இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடையை நீக்குவதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் விதிமுறைகளை மீறி செயற்பட்டமைக்காக கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி இலங்கை கால்பந்து சம்மேளனம் மீது FIFA தடை விதித்தது. இதன் காரணமாக சர்வதேச கால்பந்துடன் தொடர்புபட்ட அனைத்து செயற்பாடுகளிலும் இலங்கைக்கு பங்கேற்க முடியாத ஒரு நிலை நீடித்தது.
- இலங்கை கால்பந்தின் பொதுத் தேர்தல் செப்டம்பர் 16ஆம் திகதி
- இலங்கை கால்பந்திற்கு ஒரு நற்செய்தி
- 16 அணிகள் மோதும் கொழும்பு லீக்கின் இளையோருக்கான தொடர்
இதனால் இந்த வருடம் இடம்பெற்ற SAFF அமைப்பின் முக்கிய தொடர்களில் விளையாடும் வாய்ப்பு இலங்கை தேசிய அணி மற்றும் இளையோர் கால்பந்து அணிகளுக்கு இல்லாமல் போனது. மேலும், இந்த தடை நீடித்தால் இலங்கை அணிக்கு அடுத்த உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிகளிலும் விளையாட முடியாத நிலை எற்படும் ஒரு நிலைமை இருந்தது.
எனினும், இலங்கை கால்பந்து அணிக்கு FIFA மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) மூலம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு FIFA குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை இலங்கை தரப்பு நிறைவேற்றியுள்ளதை உறுதி செய்துள்ள FIFA, தற்போது இந்த தடையை நீக்குவதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், FIFA இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு இது தொடர்பில் குறிப்பிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுத் தேர்தல் வரையில் சகல விடயங்களையும் தாம் முழுமையாக கண்காணிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<