போட்டியை நடாத்தும் ரஷ்யா, பெரும் கோல் மழையுடன் இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது. சவூதி அரேபியாவுக்கு எதிராக வியாழக்கிழமை (14) நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்ய அணி 5-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் எந்த எதிர்ப்பும் இன்றி வெற்றிபெற்றது.
ரஷ்ய தலைநகரான மொஸ்கோவில் உள்ள லூஸ்நிக்கி மைதானத்தில் (Luzhniki Stadium) நடைபெற்ற ஆரம்ப போட்டியின் 12 ஆவது நிமிடத்தில் அலெக்சன்ட்ர் கிளொவின் பரிமாற்றிய பந்தை பெற்ற யூரி கசின்ஸ்கி தலையால் முட்டி இம்முறை உலகக் கிண்ணத்தின் முதல் கோலை பெற்றார்.
உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை
முதல் பாதி ஆட்டம் முடிவதற்குள்ளேயே மேலதிக வீரராக வந்த டானியல் சரிசேவ் பெனால்டி எல்லைக்குள் இரு சவூதி பின்கள வீரர்களை முறியடித்து ரஷ்ய அணிக்காக இரண்டாவது கோலைப் புகுத்தினார்.
போட்டி ஆரம்பித்தது முதல் ஆதிக்கம் செலுத்த தவறிய சவூதி அணி எதிரணிக்கு இலகுவான வாய்ப்புகளை விட்டுக்கொடுக்கும் வகையில் பலவீனமான ஆட்டத்தில் ஈடுபட்டது. சவூதி அணி ஒரு பந்தைக்கூட எதிரணி கோல் இலக்கை நோக்கி உதைக்காத நிலையில் ரஷ்ய அணி இந்த போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
குறிப்பாக இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்றிருக்கும் 32 அணிகளில் பீஃபா தரவரிசையில் அதிக பின்தங்கிய அணிகள் இரண்டாகவே ரஷ்யாவும், சவூதியும் ஆரம்ப போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பிஃபா தரவரிசையில் ரஷ்யா ரஷ்யா 70 ஆவது இடத்தில் இருப்பதோடு சவூதி மூன்று இடங்கள் முன்னேறி 67 ஆவது இடத்தில் உள்ளது.
முதல் பாதி: ரஷ்யா 2 – 0 சவூதி அரேபியா
அரங்கில் பாரிய அளவிளான பச்சை நிற ஆடைகள் அணிந்த சவூதி ரசிகர்கள் குழுமியிருந்தபோது சவூதி அணியால் அவர்களை திருப்தி செய்ய முடியவில்லை. முதல் பாதி போன்றே இரண்டாவது பாதி ஆட்டத்திலும் ரஷ்ய அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது.
போட்டியின் 71 ஆவது நிமிடத்தில் மற்றுமொரு மேலதிக வீரராக வந்த ஆர்டெம் ட்யுமா ரஷ்யாவுக்காக மூன்றாவது கோலைப் புகுத்தினார். இதனைத் தொடர்ந்து சரிசேவ் அபாரமான நான்காவது கோலை புகுத்தினார். 91 ஆவது நிமிடத்தில் பந்தை உயர செலுத்தி வலையின் மேல் பகுதியில் புகுத்தி ரஷ்யாவை 4-0 என முன்னிலை பெறச் செய்தார்.
2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்
போட்டியின் மேலதிக நேரத்திலும் ரஷ்யா கோல் புகுத்துவதை நிறுத்தவில்லை. 25 யார் தூரத்தில் இருந்து அலக்சன்டர் க்ளோவின் அடித்த பந்து சவூதி வீரர்கள் பார்த்திருக்க வலைக்குள் நுழைந்தது.
இதன் மூலம் 1934 உலகக் கிண்ணத்தில் அமெரிக்காவை இத்தாலி அணி 7-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்ற பின்னர் உலகக் கிண்ண ஆரம்ப போட்டியில் போட்டியை நடாத்தும் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியை ரஷ்ய அணியால் பதிவு செய்ய முடிந்தது.
உலகக் கிண்ணத்தின் A குழுவுக்காக நடந்த இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ரஷ்யாவால் 3 புள்ளிகளை பெற முடிந்தது.
முழு நேரம்: ரஷ்யா 5 – 0 சவூதி அரேபியா
கோல் பெற்றவர்கள்
ரஷ்யா – யூரி கசின்ஸ்கி 12′, டானியல் சரிசேவ் 43, 90’+1’, ஆர்டெம் ட்யுமா 71′, அலக்சன்டர் க்ளோவின் 90’+4’
ரொனால்டோவின் உதையோடு ஆரம்பம்
போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 80,000 ரசிகர்கள் கூடிய மொஸ்கோ அரங்கில் பிரித்தானிய நாட்டு பிரபல பொப் பாடகர் ரொப்பின் வில்லியம்ஸ் மற்றும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ வண்ணமயமாக நிகழ்ச்சிகளுடன் 2018 உலகக் கிண்ணத்தை தொடங்கி வைத்தார்.
ரஷ்யாவின் சொப்ரானோ அய்டாவுடன் இணைந்து வில்லியம்ஸ் தனது பிரபல பாடல்களில் ஒன்றை இசைத்ததோடு, உலகக் கிண்ணத்தை ஆரம்பிக்கும் வகையில் ரொனால்டோ பந்தை உதைத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரை நிகழ்த்தி, உலகக் கிண்ண கால்பந்து போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படுவதாக பிரகடனம் செய்தார்.
இதன் போது 2010 உலகக் கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணியின் தலைவர் இகர் கசிலஸ் மற்றும் ரஷ்ய நாட்டு அழகியான நடாலியா வெடியனோவா உலகக் கிண்ணத்தை மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.
உலகக் கிண்ணத்தில் எதிர்பார்க்கப்படும் 10 வீரர்கள்
போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்ற ஆரம்ப விழாவை அடுத்து மைதானம் ரஷ்யா மற்றும் சவூதி அரேபியா மோதும் உலகக் கிண்ணத்தின் முதல் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பமானது.
நான்கு அண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ண போட்டி 32 நாடுகளுடன் ஒரு மாத காலம் நீடிக்கவுள்ளது. எட்டுக் குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆரம்ப சுற்று போட்டிகள் நடைபெறுவதோடு கிண்ணத்தை வெல்வதற்காக 32 நாட்களில் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும்.
இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் ரஷ்யாவின் 1,800 மைல்களுக்கும் அதிகமான பகுதியை உள்ளடக்கிய 11 நகரங்களில் 12 மைதானங்களில் நடைபெறுகின்றன.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<