தென்னாபிரிக்க அணியின் புதிய தலைவராகிறார் டேவிட் மில்லர்

481
image courtesy - socialsports360.com

பாகிஸ்தான் அணியுடனான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான அணியிலிருந்து அணித்தலைவர் பாப் டு ப்ளெஸிஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டு, அணியின் தலைவராக டேவிட் மில்லர் செயற்படுவார் என்பதை தென்னாபிரிக்க கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவர் லிண்டா சொன்டி உறுதிப்படுத்தியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அங்கு தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் ஆடி வருகின்றது.

பெளன்சர் பந்து தாக்குதலுக்கு உள்ளான கருணாரத்ன வைத்தியசாலையில்

சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 எனும் அடிப்படையில் பாகிஸ்தான் அணியை வைட் வொஷ் செய்திருந்தது. அதன் பின்னர் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் தென்னாபிரிக்க அணி 3-2 எனும் அடிப்படையில் கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் சுற்றுப்பயணத்தின் இறுதி தொடரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகின்றது. முதல் போட்டி நேற்று (01) நடைபெற்றிருந்த நிலையில் இந்த போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 ஓட்டங்களினால் வெற்றி பெற்று பாஸ்தான் அணியின் தொடர்ச்சியான வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணி 2018 ஜூலை 4ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை தொடர்ச்சியாக 9 போட்டிகளிலும், 2016ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 11 தொடர்களையும் கைப்பற்றி வருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தென்னாபிரிக்க அணி, தொடர்ச்சியான தொடர் வெற்றிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை நாளை (03) நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டியின் முடிவின் பின்னர் கணிக்கலாம்.

இந்நிலையில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான தென்னாபிரிக்க அணியில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. விக்கெட் காப்பாளரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான குயின்டன் டி குக் இறுதி ஒருநாள் போட்டியின் போது உபாதைக்குள்ளானதில் டி20 குழாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது எஞ்சியுள்ள இரண்டு டி20 போட்டிகளுக்குமான குழாமிலிருந்து அணியின் தலைவர் பாப் டு ப்ளெஸிஸிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. இவரின் தொடர்ச்சியான பணிச்சுமை கருதியே குறித்த ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது.

தென்னாபிரிக்க அணிக்கு அடுத்து நடைபெறவுள்ள இலங்கை அணியுடனான தொடர் மற்றும் உலகக்கிண்ண தொடர் என்பவற்றில் இவர் விளையாட வேண்டும் என்பதற்கமையவே தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை குறித்த முடிவை எடுத்திருக்கின்றது.

முன்னனி வேகப்பந்துவீச்சாளரான டேல் ஸ்டைன், இளம் வேகப்பந்துவீச்சாளரான ககிஸோ ரபாடா ஆகியோருக்கு இலங்கை அணியுடனான தொடரை கருத்திற்கொண்டு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பாப் டு ப்ளெஸிஸிற்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

பாப் டு ப்ளெஸின் ஓய்வினால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளுக்குமான அணியின் தலைமை பொறுப்பு மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான டேவிட் மில்லருக்கு வழங்கப்பட்டுள்ளது.

116 ஒருநாள் சர்வதேச போட்டி, 65 டி20 சர்வதேச போட்டிகள் என 181 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட டேவிட் மில்லர், முதல் முறையாக தென்னாபிரிக்க அணியை வழிநடத்தம் பொறுப்பை ஏற்றுள்ளார். இருந்தாலும் இதற்கு முன்னதாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெலவன் பஞ்சாப் அணியை வழிநடாத்திய அனுபவம் டேவிட் மில்லருக்கு உண்டு.

ஐ.சி.சி உலகக் கிண்ணம், சம்பியன்ஸ் கிண்ணம் இந்தியாவிலேயே நடாத்தப்படும் – டேவிட் ரிச்சட்சன்

இதேவேளை ஒருநாள் தொடரின் போது தென்னாபிரிக்க அணி வீரரான அன்டில் பெஹலுக்வாயோ மீது பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட் அவரது நிறம் குறித்து கிண்டல் செய்த குற்றச்சாட்டில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது சர்ப்ராஸ் அஹமட்டிற்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்திருந்தது.

இதன் காரணமாக தற்போது பாகிஸ்தான் அணியின் தலைவராக மத்தியவரிசை துடுப்பாட்ட வீரரான சுகைப் மலிக் செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இரண்டாவது டி20 போட்டியுடன் சர்ப்ராஸ் அஹமட்டின் தடை முடிவடைவதனால் இறுதி போட்டியில் தலைமை பொறுப்பை ஏற்கும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

நாளை (03) நடைபெறவுள்ள இரண்டாவது டி20 போட்டிக்கான 11 பேர் கொண்ட உத்தேச அணி

தென்னாபிரிக்கா

ரீஸா ஹென்ட்ரிக்ஸ், கிஹான் குலோய்டே (விக்கெட் காப்பாளர்), றைஸ் வென்டர் டைஸன், டேவிட் மில்லர் (அணித்தலைவர்), ஹென்றிச் கிலாசன், வியான் முல்டர், கிறிஸ் மொரிஸ், அன்டில் பெஹலுக்வாயோ, ஹென்ட்ரிக்ஸ், ஜூனியர் டாலா அல்லது லுதோ சிபம்லா, தப்ரிஷ் ஷம்ஷி

பாகிஸ்தான்

பக்ஹர் சமான், பாபர் அசாம், முஹம்மட் ஹபீஸ், சுகைப் மலிக் (அணித்தலைவர்), ஆசிப் அலி, முஹம்மட் றிஸ்வான் (விக்கெட் காப்பாளர்), இமாட் வசீம், சதாப் கான், பஹீம் அஸ்ரப், ஹசன் அலி, உஸ்மான் சென்வாரி

இரண்டாவது போட்டியானது நாளை (03) இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு ஜொஹனர்ஸ்பேர்க்கில் பகல் போட்டியாக ஆரம்பமாகவுள்ளது. மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் புதன்கிழமை (06) செஞ்சூரியனில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<