விடுமுறையின் பின்னர் புது வருடத்தில் மீண்டும் பாடசாலைக்குத் திரும்புவது சிறுவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பமாகவே அமைகின்றது. அந்த நேரம் அவர்களுக்கு பல புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமைகின்றமையே இதற்கான காரணம்.
புதிய வருடத்தில் பாடசாலை சென்று பழைய நட்புகளை மீண்டும் சந்தித்தல், புதிய நண்பர்களை உருவாக்குதல், புதிய விடயங்களை செய்தல் மற்றும் புதிய குழு வேலைகள், விளையாட்டுக்கள் என்பவற்றில் ஈடுபடல் போன்ற காரணங்களினால் சிறுவர்கள் புதிய வருடத்தில் பாடசாலைக்கு செல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றனர்.
சிறுவர்கள், விளையாட்டு மற்றும் புதிய விடயங்களை செய்வதில் மாத்திரம் அதிகம் விருப்பம் கொள்வதில்லை. குறிப்பாக, அவர்கள் ஆச்சரியமான விடயங்களை செய்வதிலும், குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர்.
இவ்வாறு குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் அறிந்ததுண்டா? இது சிறுவர்களுக்கு சிறந்த மகிழ்ச்சியையும், உட்சாகத்தையும் வழங்குவது மாத்திரமன்றி, அவர்களின் குழு செயற்பாட்டுத்திறன் மற்றும் சமூகத்துடனான தொடர்பை அதிகரிப்பதற்கும் உதவுகின்றது.
குழு விளையாட்டுக்களில் ஈடுபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்
1) நம்பிக்கை அதிகரித்தல்
சிறுவர்கள் ஒரு விளையாட்டில் ஈடுபடும்பொழுது, அவர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகின்றது, சுய விழிப்புணர்வு ஏற்படுகின்றது. அதேபோன்று, அவர்கள் தாம் விரும்பும் விளையாட்டில் ஈடுபட்டு, அதன்மூலம் முழுமையான மகிழ்ச்சியை அடைவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.
2) சீரான உடற்பயிற்சி வழங்கப்படுதல்
குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு சிறுவன், தனது அதிகமான நேரத்தை விளையாட்டிற்கு செலவழித்து, பல செயற்பாடுகளை அதற்காக மேற்கொள்கின்றான். அதில் முக்கியமாக தொடர்ச்சியான பயிற்சிகளுக்கு அவர் உள்வாங்கப்படுகின்றார். எனவே, அவர் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவராகவும் முழுமையான சுகாதார ஆரோக்கியம் உள்ள நபராகவும் மாறுகின்றார்.
3) உறவுகளை வளர்த்துக்கொள்ளல்
பயிற்சிகள் மற்றும் விளையாட்டுக்களின்போது, சிறுவர்கள் ஏனைய பல சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். இதனால் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படுவதுடன், அவர்கள் சமூகத்துடன் தமது திறமைகளை பகிந்துகொள்கின்றனர்.
4) கல்வியிலும் திறமையானவர்களாக மாறுகின்றனர்
குழு விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் கல்வித் துறையிலும் தம்மை சிறந்தவர்களாக வளர்த்துக் கொள்கின்றனர். விளையாட்டில் ஈடுபடும்பொழுது நேர முகாமைத்துவத்தின் முக்கியத்துவம், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு என்பவற்றை கற்றுக்கொள்கின்றமையினாலேயே அவர்கள் கல்வியிலும் சிறந்தவர்களாக மாற காரணமாக இருக்கின்றது.
5) வெற்றிக்கு வழிவகுத்தல்
குழு விளையாட்டில் ஈடுபடும் ஒரு சிறுவன் வெற்றி, தோல்வி ஆகிய இரண்டினையும் எதிர்கொள்வார். இதனால் அவரிடம் தோல்வியைத் தாங்கிக்கொள்ளும் தன்மை, வெற்றியை கொண்டாடும் முறைமை மற்றும் இவ்வாறான சந்தர்ப்பங்களின்போது தமது அணியின் ஏனைய வீரர்களின் நிலைமையை அறிந்துகொள்ளல் போன்றவற்றை அவர் கற்றுக்கொள்கின்றார். இவை அனைத்தும் அவர் எதிர்காலத்தில் தனது இலக்குகளை வெற்றிகொள்வதற்கு அதிக பங்களிப்பு செலுத்துகின்றன.
6) மதிக்கும் மனப்பாங்கை ஏற்படுத்தல்
குழு விளையாட்டில் ஈடுபடும் ஒருவர் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், நடுவர்கள் மற்றும் தமது சகாக்களை மதித்து நடக்க வேண்டிய ஒரு கட்டாயம் இருக்கின்றது. எனவே, விளையாட்டில் உண்டாகும் இந்த ஏனையோரை மதிக்கும் பழக்கம், பின்னர் அது அவரது வாழ்கையிலும் தானாகவே நிலைத்து நிற்கின்றது.
7) குடும்பத்துடனான ஈடுபாட்டை ஊக்குவித்தல்
ஒரு சிறுவன் விளையாட்டில் ஈடுபடும் பொழுதும், அதற்கான பயிற்சிகளின்போதும் அவரது பெற்றோர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அதனை பார்ப்பதற்கும், அவனுக்கு தமது ஆதரவை வழங்கி அவனை உட்சாகப்படுத்துவதற்கும் போவார்கள். இவ்வாறு செய்வதனால், குறித்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் கொண்டுள்ள ஈடுபாடு மேலும் அதிகரிக்கின்றது.
இவ்வாறு பல நன்மைகளை ஏற்படுத்தும் குழு விளையாட்டுக்கள் நிச்சயம் ஒரு சிறுவனின் முன்னேற்றத்திற்கு பாரிய அளவில் பங்கு வகிக்கின்றது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.