இலங்கையின் வெற்றிக்கு வேகப் பந்துவீச்சாளர்களே காரணம் ஹத்துருசிங்க

2503

ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் ஏமாற்றி இருந்தாலும், வேகப் பந்துவீச்சாளர்களின் அபாரத்தால் இந்தப் போட்டியை வெற்றி கொள்ள முடிந்ததாக இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (04) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி, டக்வர்த் லூவிஸ் முறைப்படி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இலங்கை துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை சந்தித்து இருந்தாலும், நுவன் பிரதீப் மற்றும் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சினால் இம்முறை உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை இலங்கை அணி பதிவுசெய்தது.

இந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றி குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க,

உண்மையில் இலங்கை அணியின் ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும், மத்திய ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தமை மிகவும் கவலையளிக்கிறது. ஒரு கட்டத்தில் நாங்கள் மிகவும் நல்ல நிலையில் இருந்தோம். இந்த ஆடுகளத்தில் ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ள சற்று கடினமாக இருந்தது. ஆனால் துடுப்பாட்ட வீரர்கள் அதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது ஓட்டங்களைக் குவிக்கின்ற ஆடுகளமாக அது காணப்பட்டது.

உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை சுவைத்தது இலங்கை

கார்டிப் – ஷோபியா கார்டன் மைதானத்தில் நேற்று (04) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது……

முதலில் நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்தோம். அதன்பிறகு ஒரே ஓவரில் தொடர்ந்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். வீரர்கள் தவறான துடுப்பாட்ட பிரயோகங்களை மேற்கொண்டிருந்தனர். இதனால் வீரர்களின் மனநிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எதிரணிக்கு இந்தப் போட்டியில் கூடுதல் சந்தர்ப்பம் கிடைத்தது.

உண்மையில் நாங்கள் பெற்றுக்கொண்ட ஓட்ட எண்ணிக்கை போதாது. நாங்கள் 280 – 300 ஓட்டங்களை குவித்திருக்க வேண்டும். ஆனால் இறுதியில் லசித் மாலிங்க மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் 20 ஓட்டங்களை மேலதிகமாகப் பெற்றுக் கொடுத்தனர்.  

அத்துடன், போட்டியின் அனைத்து முடிவுகளும் ஆடுகளங்களைப் பொறுத்தே அமைகின்றது. எமக்கு கிடைத்த இரண்டு ஆடுகளங்களும் ஒருநாள் போட்டிகளுக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடையாது என்பதே எனது நிலைப்பாடாகும். எனினும், ஏனைய அணிகள் விளையாடிய ஆடுகளங்களைப் பார்த்தால் நிறைய பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தைக் கொண்டதாக இருக்கும். இது உண்மையில் அதிக புற்களைக் கொண்ட பச்சை நிற விக்கெட்டாக இருந்தது.

அத்துடன், துரதிஷ்டவசமாக எமக்கு நாணய சுழற்சியில் தோல்வியை சந்தித்து முதலில் துடுப்பெடுத்தாட வேண்டி ஏற்பட்டது. இந்த ஆடுகளத்தில ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாட இலகுவாக இருந்திருக்கலாம். ஆனால் ஆரம்பம் சற்று கடினமாக இருந்தது. எனினும், எமது துடுப்பாட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எனவே, எதிர்வரும் போட்டிகளில் எமக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு உகந்த ஆடுகளங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

Video – Afghanistan vs Sri Lanka | CWC19 Match 7 Highlights

Nuwan Pradeep, Kusal Perera and Lasith Malinga combined to take Sri Lanka to their 1st win of the ICC Cricket World Cup….

எதுஎவ்வாறாயினும், இந்த வெற்றியானது எமக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஏனெனில், நாங்கள் வெற்றியொன்றுக்காக காத்திருந்தோம். அண்மைக்காலமாக ஒருநாள் போட்டிகளில் நாங்கள் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. எனவே இந்த வெற்றிக்குப் பிறகு எமது வீரர்கள் இன்னும் சிறப்பாக விளையாடுவர்கள் என தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம், இலங்கை அணியின் அடுத்த போட்டிக்கான ஆயத்தம் குறித்தும், குசல் மெண்டிஸ், தனன்ஜய டி சில்வா மற்றும் அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகிய வீரர்களது மோசமான துடுப்பாட்டம் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில்,

எங்களுக்கு தெரியும் அவர்கள் மிகவும் அனுபவமிக்க வீரர்கள். உண்மையில் இதிலிருந்து அவர்கள் நிறைய கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன். எனவே அவர்கள் எவ்வாறான ஆரம்பத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதுதொடர்பில் அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

Video – Malinga’s toe-crushers!

Lasith Malinga proved his class once again bowling a brilliant spell alongside Nuwan Pradeep to seal the game for Sri Lanka…….

எனினும், எதிர்வரும் போட்டிகளில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் தமது வழமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களைக் குவிப்பாளர்கள் என நம்புகிறேன். அதேபோல குசல் ஜனித் பெரேரா இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். அவர் ஒரு அற்புதமான வீரர். அவருக்கு துடுப்பெடுத்தாடுவதற்கான முழு அனுமதியையும் நாங்கள் கொடுத்துள்ளோம். அவர் விளையாடிய பெரும்பாலான போட்டிகளில் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. எனவே அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சரிவர செய்து கொடுத்தார் என தெரிவித்தார்.

அதேபோல, குசல் மெண்டிஸ் மிகவும் அர்ப்பணிப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாபிரிக்க தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் குசல் மெண்டிஸும் ஒருவர். எனவே இந்த உலகக் கிண்ணத்தில் ஒரு போட்டியில் அவர் தனது சிறப்பாக விளையாடினால் நிச்சயம் அவரது திறமையை அனைவராலும் அறிந்து கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுவன் பிரதீப் இந்தப் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுப்பார் என்பதை எதிர்பார்த்திருந்தீர்களா எனவும் மாலிங்கவின் யோக்கர் பந்துவீச்சு தொடர்பிலும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதலளிக்கையில்,

எனக்கு யார் விக்கெட் எடுத்தாலும் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் இந்தப் போட்டியில் விக்கெட்டுகளைக் கைப்பற்யிருந்தது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோல மாலிங்க உலகத் தரம் வாய்ந்த நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர். எனவே அவருக்கு கிடைத்த பொறுப்பை சரிவர செய்து முடித்தார்.

அதேபோல, இந்த ஆடுகளத்தில் எமது வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்த்திருந்தோம். நுவன் பிரதீப்பும் சிறப்பாக பந்துவீசியிருந்தார்அவர் பயிற்சிப் போட்டியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். எனினும், இந்தப் போட்டிக்கான எமது அணித் தேர்வு சரியாக இருந்தது. நாங்கள் ஐந்து வேகப் பந்துவீச்சார்களுடன் களமிறங்கினோம். அதுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

இது எமக்கு அவசியமான வெற்றியாக இருந்தது. எமது வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு இந்தப் போட்டி மிகவும் உதவியிருந்தது. தொடர்ந்து போட்டிகளில் தோல்வியை சந்திக்கும் போது அதனால் ஏற்படுகின்ற நெருக்கடிகளை வீரர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். எனவே, இந்த வெற்றியின் மூலம் எமது மனநிலையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி குறித்து கருத்து வெளியிட்ட ஹத்துருசிங்க, இம்முறை உலகக் கிண்ணத்தில் மிகவும் சவாலான அணியாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அண்மைக்காலமாக அவர்கள் அதை நிரூபித்து வந்தார்கள். உண்மையில் சிறந்த பந்துவீச்சு அணியொன்று அவர்களிடம் உண்டு என அவர் சுட்டிக்காட்டினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<