ஐ.பி.எல். இல் அதிக இலங்கை வீரர்கள் இடம்பெற வேண்டும் என்கிறார் பர்வீஸ் மஹரூப்

3208

குசல் மெண்டிஸ், திசர பெரேரா போன்ற இலங்கையின் பல வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் ஆடும் தகுதி இருப்பதாகவும் ஐ.பி.எல். அணிகளில் இலங்கையின் பல வீரர்கள் இடம்பெற வேண்டும் என்றும் இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹரூப் குறிப்பிட்டார்.

இதன் பிறகு அஞ்செலோ மெதிவ்ஸ் பந்துவீச மாட்டார்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தலைவரான……

பதினோராவது ஐ.பி.எல். போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் ThePapare.com க்கு அளித்த பிரத்தியேக பேட்டியின் போதே மஹரூப் இதனைத் தெரிவித்தார்.

‘கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக அதிக இலங்கை வீரர்கள் அங்கு (ஐ.பி.எல்.) செல்லவில்லை. அதிக இலங்கை வீரர்கள் அந்த போட்டிகளில் ஆடுவதை நாம் பார்க்க விரும்புகிறோம். குசல் மெண்டிஸ், திசர பெரேரா போன்ற இலங்கையின் பல வீரர்களும் அந்த போட்டியின் தரத்தை பெற்றவர்கள். நிச்சமாக அவர்கள் அங்கு இடம்பெற்றிருக்க வேண்டும்’ என்று மஹரூப் குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இலங்கையின் 13 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். எனினும் அண்மைக்காலத்தில் இலங்கை வீரர்கள் இடம்பெறுவது கடினமாகியுள்ளது. இம்முறை ஐ.பி.எல். தொடருக்காக கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற வீரர்கள் ஏலத்தில் லசித் மாலிங்க, அஞ்செலோ மெதிவ்ஸ் உட்பட 18 இலங்கை வீரர்கள் பங்கேற்றபோதும் பந்து வீச்சாளர் அகில தனஞ்சய மற்றும் துஷ்மன்த ஷமீர இருவர் மாத்திரமே விலை போயினர்.

இதில் தற்போது உபாதைக்கு முகம்கொடுத்து வரும் சமீர ஐ.பி.எல். இல் ஆடுவது சந்தேகமாகி இருக்கும் நிலையில் அகில தனஞ்சய மாத்திரமே இலங்கை சார்பில் மஹேல ஜயவர்தன பயிற்சி அளிக்கும் மும்பை இந்தியன்ஸுக்காக ஆடுகிறார்.

‘அதிஷ்டவசமாக இந்த ஆண்டு அகில தனஞ்சய, துஷ்மன்த சமீர இடம்பெற்றிருக்கிறார்கள். துஷ்மன்த சமீரவின் உடல் தகுதி குறித்து எமக்கு தெரியாதுள்ளது. ஆனால் மஹேலவின் பயிற்சியின் கீழ் அகில தனஞ்சயவுக்கு மேலும் பல மிகப்பெரிய சர்வதேச வீரர்களின் கீழ் ஆட சந்தர்ப்பம் கிடைத்திருப்பது கற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்டில் துஷ்மன்த சமீர சந்தேகம்

தற்போது நடைபெற்று வரும் மாகாணங்களுக்கு இடையிலான ‘சுப்பர்-4’ கிரிக்கெட் தொடரின்……

தனிப்பட்ட முறையில் ஐ.பி.எல்லில் ஆடியிருப்பவன் என்பதால் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் வீரர்களுடன் ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்து கொள்வது கிரிக்கெட் கலாசாரம் பற்றி அதிகம் கற்க முடியுமாக இருக்கும். அகில, துஷ்மன்தவுக்கு இந்த அனுபவத்தை கற்க முடியும். தனிப்பட்ட முறையில் பல இலங்கையர்களை ஐ.பி.எல். இல் நான் பார்க்க விரும்புகிறேன். உலகக் கிரிக்கெட்டில் அது ஒரு மிகப்பெரிய நிகழ்வு’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

33 வயதாகும் பர்வீஸ் மஹ்ரூப் ஐ.பி.எல். இன் முதல் முன்று தொடர்களிலும் டெல்லி டேர்டெவில் அணிக்காக ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக ஓட்டங்கள் குவிக்க தெரிந்தவர் ரொஷேன்

இலங்கை முதல்தர கிரிக்கெட்டை பலப்படுத்தும் புதிய முயற்சியாக இலங்கை கிரிக்கெட் சபை நான்கு அணிகள் கொண்ட மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அனைத்து அணிகளும் அதிக ஓட்டங்கள் குவித்தன. குறிப்பாக காலி அணிக்காக ரொஷேன் சில்வா இரட்டைச் சதம் பெற்றார். முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக சோபித்து வரும் அவர் இலங்கை டெஸ்ட் அணியிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.

முதல்தர போட்டிகளில் தன்னுடன் நீண்ட காலமாக ஆடிவரும் ரொஷேன் சில்வா பற்றி மஹரூப் கூறும்போது,

‘அவருக்கு எதிராக பல போட்டியில் ஆடியவன் என்பதால் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக எனது கண்முன் சோபித்து வரும் வீரராக அவர் இருக்கிறார். தனது விக்கெட்டுக்கு பெறுமதி சேர்க்கும் வீரராக அவர் இருக்கிறார். அவர் எப்போதும் தனது விக்கெட்டை இலகுவாக விட்டுக் கொடுக்க மாட்டார்.

தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக பந்து வீசியது மற்றும் அவர் துடுப்பெடுத்தாடும்போது களத்தடுப்பில் ஈடுபட்டவன் என்பதால் அவர் பற்றி எனக்கு நிறையவே அனுபவம் உள்ளது. மிகப்பெரிய சதங்கள், மிகப்பெரிய ஓட்டங்கள் பெற தெரிந்த ஒருவராக அவர் உள்ளார். கடந்த போட்டியில் அதனையே நாம் பார்த்தோம்.

தனிப்பட்ட முறையில் அவர் நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதை பார்க்க நான் விரும்புகிறேன். இன்னும் தாமதிக்கவில்லை. அவர் இன்னும் தனது 30 வயதுகளின் ஆரம்பத்தில் (29 வயது) இருக்கிறார். இலங்கை கிரிக்கெட்டில் – குறிப்பாக கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய பங்காற்ற வேண்டி இருக்கிறது’ என்றார்.

இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணிக்காக ஆடியிருக்கும் ரொஷேன் சில்வா ஒரு சதம், மூன்று அரைச்சதங்களோடு 47.10 ஓட்ட சராசரியை பெற்றுள்ளார்.

அதேபோன்று இந்த மாகாண மட்ட போட்டிகளில் கொழும்பு அணிக்காக சதம் பெற்ற லஹிரு திரிமான்னவின் இடத்தை நிரப்ப முடியாது என்று குறிப்பிட்ட மஹரூப், தம்புள்ளை அணிக்காக அபார சதம் பெற்ற அஷான் பிரியன்ஜன் மற்றும் கண்டி அணிக்காக சதம் குவித்த மஹேல உடவத்த ஆகியோர் வாய்ப்புக்காக எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, முதல்தர போட்டிகளில் சோபித்து வரும் இளம் வீரர்களான சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு மிலன்த பற்றியும் பர்வீஸ் மஹரூப் இந்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்.

‘லஹிரு மிலன்த மற்றும் சதீர சமரவிக்ரம இருவரும் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள். அவர்கள் ஆட ஆரம்பித்தால் நிறுத்துவது கடினமானது. லஹிரு மிலன்த கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக திறமையை வெளிப்படுத்தி வருகிறார். முதல்தர போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்று வருகிறார். அவர் A அணி அளவில் இருந்து முன்னேற வேண்டும். அங்கிருந்து அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு முன்னேறுவது என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

இதில் விக்கெட் காப்பாளரான 22 வயதுடைய சதீர சமரவிக்ரம இலங்கை அணிக்காக மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடி வருகிறார். 23 வயதாகும் லஹிரு மிலன்த 46 முதல்தர போட்டிகளில் ஆடி 8 சதங்களுடன் மொத்தம் 3215 ஓட்டங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஆடுவேன்

இலங்கை அணியில் நிரந்த இடம் கிடைக்காத நிலையில் இலங்கை முதல்தர போட்டிகள் மற்றும் இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஆடிவரும் பர்வீஸ் மஹரூப் தனது எதிர்கால திட்டம் பற்றியும் ThePapare.comக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

‘தற்போதைய நிலையில் காயம் காரணமாக முதல்தர மாகாண மட்ட போட்டிகளில் நான் ஆடவில்லை. மீண்டும் போட்டிகளுக்கு திரும்ப காலம் எடுத்துக் கொள்வேன். சுகம் பெறுவதற்கு இரண்டு, இரண்டரை மாதங்கள் வரை விலகி இருக்க விரும்புகிறேன். எனது அடுத்த இலக்கு (வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான (மேர்கண்டைல்) கிரிக்கெட் தொடரில் விளையாடுவதாகும். மேர்கண்டைல் கிரிக்கெட்டில் கடந்த 12 ஆண்டுகளாக யுனிசெல்லா அணிக்காக நான் ஆடுகிறேன்’ என்றார்.

எனினும் கிரிக்கெட்டின் மற்றொரு துறையில் மஹரூப் கால்பதிப்பது குறித்து கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக பேச்சுகள் அடிபடும் நிலையில் மஹரூப் அது பற்றி கூறும்போது,

‘இன்னொரு ஆண்டு நான் முதல்தர போட்டிகளில் ஆடுவேன், அது எவ்வாறு என்று பார்த்துவிட்டு அடுத்த கட்டம் பற்றி யோசிப்பேன்’ என்றார். என்றாலும் போட்டிகளில் ஆட தனக்கு தொடர்ந்து உடல் தகுதி இருப்பதாக மஹ்ரூப் குறிப்பிட்டார்.

2004ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்த பர்வீஸ் மஹரூப் இலங்கை அணிக்காக 22 டெஸ்ட், 109 ஒரு நாள் மற்றும் 8 T20 போட்டிகளில் ஆடியுள்ளார். கடைசியாக அவர் 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலேயே இலங்கை அணிக்காக ஆடியிருந்தார்.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க