என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார்

5232

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன்.

ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை கொழும்பு ரேஸ் கோர்ஸ் அரங்கில் இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இவ்வருடத்தின் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆசிய கால்பந்து சம்மேளனக் கிண்ணத்திற்கான தகுதிகாண் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.  

ஜப்பான் உட்பட 3 நாடுகளுடன் மோதவுள்ள இலங்கை 16 வயதின்கீழ் அணி

எனவே, இந்த இரு தொடர்களுக்குமான 16 வயதின் கீழ்ப்பட்ட தேசிய அணி வீரர்களுக்கான தெரிவு கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்றது. இதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த வீரர்களில் இருந்து தற்பொழுது 27 வீரர்கள் இறுதித் தெரிவின் பின்னர் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் வடக்கிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மூவர் இந்த தேசிய அணியில் தெரிவாகியுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜன கல்லுரி மாணவன் ரவிகுமார் தனூஜன், இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி மாணவர்களான பாக்கியனாதன் ரெக்சன் மற்றும் அனுபவம் மிக்க ஜுட் சுபன் ஆகியோரே இக்குழாமில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.   

இவ்வாறான ஒரு நிலையில், கால்பந்தில் எங்கும் இல்லாத ஒரு பிரியமும் விறுவிறுப்பும் உள்ள யாழ் மண்ணில் இருந்து தேசிய அணிக்கு தெரிவாகியமை குறித்து அறியும் விதமாக, Thepapare.com இளம் வீரர் ரவிகுமார் தனூஜனுடன் ஒரு நேர்காணலை நடத்தியது.  

தனது அண்ணன் மற்றும் மாமாவின் கால்பந்து விளையாட்டு மற்றும் அவர்களின் திறமைகள் என்பவற்றை முன்னுதாரணமாகக் கொண்டும், அவர்களைப் போன்று தானும் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடனும் தனது 10ஆவது வயதில் கால்பந்து விளையாட்டில் தடம் பதித்தார் ரிவிகுமார்.

யாழ் மண்ணிற்கு கால்பந்து என்பது புதிய ஒன்றோ, வியப்படையும் ஒன்றோ அல்ல. தொண்டு தொட்டு தம்முடைய ஒரு இணைப்பாக இவ்விளையாட்டைக் கொண்டுள்ள அவர்களுக்கு ரவிகுமாரும் சாதாரண ஒரு விளையாட்டு வீரராகவே அன்று தோன்றியிருக்கும்.

எனினும் இன்று அவர் இளம் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய வீரராக மாறியுள்ளார். இதற்காக, தேசிய அணியின் பிரவேசம் குறித்து ரவிகுமார் எம்மிடம் கருத்து தெரிவிக்கையில்,

”எனது கால்பந்து ஆரம்பத்திற்கு உதவியாய் இருந்தவர் எனது பயிற்றுவிப்பாளராக இருந்த திரு சாந்தன் தான். அவரது பயிற்றுவிப்பில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்ற நான், இவ்வருடம் இந்த தெரிவுக்காக வந்தேன். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து அதிகமானவர்கள் தெரிவுக்கு வந்திருந்தமை சற்று பயத்தை ஏற்படுத்தியது. எனினும் பின்னர் எனது மனநிலை மாற்றமடைந்தது.

ஏனையவர்களால் தேசிய அணித் தெரிவுக்கு உள்வாங்க முடியும் எனில், கால்பந்திற்கு முக்கியத்துவம் மிக்க யாழ்ப்பாணத்தில் இருக்கும் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கை எழுந்தது. அதுபோன்றே நான் இன்று தேசிய அணியில் அங்கம் வகிக்கின்றேன்” என்றார்.  

தனது 10 வயதில் கால்பந்தை ஆரம்பித்த ரவிகுமார், வெறும் 3 வருடங்களில் கழக அணிக்காக விளையாடினார். நாமகல் விளையாட்டுக் கழகத்திற்காக தனது கழக விளையாட்டுப் பயணத்தை ஆரம்பித்த அவர், இன்றும் அக்கழகத்திற்காக விளையாடி வருகின்றார். கழக மட்டத்தில் விளையாடிய அனுபவமும் அவருக்கு தேசிய அணிக்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு முக்கிய காரணியாக இருந்திருக்கும் எனலாம்.  

சிறந்த திட்டமிடலே கிரிக்கெட் வீரர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் : அக்சயன் ஆத்மநாதன்

கால்பந்தில் மாத்திரமன்றி மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளிலும் ரவிகுமார் தேசிய மட்டம் வரை தனது திறமையை காண்பித்துள்ளார். அவர், 15 வயதின் கீழ் பிரிவில் தனது பாடசாலையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல், 100 மீட்டர் அஞ்சல் ஓட்டம் மற்றும் 400 மீட்டர் அஞ்சல் ஓட்டங்களில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று, தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியிருந்தார். எனினும், தேசிய மட்டத்திற்கு ஏற்ற பயிற்சிகள் இல்லாமை மற்றும் அச்சம் போன்ற காரணங்களினால் அவருக்கு அங்கு பிரகாசிக்க முடியாமல் போனது.

அதேபோன்று, ரவிகுமார் அங்கம் வகித்த மகாஜனக் கல்லூரியின் கால்பந்து அணி, மாகாண மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளதுடன், தேசிய மட்ட போட்டிகளிலும் பலமுறை பங்கு கொண்டுள்ளது. குறிப்பாக சமபோச கிண்ணத்தின்போது தேசிய மட்டப் போட்டிகள் வரை வந்த மகாஜனக் கல்லூரி அணியின் முக்கிய வீரராக இவர் இருந்தமை அவ்வணிக்கு பெரும் பலமாகவும் அமைந்திருந்தது.

இந்நிலையில், தற்பொழுது தேசிய மட்ட அணியில் பெறும் பயிற்சிகள் ரவிகுமாருக்கு மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. குறிப்பாக இந்த அணிக்கு ஜப்பான் நாட்டின் பிரபல பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான சுசுகி சிகாசி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை இந்த இளம் வீரர்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு என்றே கூறலாம்.

தனது தேசிய மட்ட பயிற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த ரவிகுமார், ”இங்கு எமக்கு பயிற்சிகளை விட கட்டுப்பாடு மிக முக்கிய ஒன்றாக உள்ளது.  அதுவே எம்மில் பல மாற்றங்களை ஏற்படுத்தும்.  

அதற்கு அடுத்து, இங்கு கால்பந்து தொடர்பிலும், விளையாட்டு தொடர்பிலும் நான் புதிய விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். முன்களத்தில் விளையாடும் எனக்கு வேகம் எவ்வாறு இருக்க வேண்டும்?, எனது நிலையை சிறப்பிப்பதற்கான நுட்பங்கள் என்ன என்பது தொடர்பிலும் நான் சிறப்பாக கற்றுக்கொண்டேன்” என குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண இளைஞர்களின் கால்பந்து நிலைமை குறித்தும், அவர்களுக்கு எவ்வாறான மாற்றங்கள் தேவை என்பது குறித்தும் கருத்து தெரிவித்த ரவிகுமார், ”யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் வெளியில் சென்று விளையாடுவது குறைவு. நாம் கொழும்பு வருவதாயின் பல துன்பங்களையும், சவால்களையும் எதிர்கொண்ட பின்னரே வருகின்றோம்.  

அவர்களுக்கும் இவ்வாறான வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். என்னை விட சிறந்த திறமையுள்ளவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளனர். அவர்களும் தேசிய அணியில் உள்வாங்கப்பட வேண்டும். அதற்காக அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்” என தனது எதிர்பார்ப்பை பகிர்ந்தார்.  

இந்துக்களுக்கான பெரும் சமரில் கொழும்பு இந்து கல்லூரி வெற்றி

இவரது நிலைமை இவ்வாறிருக்க, தேசிய அணிக்காக தெரிவாகி சுமார் இரண்டு மாதங்கள் கொழும்பில் தங்கி பயிற்சி பெற்றுவரும் இவரது விளையாட்டு குறித்து, அணியின் பயிற்றுவிப்பாளர் சுசுகி சிகாசியிடம் நாம் வினவினோம்.

அதற்கு அவர், ”நாம் இந்தப் பயிற்சிகளின் ஆரம்ப கட்டமாக கால்பந்தை எவ்வாறு விளையாட வேண்டும் என்பதனை வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றோம். எனவே, அதன்மூலம் ரவிகுமார் பல விடயங்களை அறிந்துள்ளார். எம்மால் அவற்றை அவரிடமிருந்து அவதானிக்க முடிகின்றது.

முன்களத்தின் இடது பக்கத்தில் விளையாடும் அவர் எதிர் தரப்பிடமிருந்து சிறந்த முறையில் பந்தை கடத்திச் செல்வார். மேலும், பந்தை ஒழுங்கான முறையில் குறுக்கே செலுத்துதல் போன்ற முக்கிய செயற்பாகளுக்கு ரவி மிகவும் சிறந்தவர். அது அவரிடம் உள்ள ஒரு சிறப்பியல்பு.

இலங்கையில் செய்யப்படாத பல பயிற்சிகளையே நாம் இவர்களுக்கு வழங்குகின்றோம். எனவே, அவர் இங்கிருந்து சென்று முன்பைவிட வித்தியாசமான ஒரு சிறந்த விளையாட்டை வெளிப்படுத்துவார்” எனக் குறிப்பிட்டார்.

எனவே, தனது முதல் முயற்சியின்போதே தேசிய அணிக்கு தெரிவாகியுள்ள ரவிகுமார், எதிர்காலத்தில் மேலும் பல சாதனைகளை படைத்து இலங்கை கால்பந்து துறையில் பிரகாசிக்க வேண்டும் என்றும், இது போல் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மேலும் பல கால்பந்து வீரர்களும் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுவதற்காக தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நாமும் வாழ்த்துகின்றோம்.

  மேலும் பல செய்திகளுக்கு