அணிக்கு 7 பேர் கொண்ட மற்றும் அணிக்கு 15 பேர் கொண்ட இலங்கை ரக்பி அணியின் முன்னாள் தலைவரும் மற்றும் அற்புதமான ப்ளை ஹாப் நிலை வீரருமான பாசில் மரிஜா, எதிர்வரும் மே மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள பிரிவு 1 ஆசிய ரக்பி சம்பியன்ஷிப் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெற்று தனது 17 வருட தேசிய அணிக்கான பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க உள்ளார்.
32 வயதான, கிங்ஸ்வூட் கல்லூரியின் பழைய மாணவரான இவ் அற்புத ரக்பி வீரர், 2004ஆம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமாகியதில் இருந்து இன்று வரை 10ஆம் இலக்க ஆடையை தன்னகத்தே வைத்து இருந்து, எதிர்வரும் மே மாதம் முதல் அதற்கு ஓய்வு வழங்கவுள்ளார். பாடசாலை சென்று முடித்தவுடனேயே தேசிய அணியில் இணைந்த மரிஜா, இலங்கை ரக்பி அணியின் நட்சத்திரமாக உருவெடுத்ததோடு, ஆசிய ரீதியிலும் ஒரு முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
அணிக்கு 7 பேர்கொண்ட மற்றும் அணிக்கு 15 பேர் கொண்ட இலங்கை ரக்பி அணியின் தலைவராக மரிஜா நீண்ட காலம் கடமையாற்றியுள்ளார். அதில், 2015ஆம் ஆண்டு பிரிவு 1 ஆசிய சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியை சம்பியன் பட்டம் நோக்கி வழிநடத்தியதே அவரது மறக்க முடியாத தருணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
தனது ஓய்வு பற்றி ThePapare இற்கு கருத்து தெரிவித்த பொழுது,
“இலங்கை அணிக்காக நீண்ட காலம் விளையாடியதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன். அதேவேளை இக்காலவேளையில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என நான் நினைக்கின்றேன். எனது இந்தத் தீர்மானம் சரி என்றே நான் நினைக்கின்றேன். நடைபெற இருக்கின்ற ஆசிய பிரிவு 1 ரக்பி சம்பியன்ஷிப் தொடரே தேசிய அணிக்காக நான் விளையாடும் இறுதி தொடராக அமையும்”
ஆனாலும் கழக மட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கருத்து தெரிவிக்காத மரிஜா, கண்டி கழகத்திற்காக இன்னுமொரு வருடம் விளையாட எண்ணியுள்ளதாக தெரிவித்தார்.
“ரக்பி விளையாட்டைத் தொடர என்னுள் இன்னும் பலம் இருப்பதாக நான் நம்புகின்றேன். எனவே கண்டி கழகத்திற்காக மேலும் ஒரு வருடம் விளையாட எண்ணியுள்ளேன்”
தனது ரக்பி வாழ்க்கையில் கண்டி ரக்பி கழகத்திற்காக மாத்திரமே விளையாடியுள்ள மரிஜா, 10 இற்கும் மேற்பட்ட லீக் கிண்ணங்கள் மற்றும் மேலும் பல கிண்ணங்களை சுவீகரித்த அற்புத வீரராக வரலாற்று புத்தகங்களில் உள்ளடக்கப்படுவார். மேலும் லீக் தொடர், அணிக்கு 7பேர் கொண்ட தொடர் மற்றும் நொக் அவுட் தொடர் ஆகிய முக்கிண்ணங்களையும் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் வென்ற ஒரே ஒரு தலைவரும் இலங்கையின் நட்சத்திர வீரரான பாசில் மரிஜாவே ஆகும்.