இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள FFSL தலைவர் கிண்ண கால்பந்து தொடருக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் குலுக்கல் நிகழ்வு இன்று (28) இலங்கை கால்பந்து சம்மேளனத்தில் இடம்பெற்றது.
கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் எந்தவித கால்பந்து போட்டிகளும் இடம்பெறாத நிலையில், தற்போது இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் இந்த புதிய தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட்-19 தாக்கத்தால் பிற்போடப்பட்ட FFSL தலைவர் கிண்ணம்
20 அணிகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த தொடர் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. ஒரு மாதம் இடம்பெறவுள்ள இந்த தொடரின் முதல் சுற்று குழு நிலையாக இடம்பெறவுள்ளதுடன், அத்த சுற்றுகள் நொக் அவுட் முறையில் இடம்பெறும்.
குழு நிலையைப் பொறுத்தவரையில், மொத்தம் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு குழுவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. குழு நிலையில் அனைத்து அணிகளும் தமது குழுவில் உள்ள ஏனைய அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதன் முடிவில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இடத்தைப் பெறும் அணிகள் ஐந்துடன் சேர்த்து, சிறந்த பெறுபேறைப் பெறும் ஏனைய 3 அணிகள் என மொத்தமாக 8 அணிகள் அடுத்த சுற்றான காலிறுதிக்கு தகுதி பெறும்.
ஆகஸ்ட் 9ஆம் திகதி ஆரம்பமாகும் குழுநிலைப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முடிவடையும். ஆகஸ்ட் 23ஆம், 24ஆம் திகதிகளில் காலிறுதிப் போட்டிகளும், ஆகஸ்ட் 27ஆம் திகதி அரையிறுதிப் போட்டியும் நடைபெற்று, தொடரின் இறுதிப் போட்டி ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெறும்.
இன்று இடம்பெற்ற FFSL தலைவர் கிண்ண தொடருக்கான வெற்றிக் கிண்ண அறிமுக மற்றும் குலுக்கல் நிகழ்வின்போது கருத்து தெரிவித்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா, ”கடந்த வருடம் இடம்பெற்ற அசாதாரன சூழல் மற்றும் இந்த வருடம் இருந்த கொவிட் 19 அச்சுறுத்தல் என்பன காரணமாக எம்மால் சம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட முக்கிய தொடர்களை நடத்த முடியாமல் போனது. எனினும், இந்த தொடர் கால்பந்தை மீண்டும் ஆரம்பிக்கும் ஒரு சந்தர்ப்பமாக அமையும்.
அதேபோன்று, தேசிய அணியின் பயிற்றுவிப்பாளருக்கு இளம் மற்றும் சிறந்த வீரர்களை அடையாளம் காண்பித்துக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தொடர் அமையவுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கடந்த கால சூழல்களினால் பல சவால்களை எதிர்கொண்டுள்ள கழகங்களுக்கும் நாம் பொருளாதார ரீதியாகவும் உதவிகளை மேற்கொண்டுள்ளோம். எனவே, இந்த சுற்றுத் தொடர் மூலமாக வீரர்களும், கழகங்களும் பயனைப் பெறுவார்கள் என்பதுடன் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்பிக்கையும் உள்ளது” என்றார்.
2022 பிஃபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் பெரும் தொகைப் பணம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
FFSL தலைவர் கிண்ண குழுநிலை அணிகள்
குழு A – ப்ளூ ஸ்டார் வி.க, அப் கண்ட்ரி லயன்ஸ் வி.க, ஜாவா லேன் வி.க, மொரகஸ்முல்ல வி.க,
குழு B – ரினௌன் வி.க, மாத்தறை சிட்டி கழகம், நியூ யங்ஸ் கா.க, நிவ் ஸ்டார் வி.க
குழு C – டிபெண்டர்ஸ் கா.க, ரெட் ஸ்டார்ஸ் கா.க, சௌண்டர்ஸ் வி.க, சுப்பர் சன் வி.க
குழு D – சீ ஹோக்ஸ் கா.க, ரத்னம் வி.க, பொலிஸ் வி.க, செரண்டிப் கா.க
குழு E – கொழும்பு கா.க, புளூ ஈகல்ஸ் வி.க, க்ரிஸ்டல் பெலஸ் கா.க, SLTB வி.க
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<