சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சுமார் 10 வருடங்கள் விளையாடாமல் சற்று ஓய்வெடுத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான பிடெல் எட்வர்ட்ஸ் (Fidel Edwards), அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வருகின்ற அபுதாபி T10 லீக் தொடரில் டெல்லி புள்ஸ் அணிக்காக விளையாடி வருகின்ற 38 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான பிடெல் எட்வெர்ட், வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியில் மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்ப ஏழு திட்டங்கள் அறிவிப்பு
”இந்த வருடத்தில் இருந்து மீண்டும் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன். எனவே, மேற்கிந்திய தீவுகள் அணிக்காக எந்தவொரு வடிவிலான போட்டியிலும் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறேன் என கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளேன்.
குறிப்பாக, இலங்கை அணிக்கெதிராக ஆரம்பமாகவுள்ள கிரிக்கெட் தொடரில் என்னை இணைத்துக்கொண்டால் வேகப் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுக்களை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்” என தெரிவித்தார்.
அத்துடன், தான் மீண்டும் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சியாளர் பில் சிம்மெண்ட்ஸ் மற்றும் கிரென் பொல்லார்ட்டிடம் அறிவித்ததாகவும், இதற்காக தன்னை சுமார் 18 மாதங்கள் தயார்படுத்தியிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் தன்னுடைய 39ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ள பிடெல் எட்வர்ட்ஸ், 2012இல் இலங்கை அணிக்கெதிராக பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற T20 போட்டியில் விளையாடியிருந்தார்.
எனவே, தற்போது அபுதாபி T10 லீக் போட்டியில் விளையாடி வருகின்ற அவர், இவ்வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரிலும், இந்தியாவில் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணப் போட்டியிலும் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, அவர் 2009இல் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் டெக்கன் சார்ஜஸ் அணிக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<