ஹொங்கொங்கில் அதிரடி காட்டிய சமரி அத்தபத்து

166

ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்ற FairBreak அழைப்பு T20 தொடரில் பார்மி ஆர்மி மகளிர் அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை வீராங்கனை சமரி அத்தபத்து சகலதுறையிலும் பிரகாசித்துள்ளார்.

இந்தப் போட்டியில் சமரி அத்தபத்து ஆடிய பல்கன்ஸ் மகளிர் அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும், கடைசி பாதியில் வெளிப்படுத்திய மோசமான துடுப்பாட்டம் காரணமாக 9 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பார்மி ஆர்மி அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 50 ஆக இருந்தபோது சமரி முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த அணிக்காக சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி 54 ஓட்டங்களைக் குவித்த அணித்தவைவி லோரன் வின்பீல்ட்டின் விக்கெட்டையும் அடுத்து வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து 32 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்த, பல்கன்ஸ் அணிக்கு தலைவலியாக இருந்த நிகர் சுல்தானாவின் விக்கெட்டையும், தொடர்ந்து நான்காவது விக்கெட்டாக ஷெமைன் கேம்பல்லையும் சமரி அத்தபத்து வீழ்த்தி பந்துவீச்சில் தனது முழுப் பங்களிப்பையும் கொடுத்தார்.

இதன்படி, பார்மி ஆர்மி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 143 ஓட்டங்களை எடுத்தது. பல்கன்ஸ் அணிக்காக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட சமரி அத்தபத்து 17 ஓட்டங்களுக்கு 4 ஓட்டங்களை வீழ்த்தினார்.

தொடர்ந்து 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பல்கன்ஸ் அணி முதலாவது விக்கெட்டுக்கு 77 ஓட்டங்களை எடுத்தது. டேனி வியாட் 21 பந்துகளில் 33 ஓட்டங்களை எடுத்தார்.

சமரி அத்தபத்து 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகளுடன் 44 ஓட்டங்களை எடுத்து 3ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்த போது, பல்கன்ஸ் அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 94 ஓட்டங்களை எடுத்திருந்தது.

எனினும், தொடர்ந்து வந்த வீராங்கனைகள் பார்மி ஆர்மி அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, அந்த அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இறுதியில் 9 ஓட்டங்களால் பார்மி ஆர்மி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் சுருக்கம்

பார்மி ஆர்மி மகளிர் அணி – 143/6 (20); லோரன் வின்பீல்ட் 54, நிகர் சுல்தானா 40, சமரி அத்தபத்து 4/17

பால்கன்ஸ் மகளிர் அணி – 134/9 (20): சமரி அத்தபத்து 44, டேனி வியாட் 33, ருமானா அஹமட் 3/23.

முடிவு – பார்மி ஆர்மி அணி 9 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க