பெனால்டி ஷூட் அவுட் வரை நீண்ட பரபரப்பான உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியீட்டிய லியோனல் மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி 36 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
கட்டாரின் லுசைலா ஐகோனிக் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (18) நடந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதல் பாதியில் ஆர்ஜன்டீனா முழு ஆதிக்கத்தை செலுத்தியபோதும் கிலியன் ம்பப்பே இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து பெற்ற கோல்கள் பெரும் திருப்பமாக மாறியதோடு வழங்கப்பட்ட மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் தலா ஒரு கோல் பெற ரசிகர்கள் இருக்கை நுனி வரை சென்றனர்.
>> மொரோக்கோவை வீழ்த்தி குரோஷியா 3ஆம் இடம்
எனினும் முடிவை தீர்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஆர்ஜன்டீனா வெற்றியீட்டியது.
இதில் 35 வயதான மெஸ்ஸி இரட்டை கோல்களுடன் உலகக் கிண்ணத்தை சுவீகரித்து உலகக் கிண்ணத்திற்கு உச்ச முடிவுடன் விடைகொடுத்தார். எனினும் 1966ஆம் ஆண்டுக்குப் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஹெட்ரிக் கோல் பெற்ற பிரான்ஸின் ம்பப்வேவுக்கே தங்கப் பாதணி கிடைத்தது.
இந்த உலகக் கிண்ணத்தில் மெஸ்ஸி 7 கோல்களை பெற்ற நிலையில் ம்பப்பே மொத்தம் 8 கோல்களை பெற்று அந்த கௌரவத்தை தட்டிச் சென்றார்.
போட்டியின் ஆரம்பத்தில் ஆர்ஜன்டீனாவின் வேகத்துக்கு நடப்புச் சம்பியனான பிரான்ஸுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனது. 21ஆவது நிமிடத்தில் வைத்து பிரான்ஸ் பெனால்டி பெட்டிக்குள் ஒஸ்மானே டம்பலே தவறிழைக்க ஆர்ஜன்டீன அணிக்கு பெனால்டி கிடைத்தது.
>> இன்னும் ஒரு முறை சண்டை செய்வோம் – மெஸ்ஸி
அதனை இலகுவாக வலைக்குள் செலுத்தி ஆர்ஜன்டீனாவை முன்னிலை பெறச் செய்தார் மெஸ்ஸி.
தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் அலெக்ஸ் மக் அலிஸ்டயர் வேகமாக வழங்கிய பந்தை அங்கேல் டி மரியோ இடது காலால் உதைத்து ஆர்ஜன்டீனாவுக்கு இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.
முதல் பாதியில் ஆர்ஜன்டீனாவின் ஆக்கிரமிப்பு ஆட்டம் மற்றும் அபார பந்துப் பரிமாற்றத்திற்கு மத்தியில் இறுதிப் போட்டியில் அந்த அணி இலகு வெற்றி ஒன்றை நோக்கியே சென்றது.
முதல் பாதி: ஆர்ஜன்டீனா 2 – 0 பிரான்ஸ்
முதல் பாதியில் பிரான்ஸ் அணி பந்தை கால்களில் தக்கவைக்கவே தட்டுத் தடுமாறியது. அது ஒரு தடவை கூட பந்தை எதிரணி பெனால்டி பெட்டிக்குள் எடுத்துச் செல்லவில்லை. இந்த நிலை இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில் நீடித்தபோதும் போட்டி முழு நேரத்தை நெருங்கிய நிலையில் ம்பப்பே ஆட்டத்தை முழுமையாக திசை திருப்பினார்.
79ஆவது நிமிடத்தில் வைத்து ஆர்ஜன்டீன வீரர் நிகொலஸ் ஒடமெண்டி செய்த தவறால் பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதனை 80ஆவது நிமிடத்தில் கோலாக மாற்றினார் ம்பப்பே.
அந்த கோல் பெற்று ஒரு நிமிடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து ம்பப்பே அபார கோல் ஒன்றை புகுத்தினார். மார்கஸ் டுராம் வழங்கிய பந்தை எதிரணி பெனால்டி பெட்டிக்கு அருகில் வைத்து பெற்ற ம்பப்பே வலது காலால் வேகமாக உதைத்து கோலாக்கினார்.
இந்த கோலுடன் போட்டியின் முழு நேரம் முடியும்போதும் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றதால் ஆட்டம் மேலதிக நேரத்திற்கு சென்றது.
முழு நேரம்: ஆர்ஜன்டீனா 2 – 2 பிரான்ஸ்
முப்பது நிமிட மேலதிக நேரத்திற்குச் சென்ற ஆட்டத்தில் இரு அணிகளும் சரிக்கு சமமாக போராடின. மாறிமாறி எதிரணி கோல் கம்பங்களை ஆக்கிரமித்ததால் ஆட்டம் உச்ச பரபரப்பை எட்டியது.
எனினும் 108ஆவது நிமிடத்தில் வைத்து மெஸ்ஸி, பிரான்ஸின் கோல் கம்பத்திற்கு நெருக்கமாக இருந்து வலைக்கு பந்தை செலுத்தியபோது ஆர்ஜன்டீனாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாக இருந்தது. இந்த கோல் ஆரம்பத்தில் ஓப் சைட் என மறுக்கப்பட்டபோதும் அது பின்னர் ஏற்கப்பட்டது.
மேலதிக நீரத்தில் இன்னும் 15 நிமிடங்களுக்கு குறைவான நேரமே எஞ்சியிருக்கும் சூழலில் மற்றொரு திருப்பமாக பிரான்ஸுக்கு மற்றொரு பெனால்டி கிடைத்தது.
>> T20 போட்டியில் 15 ஓட்டங்கள் ; வரலாற்றில் மிக மோசமான சாதனை!
ம்பப்பே பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து உதைத்த பந்தை பெனால்டி பெட்டிக்குள் இருந்து கொசாலோ மொன்டியல் தடுக்க முயன்றபோது அவரை அறியாமலேயே பந்து அவரின் கையில் பட்டு வெளியேற பிரான்ஸுக்கு பெனால்டி வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திக்கொண்ட ம்பப்பே தனது ஹெட்ரிக் கோலை செலுத்தினார்.
1966ஆம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்திய இங்கிலாந்தின் செர் ஜெப் ஹர்ஸ்ட் ஹெட்ரிக் கோல் பெற்ற பின் அந்த சாதனை படைத்த இரண்டாவது வீரராக ம்பப்பே பதிவானார்.
இதன் மூலம் மேலதிக நேரம் முடியும்போதும் ஆட்டம் சமநிலையிலேயே இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட்டில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
மேலதிக நேரம்: ஆர்ஜன்டீனா 3 – 3 பிரான்ஸ்
உலகக் கிண்ண வரலாற்றில் 1994 மற்றும் 2006 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண இறுதிப் போட்டி பெனால்டி ஷூட் அவுட் வரை நீண்ட நிலையில் முதல் பெனால்டி வாய்ப்புகளையும் ம்பப்பே மற்றும் மெஸ்ஸி வலைக்குள் செலுத்தினர்.
எனினும் ஆர்ஜன்டீன கோல் காப்பாளர் எமிலியானோ மர்டினஸ், பிரான்ஸின் கிங் கொமன் மற்றும் அவ்ரலியன் டவ்ஹாமனியின் பெனால்டிகளை தடுத்த நிலையில் கொசலோ மாட்டியேலின் உதை வலைக்குள் செல்ல ஆர்ஜன்டீனாவின் வெற்றி உறுதியானது.
ஆர்ஜன்டீனா 1978 மற்றும் 1986 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. மறுபுறம் 1962இல் பிரேசிலுக்குப் பின்னர் அடுத்தடுத்து உலகக் கிண்ணத்தை வெல்லும் பிரான்ஸின் முயற்சி வீணானது.
>> சுபர் ஜயண்ட்ஸ் அணியில் விளையாடவுள்ள அகில தனன்ஜய
அடுத்த பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டி 2026 ஆம் ஆண்டு ஜூன் – ஜூலையில் கனடா, மெக்சிகோ மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
- தங்கப்பந்து: உலகக் கிண்ணத்தின் தொடர் நாயகனுக்கான தங்கப்பந்து விருது மெஸ்ஸிக்கு கிடைத்தது. 7 கோல்களை பெற்ற அவர் 3 உதவிகளை வழங்கினார்.
- தங்கப் பாதணி: உலகக் கிண்ணத்தில் இருந்து விடைபெற்ற மெஸ்ஸியை விட ஒரு கோலால் (08) முன்னிலை பெற்ற 23 வயது கிலியன் ம்பப்பே தங்கப் பாதணி விருதை வென்றார்.
- தங்கக் கையுறை: உலகக் கிண்ணத்தில் சிறந்த கோல்காப்பாளருக்கு வழங்கப்படும் தங்கக் கையுறையை ஆர்ஜன்டீன கோல் காப்பாளர் எமிலியானோ மார்டினஸ் கைப்பற்றினார்.
- இளம் வீரர் விருது: இம்முறை உலகக் கிண்ணத்தில் இளம் வீரருக்கான விருது ஆர்ஜன்டீனாவின் 21 வயது மத்திய கள வீரர் என்சோ பெர்னாண்டஸுக்கு கிடைத்தது.
42 மில்லியன் டொலர்: உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜன்டீனாவுக்கு 42 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்ததோடு இரண்டாம் இடம் பிடித்த பிரான்ஸுக்கு 30 மில்லியன் டொலர் பரிசு கிடைத்தது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<