சர்வதேச கால்பந்து சம்மேளனங்களின் சங்கம் (FIFA) இலங்கை கால்பந்து சம்மேளனத்தினை அதிரடியான முறையில் தடை செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
>> கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தற்காலிக தடை நீக்கம்
அதன்படி இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு எதிரான தடையானது 21.01.2023 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படுவதாக FIFA உத்தியோகபூர்வ கடிதம் மூலமாக அறிவித்திருப்பதோடு இந்த தடை மறு அறிவித்தல் வரையில் அமுலில் இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்குள் மூன்றாம் நபர்களின் தலையீடு இருப்பதனை கருத்திற் கொண்டே தடை உத்தரவை வழங்கியிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
கடந்த வாரம் விமர்சனங்களுக்கு மத்தியில் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாக சபை தேர்தல்கள் நடைபெற்றிருந்ததனை அடுத்து இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் வழங்கிய நீதிமன்ற மனுவிற்கு அமைய புதிய நிர்வாக சபை தங்களது பொறுப்புக்களை ஏற்பதில் தற்காலிக தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இந்த தற்காலிக தடையுத்தரவு நீக்கப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றிலேயே இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தடை உத்தரவானது கிடைத்திருக்கின்றது.
மறுமுனையில் இந்த தடை உத்தரவு இருக்கும் காலத்திற்குள் இலங்கை கால்பந்து சம்மேளனம், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அங்கத்துவத்தினை இழந்திருக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
>> இலங்கை கால்பந்தின் தலைவரானார் ஸ்ரீ ரங்கா; ஜஸ்வர் தகுதி நீக்கம்
அத்துடன் தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் இலங்கை கால்பந்து சம்மேளன பிரதிநிதிகளாலோ அல்லது கழக அணிகள் மூலமாகவோ சர்வதேச தொடர்களில் பங்கெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இன்னும் தடை அமுலில் உள்ள சந்தர்ப்பத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கோ அல்லது அதன் உத்தியோகபூர்வ அதிகாரிகளுக்கோ சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் அல்லது ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் (AFC) மூலம் கிடைக்கின்ற அனைத்து வகையான வெகுமதிகளும் (Benefits) நீக்கப்பட்டிருக்கின்றன.
>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<