ஆஸியுடன் விட்ட தவறை பாகிஸ்தான் இந்தியாவுடன் செய்யாது

431

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் களத்தடுப்பில் செய்த தவறுகளினால் தோல்வியடைந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் தெரிவித்தார்.

எனினும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (16) இந்தியாவுடன் நடைபெறவுள்ள லீக் போட்டியில் தமது வீரர்கள் களத்தடுப்பில் இன்னும் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

உலகக் கிண்ணத் தொடரில் டவுண்டனில் நேற்று (12) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி போராடித் தோல்வியைத் தழுவியது.

வோர்னரின் சதத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய அவுஸ்திரேலியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின், 17 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை…

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, டேவிட் வோர்னரின் அதிரடி சதத்தின் உதவியுடன் 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ஓட்டங்களை எடுத்தது. இதில் மொஹமட் ஆமிர் பந்துவீச்சில் மிரட்டி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். எனினும், களத்தடுப்பில் அந்த அணி மோசமாக செயல்பட்டிருந்ததுடன், 3 முக்கியமான பிடியெடுப்புகளையும் தவறவிட்டிருந்தது.

இதுஇவ்வாறிருக்க, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 45.4 ஓவர்களில் 266 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், தோல்விக்கான காரணத்தை போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹமட் கூறுகையில்,  

களத்தடுப்பில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பலமிக்க அணிகளை நாங்கள் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் அனைத்து பிரிவுகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும். நிச்சயம் களத்தடுப்பில் எமக்கு இன்னும் முன்னேற்றம் தேவை என்று நினைக்கிறேன். எமது களத்தடுப்பானது மிகவும் மோசமானதாக இருந்தது. நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து இந்தியாவுடனான போட்டிக்கு கடினமாக உழைக்க வேண்டும்.

நாங்கள் அவுஸ்திரேலியாவை விட நிறைய தவறுகளைச் செய்துவிட்டோம். முதலில் நாணய சுழற்சியில் வென்றது எமக்கு சாதகமாக இருந்தாலும், எமது பந்துவீச்சாளர்கள் முதல் 30 ஓவர்களில் சிறப்பாக பந்துவீசவில்லை. எனினும், மொஹமட் ஆமிர் சிறப்பாக பந்துவீசியிருந்தார்எனத் தெரிவித்தார்.

மிகவும் சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குறிய துடுப்பாட்ட வீரர்கள் பலரும் நேற்றைய போட்டியில் சிறப்பாக பிரகாசிக்கவில்லை. எனினும் பின்வரிசையில் வந்த வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் சர்பராஸ் அஹமடுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு துடுப்பாட்டத்தில் சிறந்த முறையில் பிரகாசித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைவர்,  

“பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது நாங்கள் ஓரளவு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொண்டாலும், 15 பந்துகளில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தமை போட்டியில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதேபோல, பாபர் அசாம் மற்றும் மொஹமட் ஹபிஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடியிருந்தார்.

அத்துடன், இறுதி கட்டத்தில் வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகிய இருவரும் அணியை வெற்றிக்கு நோக்கி அழைத்துச் சென்றனர். எனினும், சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்ததால் தோல்வியைத் தழுவினோம்” என்றார்.  

கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை நடைபெற்ற 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி, இந்தியாவை தோற்கடித்ததில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே, வரலாற்று வெற்றிக்காக காத்திருக்கும் அடுத்த மோதல் குறித்து சர்பராஸ் குறிப்பிடுகையில்,

நாங்கள் எங்கள் தவறுகளிலிருந்து உடனடியாக வெளியே வரவேண்டும். அடுத்த போட்டியில் மிகவும் பலமான இந்தியாவை நாங்கள் சந்திக்கவுள்ளோம். இந்தியா வலுவான அணி என்பதால் நாங்கள் எங்கள் செயல்திறனை மதிப்பிடுவோம், பின்னர் நாங்கள் திட்டமிடுவோம் என அவர் குறிப்பிட்டார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<