத்துத் தாக்க, அவர் காயமடைந்தார்.
இதனால் ஹங்கேரி அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் பீலேவால் களமிறங்க முடியவில்லை. ஹங்கேரி அணி பிரேசில் அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்தது. இந்த உலகக் கிண்ணத்தில் போர்த்துக்கல் அணி சம்பியன் பட்டத்தை வெல்லும் அணியாகக் கருதப்பட்டது. எஸ்பயோ தலைமையிலான போர்த்துக்கல் அணி இங்கிலாந்துக்கு வந்திருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் போர்த்துக்கல் 3-1 என்று பிரேசிலை எளிதாக வீழ்த்தியது. இதனால் முதல் சுற்றோடு பிரேசில் வெளியேறியது.
2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் முதன்முறையாக ஆசியாவில் நடைபெற்றது. ஜப்பானும், தென்கொரியாவும் போட்டியை நடத்தின. 1998ஆம் ஆண்டு உலகச் சம்பியன் மற்றும் 2000ஆம் ஆண்டு ஐரோப்பியச் சம்பியன் என்ற அந்தஸ்த்துடன் பிரான்ஸ் அணி காணப்பட்டது. தியரி ஹென்றி, மார்ஷல் டிஸெய்லி, இம்மானுவேல் பெடிட், பேட்ரிக் வியரா, டேவிட் ட்ரெஸ்குட், போர்தெஸ், ஜிடேன், கிளாட் மெக்கல்லே, லிலியன் துராம் என நட்சத்திரப் பட்டாளங்களால் பிரான்ஸ் அணி நிரம்பி வழிந்தது. செனகல் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் காயம் காரணமாக ஜிடேன் களமிறங்கவில்லை.
செனகல் முதல் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. உருகுவேக்கு எதிரான ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டியில் ஆக்ரோஷமான ஆட்டம் காரணமாக தியேரி ஹென்றிக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
டென்மார்க் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் தியேரி ஹென்றியால் விளையாட முடியவில்லை. அதேவேளையில், ஜிடேன் களமிறங்கியும் பலனில்லை. முடிவில், 2-0 என்ற கோல்கள் கணக்கில் டென்மார்க் வெற்றி பெற்று பிரான்ஸை முதல் சுற்றிலேயே வெளியேற்றியது. இன்னொரு சோகம் என்னவென்றால், இந்த உலகக் கிண்ணத் தொடரில் பிரான்ஸ் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதுதான்.
ஏ.சி. மிலான் கழகத்திற்கு ஓர் ஆண்டு தடை
நிதி ஒழுங்குகளை மீறியதாக இத்தாலியின் பிரபல கால்பந்து..
2010ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் இத்தாலி இடம்பெற்றிருந்த பிரிவில் தரவரிசையில் பின்னிலையில் உள்ள அணிகளே இருந்தன. நியூசிலாந்து, ஸ்லோவேகியா, பரகுவே அணிகளை எதிர்த்து முதல் சுற்றில் இத்தாலிக்கு விளையாட வேண்டியிருந்தது. இதில், பரகுவே மட்டுமே இத்தாலிக்கு போட்டியைக் கொடுக்கக் கூடிய அணியாக கருதப்பட்டது. இத்தாலிக்கு எளிதான பிரிவு கிடைத்துள்ளதாக அனைவரும் கருதினார்கள். ஆனால் இந்த பின்தங்கிய அணிகள் இத்தாலியைப் துவம்சவம் செய்துவிட்டன. நியூசிலாந்து, பரகுவே அணிகளுக்கிடையிலான போட்டி சமநிலையில் முடிந்தது.
கடைசி ஆட்டத்தில் ஸ்லோவேகியா அணியுடன் இத்தாலி வெற்றிபெற்றால் மாத்திரமே அடுத்த சுற்றுக்குள் நுழையலாம் என்ற கட்டாயத்தில் இத்தாலி போட்டியில் களமிறங்கியது. ஸ்லோவேகியா அணிக்கு இதுதான் முதல் உலகக் கிண்ணத் தொடராகும். அனுபவமிக்க இத்தாலி அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் ஸ்லோவேகியா வெற்றிபெற இத்தாலி அணி நடப்புச் சம்பியனாக உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறியது.
இறுதியாக 2014இல் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடர் நடப்புச் சம்பியனான ஸ்பெயின் அணிக்குக் மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. 2008ஆம் ஆண்டு ஐரோப்பியச் சம்பியன், 2010ஆம் ஆண்டு உலகச் சம்பியன், 2012ஆம் ஆண்டு ஐரோப்பியச் சாம்பியன் எனக் கால்பந்தில் ஸ்பெயினின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
லீக் சுற்றின் முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து ஸ்பெயினைத் தோற்கடித்தது. 5-1 என்ற கோல்கள் கணக்கில் ஸ்பெயின் நெதர்லாந்திடம் வீழ்ந்தது. அடுத்து, சிலி தன் பங்குக்கு 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது. நொந்து போன ஸ்பெயின் கடைசி ஆட்டத்தில் 3-0 என்ற கோல்கள் கணக்கில் அவுஸ்திரேலியாவை வென்றும் பலன் கிடைக்கவில்லை. எனவே 2014 உலகக் கிண்ண முதல் சுற்றுடன் ஸ்பெயின் வெளியேறியதோடு ஸேபி அலான்ஸோ, ஐகெர் கெசிலாஸ், ஜேவி போன்ற ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரர்கள் சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து விடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<