சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) வெளியிட்டுள்ள கால்பந்து அணிகளுக்கான புதிய தரவரிசைக்கு அமைய இலங்கை அணி ஒரு இடம் பின்னடைவை சந்தித்து, 206வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பங்கபந்து கால்பந்து தொடரில் இலங்கை அணி தங்களுடைய இரண்டு குழுநிலை போட்டிகளிலும் தோல்வியடைந்தது. இதில் பலஸ்தீன் அணிக்கு எதிரான போட்டியில் 2-0 எனவும், பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் 3-0 எனவும் தோல்வியடைந்தது.
PSG இன் வளர்ச்சிக்கு பங்களித்த நெய்மாருக்கு குவியும் பாராட்டு
பிரான்ஸின் முன்னணி கால்பந்து…
இதன் காரணமாக சர்வதேச கால்பந்து தரவரிசையில் இலங்கை ஒரு இடம் பின்னடைவை சந்தித்து, 206ம் இடத்தை பிடித்துள்ளது. பிஃபா தரவரிசையில் மொத்தமாக 210 நாடுகள் உள்ள நிலையில், உலக தரவரிசையின் கடைசி இடத்தை பிடிப்பதற்கு, இன்னும் 4 இடங்கள் மாத்திரமே பின்னடைவை சந்திக்கவேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.
பகீர் அலியின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ், இலங்கை அணி கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 200வது இடத்தை பிடித்திருந்ததுடன், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 205வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டதுடன், இப்போது 206ம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அதேநேரம், இவரின் பயிற்றுவிப்பின் கீழ், இலங்கை தேசிய அணி மற்றும் 23 வயதின்கீழ் அணிகள் 22 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 16 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதுடன், ஒரு வெற்றியை மாத்திரம் பெற்றுள்ளது.
தற்போது இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக அமீர் அலஜிக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பொஸ்னியா, ஹெர்சகோவினா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளவர். இவர், தன்னுடைய இலங்கை குழாத்தை தெரிவுசெய்து வரும் நிலையில், கொவிட்-19 காரணமாக குறித்த விடயம் தடைப்பட்டுள்ளது.
இலங்கை அணி 2022ம் ஆண்டுக்கான பிஃபா உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் குழு H இல் கடைசி இடத்தை பிடித்துள்ளது. அதேநேரம், 3 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இலங்கை அணி தகுதிகாண் போட்டிகளில் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது.
இதேவேளை, பங்கபந்து கால்பந்து தொடரை வெற்றிக்கொண்டிருந்த பலஸ்தீன் அணி, மூன்று இடங்கள் முன்னேறி 103வது இடத்தை பிடித்துள்ளதுடன், இரண்டாவது இடத்தை பிடித்திருந்த புருண்டி அணி 2 இடங்கள் முன்னேறி 149வது இடத்தை பிடித்துள்ளது.
அத்துடன், கடந்த பெப்ரவரிக்கான தரவரிசையின் படி, வேல்ஸ் மற்றும் பரகுவே அணிகள் ஒரு இடம் பின்னடைவை சந்தித்து முறையே 23 மற்றும் 41வது இடங்களை பிடித்துள்ளதுடன், கானா அணி ஒரு இடம் முன்னேறி 46வது இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் எஸ்டோனியா, டிரிண்டட் மற்றும் டொபேகோ மற்றும் கென்யா போன்ற அணிகளும் ஒரு இடம் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<