இந்தியாவில் நடைபெற்றுவரும் 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கிண்ணத்திற்கான உரிமையாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து மற்றம் ஸ்பெயின் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
முதல்முறையாக ஐரோப்பாவின் இரு அணிகள் இளைஞர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆடவுள்ள நிலையில், 17ஆவது இளைஞர் உலகக் கிண்ணத்தில் புது அணி ஒன்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கவுள்ளது. எனவே, வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண இறுதிப் போட்டி அனைவரது எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது.
FIFA இளையோர் உலகக் கிண்ண அரையிறுதி மோதல்கள் நாளை
இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வயதுக்கு உட்பட்ட FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடர் …
நேற்று (25) கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் மூன்று முறை சம்பியன் பட்டம் வென்ற பிரேசிலை 3-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து முதல் முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அதேபோன்று, சக ஐரோப்பிய அணியான ஸ்பெயின் மும்பையில் நேற்று நடந்த மற்றைய அரையிறுதியில் கடந்த தொடரில் இரண்டாவது இடத்தை பெற்ற மாலி அணியை வென்றது.
இளைஞர் உலகக் கிண்ணத்தில் இதுவரை அதிகபட்சம் காலிறுதிக்கு முன்னேறி இருக்கும் இங்கிலாந்து முதல் முறை இறுதிப் போட்டியில் ஆடவுள்ளது. ஸ்பெயின் 1991, 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிவரை முன்னேறி தோற்ற நிலையில் முதல் முறை கிண்ணத்தை வெல்ல எதிர்பார்த்துள்ளது.
இதன்படி செல்ட் லேக் அரங்கில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டி குரோஷியாவில் கடந்த மே மாதம் நடந்த 17 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய சம்பியன்சிப்ஸ் இறுதிப் போட்டியின் மறுவடிவமாக அமையவுள்ளது. அந்த போட்டியிலும் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகளே மோதின. இதன் முழு நேர முடிவில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை போட, ஸ்பெயின் பெனால்டி முறையில் 4-1 என வென்றது.
ஒரே கூட்டமைப்பைச் சேர்ந்த இரு நாடுகள் இறுதிப் போட்டியில் சந்திப்பது இது மூன்றாவது முறையாகும். முந்தைய இரு சந்தர்ப்பங்களிலும் இரு ஆபிரிக்க நாடுகளே இறுதிப் போட்டியில் ஆடியுள்ளன. 1993 ஆம் ஆண்டு ஜப்பானில் நடந்த தொடரில் நைஜீரியா எதிர் கானா அணிகள் மோதியதோடு, 2015 ஆம் ஆண்டு சிலியில் நடந்த தொடரில் நைஜீரியா எதிர் மாலி அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இந்த உலகக் கிண்ணத்தில் வெற்றி வாய்ப்பை அதிகம் பெற்றிருந்த பிரேசில் அணிக்கு அரையிறுதியில் வைத்து இங்கிலாந்து முன்கள வீரர் ரியான் ப்ரூஸ்டர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.
கொல்கத்தாவில் 63 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் முன் நடைபெற்ற போட்டியின் 10ஆவது நிமிடத்திலேயே லிவர்பூல் வீரரான ப்ரூஸ்டோ கோல் புகுத்தினார். எனினும் பிரேசிலின் பின்கள வீரர் வெஸ்லி 21 ஆவது நிமிடத்தில் பதில் கோல் புகுத்தி கோல் நிலையை 1-1 என சமன் செய்தார்.
எனினும், ப்ரூஸ்டோ மீண்டும் 39 மற்றும் 77ஆவது நிமிடங்களில் கோல் புகுத்த இங்கிலாந்து அணி போட்டியை 3-1 என வெற்றிபெற்றது. ஹெட்ரிக் கோல் புகுத்திய 17 வயதுடைய ப்ரூஸ்டோ இம்முறை உலகக் கிண்ண போட்டியில் அதிகபட்சம் 7 கோல்களை பெற்று தங்க பாதணி வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
17 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண வரலாற்றில் இதற்கு முன்னர் மூன்று வீரர்கள் மாத்திரமே ஹட்ரிக் கோல் பெற்றுள்ளனர். இதன்படி ஜெர்மனியின் மார்சல் விட்செக் (1985), பிரான்சின் பிளோரன்ட் பொன்கோல் (2001) மற்றும் ஐவரிகோஸ்டின் சுலைமான் குலிபாலி (2011) ஆகியோருடன் தற்பொழுது ப்ரூஸ்டோவும் இணைந்துள்ளார்.
நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக…
நவி மும்பையில் நடந்த மற்றைய அரையிறுதியில் ஐரோப்பிய சம்பியன் ஸ்பெயின், ஆபிரிக்க சம்பியனான மாலியின் ஆதிக்கத்தை முறியடித்தது. முதல் பாதியில் அணித் தலைவர் அபெல் ருயிஸ் இரு கோல்களை போட ஸ்பெயின் 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் 71 ஆவது நிமிடத்தில் பெர்ரன் டொர்ரஸ் ஸ்பெயின் சார்பில் மற்றொரு கோலை போட்டதன் மூலம் அந்த அணி வலுவாக முன்னிலை பெற்றது.
போட்டியின் 74 ஆவது நிமிடத்தில் மாலி ஆறுதல் கோல் ஒன்றை போட்டபோதும் ஸ்பெயின் 3-1 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வென்றது.
இதன்படி இளைஞர் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்காக பிரேசில் மற்றும் மாலி அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி கொல்கத்தாவில் வரும் சனிக்கிழமை (28) மாலை 5 மணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெறும்.