சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனமானது (FIFA), இந்திய கால்பந்து சம்மேளத்தின் (AIFF) உரிமத்தை ரத்து செய்வதாக செவ்வாய்க்கிழமை (16) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பின்படி, மூன்றாம் தரப்பினரின் முறையற்ற தலையீடு காரணமாக இந்திய கால்பந்து சம்மேளனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுகின்றது என பிபாவின் பொதுச் சபையில் ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- SAFF 17 வயதின்கீழ் கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில்
- சொலிட்டை துவம்சம் செய்த பெலிகன்ஸ்; பொலிஸ் அணிக்கு முதல் வெற்றி
- வெற்றிகளை குவித்த ஜாவா லேன், மாத்தறை சிடி; சோபிக்க தவறிய செரண்டிப்
இந்திய கால்பந்து சம்மேளனத்தின் இந்த முறையற்ற செயற்பாடானது பிபாவின் சட்ட திட்டங்களை மீறும் செயற்பாடு என தெரிவித்துள்ள பிபா, இந்திய கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகம் அதன் செயற்பாடுகளை மீண்டும் உரிய முறையில் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் இந்த தடை நீக்கப்படும் எனவும் குறித்த ஊடக அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த தடையினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் இந்தியாவில் இடம்பெறவிருந்த 17 வயதின்கீழ் மகளிருக்கான கால்பந்து உலகக் கிண்ண தொடரை நடாத்தும் வாய்ப்பையும் இந்தியா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த தொடரை நடுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் பிபா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் கால்பந்தில் சிறந்த முன்னேற்றம் கண்டு வரும் ஒரு நாடாக இந்தியா மாற்றம் பெற்றுள்ளது. இந்திய தேசிய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் உலகின் முன்னணி சர்வதேச அணிகளில் விளையாடி வரும் அதேவேளை, இளையோர் அணிகளும் சிறந்த முறையில் தமது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த வருடம் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) ஆடவர் தொடர் மற்றும் (SAFF) 19 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான ஆடவர் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<