1995 SAFF கிண்ணம் வென்ற இலங்கை அணிக்கு கௌரவிப்பு

407
Felicitation for 1995 SAFF champions Sri Lanka team

கடந்த 1995ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து சம்மேளன கிண்ணத் தொடரில் (SAFF சம்பியன்ஷிப்) வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்று நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்த இலங்கை கால்பந்து அணி வீரர்கள் அனைவரும் 27 வருடங்களின் பின்னர் கௌரவிக்கப்பட்டனர்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”கால்பந்து விருது வழங்கும் விழா 2021” நிகழ்வின்போதே இந்த அணி வீரர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.

கடந்த 1995ஆம் ஆண்டு SAFF சம்பியன்ஷிப் தொடர் இலங்கையில் இடம்பெற்றது. இந்த தொடரில் சம்பத் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இறுதிப் போட்டியில் இந்திய அணியை 1-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்டு முதல் முறையாக சம்பியனாகத் தெரிவாகியது.

குறித்த தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை எதிர்கொண்டது. முதலில் 0-2 என பின்னிலையில் இருந்த இலங்கை அணி, மொஹமட் அமானுல்லாஹ் பெற்ற இரண்டு கோல்களினால் அந்தப் போட்டியை 2-2 என சமநிலையில் முடித்துக் கொண்டது.

பின்னர் இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியிலும் அமானுல்லா மற்றும் ரொஷான் பெரேரா ஆகியோரின் கோல்களின் உதவியுடன் நேபாளத்தை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

மீண்டும் இறுதிப் போட்டியில் இந்திய அணியை சந்தித்த இலங்கை வீரர்கள் W.D சரத் பெற்ற கோலின் உதவியுடன் 1-0 என வெற்றி பெற்று முதலாவது முறையாக சம்பியன் கிண்ணத்தை வென்றது. எனினும், அதன் பின்னர் இலங்கை அணி இன்றுவரை ஒரு முறையாவது இறுதிப் போட்டிக்குகூட தகுதி பெறவில்லை.

குறித்த தொடரில் மொத்தமாக 3 கோல்களைப் பெற்ற இலங்கை வீரர் மொஹமட் அமானுல்லா அதிக கோல்களைப் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தங்கப் பாதணியை வென்றெடுத்தார்.

இந்நிலையில், குறித்த வெற்றிக் கிண்ணம் வென்று 27 வருடங்களாகின்ற நிலையில் அவ்வணி வீரர்கள் “கால்பந்து விருது வழங்கும் விழா 2021“ வின்போது கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பத் பெரேரா தலைமையிலான அணியினர் வெற்றிகொண்ட சம்பியன் கிண்ணமும் இந்த நிகழ்வின்போது கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேசப் போட்டிகளில் இலங்கை தேசிய அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வீரர்களும் குறித்த கால்பந்து விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<