சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு

478
Fakhar Zaman run out on 193 after

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 341 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தடிய பாகிஸ்தான் அணிக்கு பக்ஹர் ஷமான் தனியாளாக போராடி ஓட்டங்களை குவித்தார்.

>> அக்ஷர் பட்டேலை தொடர்ந்து தேவ்துத் படிக்கலுக்கு கொவிட்-19 தொற்று

ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை ஆடிய பக்ஹர் ஷமான் 193 ஓட்டங்களை குவித்து, இறுதி ஓவரின் முதல் பந்தில் ரன்-அவுட் மூலமாக ஆட்டமிழந்தார். இந்த ரன்-அவுட் காரணமாக ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை தவறவிட்டார்.

ஒருபக்கம் இரட்டைச்சதம் பெறவேண்டியது துரதிஷ்டவசமாக இருந்த போதும், ரன்-அவுட் மூலம் ஆட்டமிழந்தமை சர்ச்சைக்குறிய விடயமாக மாறியுள்ளது. 

பாகிஸ்தான் அணி முகங்கொடுத்த 49வது ஓவரின் முதல் பந்ரதை பக்ஹர் ஷமான், பௌண்டரி எல்லைக்கு அருகில் அடித்துவிட்டு, இரண்டு ஓட்டங்களை பெற முயற்சித்தார். அப்போது, பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்திருந்ததுடன், பாகிஸ்தான் அணி 30 ஓட்டங்களை பெறவேண்டிய தேவை இருந்தது.

இந்தநிலையில், பக்ஹர் ஷமான் இரண்டாவது ஓட்டத்தை ஓடிப்பெற்றுக்கொண்டிருந்த போது, தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளர் குயிண்டன் டி கொக், களத்தடுப்பாளர் வீசும் பந்து, பந்துவீச்சாளரை நோக்கி செல்வதாக பாவனை செய்தார். எனவே, பந்தானது பந்துவீச்சாளரின் திசைக்கு செல்வதாக நினைத்த ஷமான், ஓட்டத்தை பெறும் வேகத்தை குறைத்து, தன்னுடைய சக துடுப்பாட்ட வீரரை திரும்பி பார்த்தார்.

எனினும், களத்தடுப்பில் ஈடுபட்ட எய்டன் மர்க்ரம் பந்தினை விக்கெட் காப்பாளர் பக்கம் வீசியதுடன், பந்து நேரடியாக விக்கெட்டை தாக்க, 193 ஓட்டங்களுடன் பக்ஹர் ஷமான் ஆட்டமிழந்தார். 

பக்ஹர் ஷமானை ஏமாற்றி, ரன்-அவுட் பெற்றமைக்காக தற்போது குயிண்டன் டி கொக் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஐசிசியின் 41.5.1 விதிமுறைப்படி, பந்தினை களத்தடுப்பாளர்கள் பெறும் போது, துடுப்பாட்ட வீரர்களை ஏமாற்றும் விதமாக செயற்படுவது குற்றமாகும். எனினும், அதனை கள நடுவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு குயிண்டன் டி கொக் செய்தது தவறு என நடுவர்கள் கண்டறிந்திருந்தால், இந்த குற்றத்துக்காக பாகிஸ்தான் அணிக்கு 5 ஓட்டங்கள் மேலதிகமாக வழங்கியிருக்க வேண்டும் எனவும், அவர்கள் ஓடிப்பெற்ற ஓட்டத்துடன் மொத்தமாக 7 ஓட்டங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் MCC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே குயிண்டன் டி கொக் மேற்கொண்ட இந்த செயலானது, கிரிக்கெட்டின் மகத்துவத்தை மீறுவதாக இருப்பதாவும், ஒரு மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸை மோசமான முறையில் வீணடித்திருப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், இந்த ஆட்டமிழப்புக்கான காரணம் தன்னுடைய கவனயீனம் என பக்ஹர் ஷமான் தெரிவித்துள்ளதுடன், குயிண்டன் டி கொக் மீது எந்தவித தவறும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் அணி இந்தப்போட்டியில் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன், தொடர் 1-1 என சமனிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<