கட்டாரின் அல் பைத் அரங்கில் போட்டியை ஆரம்பிப்பதற்கான விசில் உரக்க ஒலித்தது. அதை ஊதியவர் ஸ்டபனி ப்ரபார்ட். ஆணல்ல பெண். ஆடவர் உலகக் கிண்ணத்தில் நடுவராக செயற்படும் முதல் பெண் தான் அவர்.
ஜெர்மனி மற்றும் கொஸ்டாரிகா அணிகளுக்கு இடையில் இலங்கை நேரப்படி டிசம்பர் மாதம் 02ஆம் திகதி அதிகாலை நடைபெற்ற போட்டி தீர்க்கமானதாக இருந்தது. ஜெர்மனி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை தீர்மானிப்பதாகவும் இருந்தது. அரங்கில் 70 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள், வீடுகளில், வீதிகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள், கைபேசிகள் என்று திரைகளுக்கு முன்னால் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்திருந்தனர்.
அந்தப் பரபரப்புக்கு மத்தியிலேயே ப்ரபார்ட் ஒரு பெண்ணாக மைதானத்தில் முழு போட்டியையும் வழி நடத்தினார்.
>> பிரான்ஸ் அதிர்ச்சித் தோல்வி; மேலும் 4 அணிகள் அடுத்த சுற்றில்
அவர் மாத்திரம் அல்ல, அந்தப் போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த நியுசா பாக் மற்றும் மெக்சிகோவின் கரன் டயஸ் ஆகிய பெண்களே உதவி நடுவர்களாகவும் செயற்பட்டார்கள். அதாவது போட்டியில் முழுவதுமாக பெண்களே நடுவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிடலாம்.
உண்மையில் இது வரலாற்று முக்கியம் வாய்ந்தது. கால்பந்து உலகம் தனது நடத்தையையே மாற்றிக் கொள்வதற்கு 92 ஆண்டுகள், 942 போட்டிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதாவது 1930 ஜூலை 13ஆம் திகதி முதல் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடந்தது தொடக்கம் 2022 டிசம்பர் 01ஆம் திகதி வரையில் ஆடவர் உலகக் கிண்ணத்திற்கும் பெண்களுக்கும் சம்பந்தம் இல்லாமலேயே இருந்தது.
அதுவும் கால்பந்து நிர்வாகத்தின் உயர் மட்டத்தில் இருந்தவர்கள் பெண்களை சில நேரம் தாழ்வாகவே மதித்தார்கள். சற்று காலத்துக்கு முன்னர் கூட அதாவது 2004இல் அப்போதைய சர்வதேச கால்பந்து சம்மேளன (பிஃபா) தலைவர் செப் பிளாட்டர், பெண் வீராங்கனைகளை மெல்லிய ஆடைகளை அணியுமாறு கூறியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
“கரப்பந்தாட்டம் போன்று பெண்கள் அதிகம் பெண்மைத் தன்மையை காட்டும் ஆடைகளை அணிய வேண்டும். அவர்களால் குட்டையான காற்சட்டைகளை அணிய முடியும்” என்றார் பிளாட்டர். கால்பந்தை பிரபலப்படுத்த அவர் கூறிய உத்தி தான் அது. ஆனால் அது பெண்களை எவ்வளவு கேவலப்படுத்துகிறது என்று அவருக்கு புரியவில்லை.
ப்ரபார்ட் பெண் நடுவர்களில் உயரத்தைத் தொட்டாலும் இம்முறை உலகக் கிண்ணத்தில் நியமிக்கப்பட்ட ஒரே பெண் நடுவர் இவரல்ல. மொத்தம் ஆறு
பெண்கள் நடுவர்களாக நியமிக்கப்பட்டார்கள். 2015இல் கனடாவில் நடந்த பெண்கள் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பெண் மற்றும் ஆண் நடுவர்களால் நெருக்கமாக செயற்பட முடிந்ததை பார்த்தே பிஃபா இந்த முடிவை எடுத்தது.
>> உலகக் கிண்ண நொக் அவுட்; இங்கிலாந்து–செனகல், நெதர்லாந்து–அமெரிக்கா மோதல்
ஓர் ஆண்டுக்குப் பின்னர் இரு பாலாரையும் சேர்ந்த 48 நடுவர்களுக்கு போட்டியில் முடிவுகளை எடுப்பது, ஆய்வு செய்வது பற்றி ஐந்து நாள் பயிற்சி அமர்வு நடத்தப்பட்டது. அப்போது உடல் தகுதியும் சோதிக்கப்பட்டது. அதிலும் ஆண்களுக்கு நிகராகவே பெண்களும் செயற்பட்டார்கள். ஆறு ஆண்டுகளின் பின் இந்த முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது.
38 வயதான ப்ரபார்ட்டின் பயணமே இதற்கு நல்ல உதாரணம். அவர் வடக்கு பாரிஸின் வால்டொயிஸில் ஒரு சிறுமியாக தனது கால்பந்து வாழ்வை ஆரம்பித்தார். 13 வயதிலேயே நடுவராக செயற்பட்டார். ஆரம்பத்தில் தொழில்சாரா கால்பந்து போட்டிகளில் நடுவராக செயற்பட்டார். போட்டி ஆரம்பிப்பதற்கு முன் எளிமையான உத்திகளை பயன்படுத்தினார். பந்தை சோதிப்பது, பந்தை துள்ளச் செய்வதில் ஆரம்பித்து நுட்பமான திறன்களை வெளிப்படுத்தினார். அதன்மூலம் போட்டியிடுபவர்களுடன் தம்மை ஐக்கியப்படுத்திக் கொள்வார்.
ஒரு சராசரியான கால்பந்து வீராங்கனையாக இருந்த ப்ரபார்ட் பல்கலைக்கழகத்தில் வைத்தே நடுவர் பணியில் அதிக அவதானம் செலுத்த ஆரம்பித்தார். அப்போதிருந்து அவர் அனைத்து தடைகளையும் தகர்த்து முன்னேற ஆரம்பித்தார். ஆடவர்களின் லீக் 2, பின்னர் லீக் 1, அதன் பின் ஐரோப்பிய சுப்பர் கிண்ணம், பின்னர் சம்பியன்ஸ் லீக் என்று ஆடவர் போட்டிகளில் முதல் பெண் நடுவராக வரலாறு படைத்த அவர் இப்போது ஆடவர் உலகக் கிண்ணத்தில் நடுவராக செயற்பட்டு உச்சத்தை தொட்டிருக்கிறார்.
ஆடவர் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இந்த ஆண்டின் பிரான்ஸ் கிண்ண இறுதிப் போட்டியிலும் நடுவராக பணியாற்றி இருக்கும் அவர் 2019இல் பெண்களுக்கான பிஃபா உலகக் கிண்ண இறுதிப் போட்டியிலும் நடுவராக செயற்பட்டார். எனவே அவரது அனுபவத்தையும் திறமையையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது.
பிரான்ஸ் கால்பந்தின் முக்கிய புள்ளிகள் 30 பேரின் பட்டியலை லிகியுபே சஞ்சிகை அண்மையிம் வெளியிட்டபோது அதில் ப்ரபார்ட் முதலிடத்தை பிடித்தார். அப்போது அவர் நட்சத்திர வீரர் கிலியன் ம்பாப்பேவை பின்தள்ளியதை சாதாரணமாகக் கொள்ள முடியாது. மைதானத்தில் கவர்த்திழுக்கும் வகையிலும், இராஜதந்திர ரீதியும் மனிதாபிமானமாகவும் அடக்கமாகவும் செயற்படுபவர் என்று அவருடன் பணியாற்றுபவர்கள் அவரைப் பற்றி கூறுகிறார்கள்.
>> ஐசிசி விதிமுறையை மீறிய ஹஸரங்கவுக்கு தண்டனை!
“எனது பாலை வைத்தன்றி எனது திறமை அடிப்படையில் என்னை மதிப்பிடுங்கள் என்று நான் எப்போதும் கூறுவேன்” என்று லே மொன்டே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
பாலின பாகுபாடு தமக்கு தடங்கலாக இருக்கவில்லை என்று ப்ரபார்ட் எப்போதும் கூறுவார். எனினும் 2015இல் இடம்பெற்ற எல்லோராலும் அறியப்பட்ட சம்பவம் பற்றி அவர் பொதுவெளியில் வாய் திறப்பதில்லை. பிரான்ஸின் வெலன்சியன்ஸ் கழக முகாமையாளர் டேவிட் லே பிரப்பர், “பெண்ணாக இருக்கும்போது ஆண்களின் விளையாட்டு ஒன்றில் நடுவராக வருவது சிக்கலானது” என்று முறையிட்டிருந்தார்.
அது ப்ரபார்ட்டை குறிப்பிட்டே கூறப்பட்டிருந்தது. எனினும் அதற்கு பிரப்பர் உடன் மன்னிப்புக் கேட்டிருந்தார்.
பெண்ணாக இருப்பதால் வீரர்கள், முகாமையாளர்கள் அல்லது ரசிகர்களிடம் இருந்து போட்டியின்போதும் ஏதாவது பேச்சுக்கு முகம்கொடுத்திருக்கிறீர்களாக என்று ப்ரப்பார்ட்டிடம் கேட்டபோது, “எனக்கு ஆரம்பத்தில் இருந்து அணிகள், கழகங்கள் மற்றும் வீரர்களிடம் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது. அரங்கிலும் எனக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. எனவே மைதானத்தில் நான் மற்றொரு நடுவராக மாத்திரமே உணர்கிறேன்” என்று பதிலளித்தார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<