508 அணிகள் ஆரம்பத்தில் பங்கு பற்றிய FA கிண்ணத்தின் 8 சுற்றுப் போட்டித் தொடர்கள் நடைபெற்ற நிலையில் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டித் தொடர்கள் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்று முடிவடைந்தன.
‘கார்கில்ஸ் புட் சிட்டி’யின் அனுசரணையுடன் தொடர்ந்து மூன்றாவது வருடமாக நடைபெறும் FA கிண்ணப் போட்டித்தொடர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமானது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்போட்டித்தொடரின் 8ஆம் சுற்றுப் போட்டித் தொடர்களின் விபரங்கள் இதோ:
நியு யங்க்ஸ் விளையாட்டுக் கழகம் (6) 1-1 (5) இலங்கை நேவி விளையாட்டுக் கழகம்
இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வரையறுக்கப்பட்ட 90 நிமிடங்களில் போட்டி சமநிலையில் முடிவுற்றது. பெனால்டி முறையில் நியு யங்க்ஸ் விளையாட்டுக் கழகம் தமக்கான 6 வாய்ப்புகளையும் கோலாக்க இலங்கை நேவிவிளையாட்டுக் கழகம் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டு தோல்வியைத் தழுவியது.
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் 4-1 திஹரியா யூத் விளையாட்டுக் கழகம்
பலம் பொருந்திய ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் இளம் வீரர்களுடன் களம் இறங்கியது. அனுபவ வீரர்கள் உபாதை காரணமாக விளையாடாத போதிலும் திஹரியா யூத் விளையாட்டுக் கழகத்தினை 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றிற்குத் தெரிவாகியது ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்.
மொஹமட் சபீர் 2 கோல்களைப் போட நவீன் ஜூட் மற்றும் மொஹமட் அலீம் தலா ஒரு கோல் சகிதம் ஜாவா லேன் விளையாட்டுக் கழகத்திற்காக கோல் போட, கஸ்டிலஸ் திஹரியா யூத் விளையாட்டுக் கழகதிற்காக ஒரு கோலைப் போட்டார்.
மாத்தறை சிட்டி (4) 1-1 (2) க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகம்
பலம் பொருந்திய க்ரிஸ்டல் பலஸ் விளையாட்டுக் கழகம் மாத்தறை சிட்டி அணியை எதிர்கொண்டது. எனினும் மாத்தறை சிட்டியின் வீரப்புலி முதலாவது கோலைப் போட க்ரிஸ்டல் பலஸ்ஸின் தம்மிக ஏகநாயக பதிலடி கொடுத்தார். பெனால்டி முறைக்குச் சென்ற போட்டியினை 4-2 என்ற அடிப்படையில் மாத்தறை சிட்டி அணி கைப்பற்றியது.
சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் (5) 0-0 (4) கொம்ரேட்ஸ் விளையாட்டுக் கழகம்
21 தடவை FA கிண்ணத்தை சுவீகரித்த சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் கொம்ரேட்ஸ் விளையாட்டுக் கழக வீரர்களைத் தாண்டி கோல் எதனையும் போடமுடியாது போக போட்டி பெனால்டி முறைக்குச் சென்றது. எனினும் தனது நிதானத்தை இழக்காத சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 5 வாய்ப்புகளையும் கோலாக்க, கொம்ரேட்ஸ் விளையாட்டுக் கழகம் ஒரு பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டு தோல்வியைத் தழுவினர்.
பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் (5) 1-1 (4) சிங்கிங் பிஷ் விளையாட்டுக் கழகம்
இரு அணிகளும் சளைக்காமல் விளையாடிய போதிலும் போட்டி 1-1 என முடிவடைந்து பெனால்டி முறைக்குச் சென்றது. தமக்குக் கிடைத்த அனைத்து பெனால்டி வாய்ப்புகளையும் கோலாக்கிய பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் 5-4 என்ற ரீதியில் வெற்றிபெற்றது.
பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4-0 லிவர் பூல் விளையாட்டுக் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம், லிவர் பூல் விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் 4-0 என்ற இலகு வெற்றியை பொலிஸ் விளையாட்டுக் கழகம் பதிவு செய்தது. சண்முகராஜா சஞ்சீவ் 2 கோல்களைப் போட ஹெட்டியாராச்சி மற்றும் ரனீஷ் தலா ஒரு கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தனர்.
ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 2-1 புனித நிக்கொலஸ் விளையாட்டுக் கழகம்
பரபரப்பாக நடந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எனினும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழக வீரர் முஹம்மத் பர்சீன் 2 கோல்களைப் போட்டு தமதணியின் வெற்றியை உறுதி செய்தார். ரதீஸ் புனித நிக்கொலஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக ஆறுதல் கோலொன்றைப் போட்டார்.
கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 2-1 ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகம்
பலம் பொருந்திய கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 2-1 கோல் அடிப்படையில் ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தை வெற்றிகொண்டது. கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் சார்பாக மோமஸ் யாப்போ மற்றும் சர்வான் ஜோஹர் ஆகியோர் தலா ஒரு கோலைப் போட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடினாலும் ரெட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஒரு கோலை மட்டுமே போட முடிந்தது.
ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம் (5) 1-1 (4) நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம்
இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடிய பட்சத்தில் வெற்றியாளர்களை வரையறுக்கப்பட்ட 90 நிமிடங்களில் கண்டுபிடிக்க முடியவில்லை. ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக இஸ்மைல் அபுமெரே மற்றும் நியூ ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக மொஹமட் அவாஸ் ஆகியோர் கோல்களைப் போட்டனர். பெனால்டி முறையில் ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம் 5-4 என வெற்றியீட்டியது.
சுபர் சன் விளையாட்டுக் கழகம் (5) 0-0 (4) புனித ஜோசப் விளையாட்டுக் கழகம், மன்னார்
FA கிண்ணத்தொடரின் மற்றுமொரு போட்டி பெனால்டி முறை மூலம் தீர்மானிக்கப்பட்டது. தீர்க்கமான போட்டியில் இரு அணி வீரர்களும் கோல்களைப் போடத்தவறினர். பெனால்டி முறைக்கு கொண்டு செல்லப்பட்ட போட்டியை சுபர் சன் விளையாட்டுக் கழகம் 5-4 என கைப்பற்றினர்.
அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகம் 0-3 ஹிலரி விளையாட்டுக் கழகம்
ஹிலரி விளையாட்டுக் கழகம், அப் கண்ட்ரி லயன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கெதிராக 3-0 என இலகு வெற்றியைப் பதிவு செய்தது.
சொலிட் விளையாட்டுக் கழகம் 5-0 கிருளப்பனை யுனைடட்
கிருளப்பனை யுனைடட் மொரகஸ்முல்ல விளையாட்டுக் கழகம், ரத்னம் விளையாட்டுக் கழகம் ஆகிய பலமிக்க அணிகளை வீழ்த்தி 8ஆம் சுற்றுப் போட்டிக்குத் தெரிவானது. எனினும் அவர்களால் சொலிட் விளையாட்டுக் கழகத்தின் சிறப்பாட்டத்தை எதிர்கொள்ள முடியவில்லை.
ராஜகருணா, பிரதீபன் ஆகியோர் தலா ஒரு கோல் சகிதம் அடிக்க ஒலாயெமி ஹட்ரிக் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
ஏர் போர்ஸ் விளையாட்டுக் கழகம் (4) 0-0 (2) நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்
போட்டியின்போது இரு அணி வீரர்களும் கோல் போடத்தவறியமையால் பெனால்டி முறைக்கு போட்டி கொண்டு செல்லப்பட்டது. பெனால்டியினை 4-2 என்ற ரீதியில் ஏர் போர்ஸ் விளையாட்டுக் கழகம் கைப்பற்றி அடுத்த சுற்றிற்குத் தெரிவாகியது.
ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் 3-0 ஹைலண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்
ஹைலண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கெதிரான போட்டியில் ப்ரில்லியன்ட் விளையாட்டுக் கழகம் 3-0 என்ற இலகு வெற்றியைப் பதிவு செய்து அடுத்த சுற்றிற்கு முன்னேறியது.
ஆர்மி விளையாட்டுக் கழகம் 1-0 நந்தமித்ரா விளையாட்டுக் கழகம்
தீர்க்கமாக நடைபெற்ற போட்டியில் ஆர்மி விளையாட்டுக் கழகம் 1-0 என்ற ரீதியில் நந்தமித்ரா விளையாட்டுக் கழகத்தினை வெற்றிகொண்டது. ஆர்மி விளையாட்டுக் கழகம் சார்பாக மொஹமட் இசட்டீன் கோலொன்றைப் போட்டு அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
7ஆம் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் களுத்தறை பார்க் விளையாட்டுக் கழகம் பலம் பொருந்திய ரினௌவ்ன் விளையாட்டுக் கழகத்திற்கு “Walk over ” என்ற அடிப்படையில் வெற்றியை வழங்கியது. மேலும் தெரிவு செய்யப்பட்டுள்ள 16 அணிகளுக்குமிடையிலான காலிறுதிக்கு முன்னதான சுற்றுப் போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளன.