2022 பிஃபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

585

கட்டாரில் நவம்பர் மாதம்  21 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் புதன்கிழமை (15) வெளியிட்டுள்ளது.

2022 நம்பர் 21 ஆம் திகதி திங்கட்கிழமை அல் பைத் அரங்கில் உலகக் கிண்ண முதல் போட்டி நடைபெறவுள்ளது. இதன் குழு நிலை போட்டிகள் 12 நாட்கள் நீடிக்கவுள்ளதோடு, ஒரு நாளில் தலா நான்கு போட்டிகள் நடத்தப்படும் என்று பிஃபா குறிப்பிட்டுள்ளது. எனினும் மைதானங்களுக்கு இடையே பயணிப்பதற்கு விமானப் போக்குவரத்து தேவைப்படாது என்று அது சுட்டிக்காட்டியது.  

Video – பிரீமியர் லீக்கில் இருந்து அடுத்த வருட சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற போவது யார் ?| FOOTBALL ULLAGAM

கட்டாரின் போட்டி ஏற்பாட்டுக் குழு மற்றும் பிஃபா இணைந்து வெளியிட்ட அறிவிப்பில், எரிவாயு வளம் கொண்ட கட்டாரின் 60,000 பேர் உள்ளடக்கக் கூடிய மைதானத்தில் உலகக் கிண்ணம் ஆரம்பமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

போட்டிகள் ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் டிசம்பர் 18 ஆம் திகதி டோஹாவில் 80,000 பார்வையாளர்கள் அமரக் கூடிய லுசைலா அரங்கில் உலகக் கிண்ண இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.  

ஒரு நாளைக்கு நான்கு போட்டிகளைக் கொண்டதாக நடைபெறவிருக்கும் குழு நிலை போட்டிகள் 12 நாட்கள் நீடித்து கட்டாரை சூழவிருக்கும் எட்டு மைதானங்களில் நடைபெறும். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவிருக்கும், போட்டியிடவுள்ள அணிகளுக்கான இறுதி குலுக்கல் வரை போட்டிகள் நடைபெறும் மைதானங்களின் விபரம் வெளியிடப்படவில்லை.  

குழுநிலை போட்டிகள் மூன்று மணிநேர இடைவெளிகளில் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி உள்ளூர் நேரப்படி பி.ப. 1 மணிக்கு முதல் போட்டியும் தொடர்ந்து 2ஆவது போட்டி பி.ப. 4, 3ஆவது போட்டி பி.ப. 7 மற்றும் 4ஆவது போட்டி இரவு 10 மணிக்கும் ஆரம்பமாகும். 

தடையில் இருந்து தப்பியது மன்செஸ்டர் சிட்டி

இதனைத் தொடர்ந்து போட்டிகள் நேரடியாக 16 அணிகள் சுற்றுக்குச் செல்லும். ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் வீதம் இந்த சுற்றில் போட்டிகள் நடைபெறவிருப்பதோடு தொடர்ந்து இரண்டு நாள் ஓய்வு தினங்களுக்குப் பின்னர் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும். இந்த இரண்டு சுற்றுகளும் இரண்டு நாட்கள் வீதம் நடைபெறும்.  

நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் கட்டார் நேரப்படி பி.ப. 6 மற்றும் இரவு 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. மூன்றாவது இடத்திற்கான போட்டி டிசம்பர் 17 ஆம் திகதி கலீபா சர்வதேச அரங்கில் நடைபெறவுள்ளது. அடுத்த நாள் பி.ப. 6.00 மணிக்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. கட்டார் உள்ளூர் நேரம் என்பது இலங்கை நேரத்தை விடவும் இரண்டரை மணி நேரம் பிற்பட்டதாகும். 

2022 ஆம் ஆண்டில் கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண போட்டியானது மத்திய கிழக்கில் ஆடவர் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெறும் முதல் சந்தர்ப்பமாக பதிவாகவிருப்பதோடு நவம்பர் மற்றும் டிசம்பர் காலப்பகுதியில் உலகக் கிண்ணம் நடத்தப்படும் முதல் சந்தர்ப்பமாகவும் அமையவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும்.   

உதவிப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கலகெதர விடுவிப்பு

இந்த உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் ஆசியா மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் ஆரம்பிக்கப்பட்டபோதும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களுக்கான போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.  

அல் பைத் மற்றும் லுசைலா அரங்குகளின் நிர்மாணப் பணிகள் இன்னும் பூர்த்தியாகவில்லை. அல் பைத் அரங்கு வளைகுடா பிராந்திய நாடோடிகள் பயன்படுத்தும் சம்பிரதாய கூடார வடிவில் நிர்மாணிக்கப்படுகிறது. இதன் பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.   

>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<