நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான லோக்கி பெர்குஸன் சம்பியன்ஸ் கிண்ண ஒருநாள் தொடரில் இருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
நியூசிலாந்து தொடருக்கான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு
பெர்குஸனிற்கு காலில் ஏற்பட்ட உபாதையே அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விலகுவதற்கான பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
லோக்கி பெர்குஸன் அண்மையில் நடைபெற்று முடிவடைந்திருந்த ILT20 லீக் தொடரில் கால் தசை உபாதைக்கு முகம் கொடுத்திருந்தார். குறிப்பிட்ட உபாதையில் இருந்து லோக்கி பெர்குஸன் முழுமையாக குணமடையாத நிலையில் அவர் பாகிஸ்தான், தென்னாபிரிக்க அணிகளுடனான முக்கோண ஒருநாள் தொடரில் ஆடியிருக்கவில்லை.
விடயங்கள் இவ்வாறு காணப்பட்ட நிலையிலையே பெர்குஸன் நியூசிலாந்து குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார். பெர்குஸனின் பிரதியீட்டு வீரராக கைல் ஜேமிசன் நியூசிலாந்து குழாத்தினுள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.
அதேநேரம் பெர்குஸனின் உபாதை குணமடையும் காலப்பகுதி இன்னும் உறுதியாகாத நிலையில் அவர் இந்தப் பருவத்திற்கான இந்திய பிரீமியர் லீக் (IPL) தொடரிலும் பங்கெடுப்பதில் சந்தேகம் நிலவுகின்றது.
இதேநேரம் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியானது தமது முதல் போட்டியில் நாளை (19) தொடரினை நடாத்தும் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<