மொரோக்கோவின் இரும்புச் சுவர் யாசின் பவுனு

349
Morocco’s Iron Wall

“பெனால்டி என்பது கொஞ்சம் அதிர்ஷ்டம், கொஞ்சம் உள்ளுணர்வு சார்ந்தது” என்று யாசின் பவுனு கூறியதில் தப்பு இருக்காது. ஏனென்றால் அவர் தான் மொரோக்கோ அணியை உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி வரை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஸ்பெயினுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் முழு நேரம், வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் பெறவில்லை. ஸ்பெயினின் இரு நெருக்கமான கோல் வாய்ப்புகளை மொரோக்கோ கோல்காப்பாளரான பவுனு தடுத்ததும் ஒரு காரணம்.

>> ஸ்பெயினுக்கு அதிர்ச்சி கொடுத்த மொரோக்கோ போர்த்துக்கலுடன் காலிறுதியில் மோதல்

எப்படியோ போட்டி பெனால்டி சூட் அவுட்டுக்கு சென்றபோது வெற்றி என்பது கோல் காப்பாளரின் கைகளில் தான் இருக்கும். ஒரு பெனால்டியை தடுத்தால் கூட ஆயிரம் கோல்களை தடுத்ததற்கு சமம் என்பது சற்று மிகைப்படுத்தலாக இருந்தாலும் வெற்றிக்கு தீர்க்கமானது.

இரண்டாவது பெனால்டி உதையையே ஸ்பெயின் பெற்றது. ஏற்கனவே மொரோக்கோ முதல் உதையை வலையில் செலுத்தி இருந்தது. உலகமே பார்க்கும் பதற்றமான சூழலில் பந்தை உதைக்கவந்தவர் பப்லோஸ் சரபியா. போட்டியின் மேலதிக நேரம் முடிவதற்கு சற்று முன்னர் கூட அவர் நூலிழையில் கோல் ஒன்றை தவறவிட்டிருந்தார்.

ஆனால் பவுனு பந்தை தடுத்த பாணி வித்தியாசமானது. கோல் கம்பந்துக்கு வெளியில் எந்தப் பக்கமாக உதைக்கப் போகிறார் என்பதை ஊகிப்பதற்கு நடனமாடிக்கொண்டிருந்தார்.  சரபியா தனது இடது காலால் வலதுபக்கமாக உதைக்க அந்தப் பக்கமாவே பாய்ந்தார் பவுனு. பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

>> ஆண்களின் உலகில் கால் பதித்த முதல் பெண் நடுவர்

ஸ்பெயின் சார்பில் இரண்டாவதாக பந்தை உதைக்க வந்த கார்லொஸ் சோலர் வலது பக்கமாக உதைத்த பந்தை தடுத்த பவுனு, பின்னர் செர்பியோ இடது பக்கமாக உதைத்த பந்தையும் வலைக்குள் செல்லாமல் தடுத்தார்.

பவுனு கூறியது போல் உள்ளுணர்வு, அதிர்ஷ்டம் எல்லாம் ஒரு புள்ளியில் செயற்பட முன்னாள் சம்பியன் ஸ்பெயினின் மூன்று பெனால்டி சூட் அவுட் முயற்சிகளையும் அவரால் தடுக்க முடிந்தது.

இதன் மூலம் மொரோக்கோ அணி உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறை காலிறுதிக்கு முன்னேறியது. இது மொரோக்கோவுக்கு மாத்திரம் மகிழ்ச்சியானதாக இருக்கவில்லை. ஒட்டுமொத்த ஆபிரிக்கா மற்றும் அரபு உலகுக்கு மகிழ்ச்சியான செய்தி.

“அனைத்து வீரர்கள் சார்பிலும், இந்த சவாலை வெல்ல உதவிய அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றியை கூறிக்கொள்கிறேன். அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவிப்பதோடு அனைத்து மொரோக்கோ மக்களுக்காகவும் இதனை பரிசாக வழங்குகிறேன்” என்று போட்டிக்குப் பின்னர் பவுனு கூறினார்.

போட்டி நடந்த கட்டாரின் கல்வி அரங்கில் இரண்டில் மூன்று பங்கு இருக்கைகளை மொரோக்கோ ரசிகர்கள் தான் நிரப்பி இருந்தார்கள். அது கூட மொரோக்கோவின் உத்வேகத்துக்கு காரணமாக இருந்தது.

போட்டிக்குப் பின்னர் உலகமே உற்றுப்பார்க்கும் வீரராக மாறியிருப்பவர் யாசின் பவுனு. உண்மையில் அவர் கனடா தேசிய கால்பந்து அணியில் இடம்பெற வேண்டியவர்.

31 வயதான பவுனு பிறந்தது கனடாவின் மொட்ரியல் நகரில். அவரின் பெற்றோர் கனடாவுக்கு புலம்பெயர்ந்திருந்தார்கள். இதனால் பவுனு கனேடியப் பிரஜையாகவும் இருந்தார். தனது கால்பந்து விளையாட்டை அவர் அங்கு தான் ஆரம்பித்தார்.

>> பீலேவின் உலக சாதனையை முறியடித்த கிலியன் எம்பாப்வே

ஆனால் அவரது குடும்பம் மொரோக்கோ திரும்பியதால் பவுனுவின் பாதை மாறியது. அவர் மொரோக்கோவையே தனது கால்பந்து எதிர்காலமாக தேர்ந்தெடுத்தார்.

6 அடி 5 அங்குலம் உயரமான பவுனு கோல் காப்புக்கே பிறந்தவர். மொரோக்கோவின் வைடாட் அணிக்காக 2011இல் தனது தொழில்முறை கால்பந்தை ஆரம்பித்த அவர் 2012 இல் ஸ்பெயினின் முன்னணி கழகமான அட்லெடிகோ மட்ரிட்டுக்கு சென்றார். அந்தக் கழகத்தில் இரண்டாம் அணியில் இடம்பெற்ற அவர் திபவுட் கோடொய்ஸ் மற்றும் டானியேல் அரன்சுபியாவின் வெளியேற்றத்தின் பின் பிரதான அணியில் இடம்பெற்றார்.

என்றாலும் 2014இல் இரண்டாம் பிரிவு கழகமான ரியல் சரகொசாவுக்கு மாற்றப்பட்ட அவர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்தக் கழகம் லா லிகாவுக்கு தரமுயர்த்தப்படுவதற்கு உதவினார். அடுத்து அவர் சென்ற கழகம் கிரோனா. அந்தக் கழகமும் லா லிகாவுக்கு முன்னேறுவதற்கு உதவினார்.

2019இல் செவில்லா கழகத்திற்கு சென்ற புவுனு, ஐரோப்பிய லீக்கில் தனது பெயரை பதித்தார். இன்டர் மிலானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அந்த அணி வெற்றி பெற அவரது கோல் காப்பு பெரிதும் உதவியது.

2021-22 பருவத்தில் தனது ஆட்டத்திற்காக பவுனு சமோரா விருதை வென்றார். ஸ்பெயின் லீக்கில் ஆண்டு தோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கோல் காப்பாளருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த விருதை வெல்லும் முதல் மொரோக்கோ நாட்டவர் மற்றும் செவில்லா வீரராகவும் இருந்தார்.

2022இன் சிறந்த கோல் காப்பாளருக்கான பிரான்ஸ் கால்பந்தின் யாஷின் விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் பவுனுவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இது உலகின் கோல் காப்பாளருக்கான உயரிய விருதுகளில் ஒன்று. இதன்போது அவர் ரியல் மெட்ரிட்டின் திபவுட் கொர்டொயிஸ் மற்றும் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்புரின் ஹியுகோ லோரிஸ் போன்ற வீரர்களுடன் இடம்பெற்றிருந்தார்.

அதேபோன்று 20 வயதுக்கு உட்பட்ட மொரோக்கோ தேசிய அணியில் இடம்பெற்ற அவர் 2012 ஒலிம்பிக் போட்டியிலும் ஆடினார்.

>> அதிரடி வெற்றியுடன் குரோசியாவுடனான காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

பின்னர் 2013இல் பவுனு, மொரோக்கோ தேசிய அணிக்கு அழைக்கப்பட்டது அவர் கழக மட்டத்திலும் பிரகாசிக்க உதவியது. மொரோக்கோ ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய 2018 உலகக் கிண்ணப் போட்டி மற்றும் 2019 ஆபிரிக்க கிண்ணத்திலும் மொரோக்கோவின் கோல் காப்பாளர் பவுனு தான்.

மொரோக்கோ என்பது இம்முறை உலகக் கிண்ணத்தில் காலிறுதிக்கு முன்னேறி இருக்கும் எதிர்பாராத ஓர் அணி. உலகக் கிண்ண வரலாற்றிலேயே ஆபிரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்த ஓர் அணி கடைசி எட்டு அணிக்கு முன்னேறி இருப்பது கூட இது நான்காவது முறை தான்.

யாசின் பவுனு கோல் கம்பத்துக்கு முன்னால் அரணாக இருப்பது மாத்திரமல்ல அந்த அணி முழுமையாக இம்முறை உலகக் கிண்ணத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறது.

ஆரம்ப சுற்றில் பெல்ஜியம் மற்றும் கனடாவை வீழ்த்தி இப்போது ஸ்பெயினை வெளியேற்றி இருக்கிறது. கடந்த முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டிவரை முன்னேறிய குரோசியாவுக்கு எதிரான ஆட்டத்தை சமன் செய்தது.

கட்டாரில் இதுவரை 400 நிமிடங்களுக்கு மேல் கால்பந்து ஆடி இருக்கும் மொரோக்கோ ஒரே ஒரு கோலையே விட்டுக்கொடுத்திருக்கிறது. மொரோக்கோ மேலும் அதிர்ச்சிகள் கொடுக்க வேண்டுமானால் யாசின் பவுனு தனது கோல் காப்பு மூலம் மேலும் அதிர்ச்சி கொடுக்க வேண்டும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<