இலங்கை தேசிய கால்பந்து அணி அண்மைக்காலமாக மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் இளம் வீரர்களுடன் அணியை மீண்டும் கட்டியெழுப்பி வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் சவாலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் நிசாம் பக்கீர் அலி தெரிவித்தார்.
மேலும், இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற கிடைத்தமையினால் எனது வாழ்க்கையின் கனவு நனவாகியது எனவும் அவர் தெரிவித்தார்.
FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு
சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA)…
இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் மற்றும் இலங்கை கால்பந்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று(22) இலங்கை கால்பந்து சம்மேளன தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”இலங்கை தேசிய கால்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்றுக் கொள்வது தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவுக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பயிற்றுவிப்பாளராக ஏனைய நாடுகளுக்காக பணிபுரிந்துள்ளேன். எனவே இலங்கை அணியின் முன்னாள் வீரராக தேசிய அணியை பயிற்றுவிப்பதற்கான சந்தர்ப்பம் சரியான நேரத்தில் தான் எனக்கு கிடைத்துள்ளது என நம்புகிறேன்” என தனது நியமனம் குறித்து பகீர் அலி தெரிவித்தார்.
இலங்கை தேசிய கால்பந்து அணி FIFA தரவரிசையில் தற்பொழுது 200ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஓரிரு வருடங்களாக எந்தவித சர்வதேசப் போட்டிகளிலும் பங்கு கொள்ளாமை மற்றும் தரவரிசையில் வரலாற்றில் மிகவும் மோசமான நிலையில் உள்ளமை போன்ற விடயங்கள் இலங்கை ரசிகர்கள் தேசிய கால்பந்து மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் குறைத்துள்ளது. இது குறித்தும் புதிய பயிற்றுவிப்பாளர் கருத்து தெரிவித்தார்.
இப்பதவியை ஏற்றுக்கொண்டவுடன் எனக்கு வானத்தையும், பூமியையும் இணைக்கவோ, வானத்தில் நட்சத்திரங்களை உடனே காண்பிக்கவோ முடியாது. எனினும், முன்னைய காலங்களில் இலங்கை கால்பந்து அணி விளையாடியது போல தேசிய அணியை தரமானதொரு அணியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். அதிலும் முன்னைய காலங்களில் போட்டிகள் இடம்பெறும் போது நிறைய ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தருவார்கள். ஆனால் தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. இதனால் வீரர்கள் உத்வேகத்துடன் மைதானத்தில் விளையாடுவதை அரிதாகவே காணமுடிகின்றது. எனவே இந்த நிலையை முதலில் மாற்றியமைக்க வேண்டும். எனது கையில் மிகப் பெரிய சவாலொன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்பை ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்றார்.
இலங்கை தேசிய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக பக்கீர் அலி
இலங்கை அணியின் முன்னாள் வீரர் நிசாம் பக்கீர் அலியை….
அதிலும் குறிப்பாக எனது முதல் இலக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள சாப் சம்பியன் கிண்ண கால்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாகும். இதில் விளையாடும் அனைத்து அணிகளும் பலம் பொருந்திய அணிகளாகவே உள்ளன. எனவே இறுதி நான்கு அணிக்குள் இடம்பெறுவோம் என வாக்குறுதி அளிக்க மாட்டோம். ஏனெனில் தேசிய அணிக்காக இன்னும் நாங்கள் வீரர்களை தெரிவு செய்யவில்லை. முதலில் அந்த தொடரில் எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்பதுதான் எனது முதலாவது இலக்காக அமையவுள்ளது. தற்போதைய நிலையை விட சிறந்த நிலைக்கு அணியை கொண்டு செல்ல முடியும். அதன்பிறகுதான் எமது தேசிய கால்பந்து அணியின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் என இலங்கை தேசிய அணிக்கு செய்ய வேண்டிய முதல் நடவடிக்கை குறித்தும் பகீர் அலி தெளிவு படுத்தினார்.
அனைத்து தரப்பினரின் ஆதரவு மற்றும் பங்களிப்புக்களுடனேயே தான் தேசிய அணியை முன்னேற்றும் பயணத்தை கொண்டுசெல்ல உள்ளதாகவும் பகீர் அலி குறிப்பிட்டார்.
“எங்களுடைய இந்த வெற்றிப்பயணத்துக்கு கால்பந்து சம்மேளனம், வீரர்களைப் போல ஊடகங்களும் எமது பின்னால் நின்று ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். தவறுகள், விமர்சனங்கள் இருந்தால் தயங்காமல் தெரியப்படுத்துங்கள். அதிலும் எம்மை நீங்கள் விமர்சித்தால் அதை சவாலாக ஏற்றுக்கொள்ளவும், எம்மைப் பற்றி நல்லதை எழுதினால் அதை ஊக்குவிப்பாகவும் ஏற்றுக்கொள்ளத் தயார்” என்றார்.
மேலும் பயிற்றுவிப்பாளர் கடமையை சுதந்திரமாக செய்வதற்கு விரும்புவதாக தெரிவித்த அவர், தனது கடமையில் எவரும் அநாவசியமாக தலையிடுவதை அனுமதிக்கப் போவதில்லை எனவும், நேர்மையுடனும், தூய்மையான மனதுடனும் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாவும் தெரிவித்தார்.
ஒன்பது சிவப்பு அட்டைகளால் கைவிடப்பட்ட கால்பந்து போட்டி
ஒன்பது வீரர்கள் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு…
குறித்த ஊடக சந்திப்பின்போது, ரொனி என்ற செல்லப் பெயரால் ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட நிசாம் பக்கீர் அலி, இலங்கைக் கால்பந்து சம்மேளனத்துடன் எதிர்வரும் இரண்டு வருடகாலத்திற்கான ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார்.
இலங்கையின் முன்னாள் தேசிய அணி வீரரான நிசாம் பக்கீர் அலி மாத்தளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார். 1976ஆம் ஆண்டு இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியில் இணைந்த அவர் 1980ஆம் ஆண்டு தலைவர் பொறுப்பை ஏற்றார்.
அதன்பிறகு கொழும்பு யோர்க் அணியில் விளையாடி வந்த அவர் பங்களாதேஷ் பிரீமியர் லீக் கால்பந்தாட்ட அணியொன்றின் முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டார்.
கேரளா கால்பந்தாட்ட அணிக்கும் பயிற்சியாளராக செயற்பட்ட பக்கீர் அலியை இலங்கை அணியின் பயிற்சியாளராக்கியுள்ள நடவடிக்கையானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு இலங்கையின் கால்பந்தாட்டத்தை அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டத்தின் முதல் அங்கமாக கருதப்படுகிறது.