இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் 2018ஆம் ஆண்டுக்கான FA கிண்ண கால்பந்து தொடரின் முதல் போட்டிகள் ஞாயிற்றுக் கிழமை (22) இடம்பெற்றன. இதில் மட்டக்களப்பில் இடம்பெற்ற போட்டியில் லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகமும், கொழும்பில் இடம்பெற்ற மற்றைய போட்டியில் கொலொன்ஸ் விளையாட்டுக் கழகமும் வெற்றிகளைப் பெற்று இந்த பருவகாலத் தொடரை ஆரம்பித்து வைத்தன.
நியூ கிரீன் லைட் எதிர் லைட் ஹவுஸ்
மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்ற இத்தொடரின் முதல் போட்டி ஒன்றில் மட்டக்களப்பு லீக் அணியான நியூ கிரீன் லைட் விளையாட்டுக் கழகத்தினை, லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியுள்ளது.
இவ்வாரம் ஆரம்பமாகும் எப்.ஏ கிண்ண கால்பந்து தொடர்
போட்டி ஆரம்பித்த நேரத்திலிருந்து இரண்டு அணிகளினதும் பந்துப் பரிமாற்றம் மிகவும் மெதுவாகவே இருந்தது. பின்னர் நியூ கிரீன் லைட் விளையாட்டுக் கழகத்தினர் பந்தின் ஆதிக்கத்தை தமது பக்கம் எடுத்துக் கொண்டு முதல் கோலை போடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், இளம் வீரர்களைக் கொண்ட லைட் ஹவுஸ் அணியின் பின்களத்தினை தாண்டுவது அவர்களுக்கு இலகுவாக இருக்கவில்லை.
தொடர்ந்து முன்னேறிய ஆட்டத்தில், லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் சார்பாக தனியொருவராக பந்தை கொண்டு சென்று A. அஜிதன் ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் தனது அணிக்காக முதல் கோலைப் போட்டு, போட்டியில் கோல்களுக்கான நுழைவாயிலை திறந்து வைத்தார்.
முதல் கோல் போடப்பட்டு மூன்று நிமிடங்களில் இலகுவான வாய்ப்பு ஒன்றை பயன்படுத்தி எதிரணியின் எல்லைக்குள் பந்தினை கொண்டு சென்று தொடர்ந்து முன்னேறிய லைட் ஹவுஸ் கழகத்தின் I. சதுவர்தன் அதனை சகவீரரான P. அபினேஷிடம் கொடுத்தார். மிக நீண்ட தூரத்தில் இருந்து அபினேஷ் உதைந்த பந்து கோல்காப்பாளரின் தலைக்கு மேலால் கோல் கம்பத்தினுள் செல்ல இரண்டாவது கோலை லைட் ஹவுஸ் அணி பெற்றுக் கொண்டது.
எதிரணியின் இரண்டு கோல்களுக்கும், கிரீன் லைட் அணி கவுண்டர் தாக்குதல்கள் தரும் விதமாக விரைவான பந்துப் பரிமாற்றங்களை காட்டியிருந்த போதிலும், அவர்களால் கோல்கள் எதனையும் போட முடியவில்லை. சில கோணர் வாய்ப்புக்களின் மூலமும் கிரீன் லைட் அணிக்கு கோல்கள் போட சந்தர்ப்பம் கிடைத்த போதிலும் அது எதுவும் கைகூடாமல் போயிருந்தன.
கோபா டெல்ரே கிண்ணம் மீண்டும் பார்சிலோனா வசம்
தொடர்ந்து இரண்டு அணிகளும் பந்தை மைதானத்தின் நடுவிலேயே வைத்திருந்தனர். எனினும், சிறப்பாக செயற்பட்ட A. அஜிதனுக்கு லைட் ஹவுஸ் கழகத்துக்காக இன்னுமொரு கோலை போடும் சந்தர்ப்பம் கிடைத்தது. எனினும், அவர் உதைந்த பந்து கம்பத்தில் முட்டி வெளியேறியது. இதனையடுத்து மேலதிக கோல்கள் ஏதுமின்றி முதல் பாதி, லைட் ஹவுஸ் அணியின் ஆதிக்கத்தோடு முடிவுக்கு வந்தது.
முதல் பாதி: லைட் ஹவுஸ் SC 2 – 0 நியூ கிரீன் லைட் SC
இரண்டாம் பாதியும், எந்தவொரு ஆர்ப்பரிப்பும் இன்றி மெதுவாக ஆரம்பமாகியிருந்து. லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் இரண்டு கோல்களைப் போட்டிருந்தமையினால், நியூ கிரீன் லைட் அணி அதனை சமநிலை செய்ய கோல்கள் பெறும் முயற்சிகளில் தொடர்ந்தும் இறங்கியிருந்தது.
மெதுவாக முன்னேறிய இரண்டாம் பாதியில், லைட் ஹவுஸ் அணிக்காக மீண்டும் அபாரம் காட்டிய P. அபினாஷ் தனது இரண்டாம் கோலைப் போட்டார். இந்த கோல் அவரது தரப்பினை மேலும் பலப்படுத்தியது.
தொடர்ந்த ஆட்டத்தில், நியூ கிரீன் லைட் அணி தமது பலமான பின்கள தடுப்பினால் லைட் ஹவுஸ் அணி மேலதிக கோல்கள் பெறுவதை தடுத்த போதிலும், அவர்களால் இறுதி வரை எந்த கோல்களும் பெற முடியாத காரணத்தினால் போட்டியில் தோல்வியைத் தழுவ நேரிட்டது.
முழு நேரம்: லைட் ஹவுஸ் SC 3 – 0 நியூ கிரீன் லைட் SC
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – A. அஜிதன் (லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம்)
கோல் பெற்றவர்கள்
லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் – A. அஜிதன் 10′, P. அபினாஷ் 13′ & 66′
மஞ்சள் அட்டைகள்
லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகம் – I. சதுவர்த்தன் 16’, P. அபினேஷ்55’, A. கிரிஷாந்த் 58’
நியூ கிரீன் லைட் விளையாட்டுக் கழகம் – K. லிசாந்த் 12’, I. வசந்தன் 61’
சிவப்பு அட்டை
நியூ கிரீன் லைட் விளையாட்டுக் கழகம் – K. சென்துஜன் 85’
தேசிய கால்பந்து அணியில் மேலும் 3 வீரர்கள் இணைப்பு
ஓல்ட் றோயலிஸ்ட் எதிர் கொலொன்ஸ்
இந்த பருவகால FA கிண்ணத்தின் மற்றைய ஆரம்ப போட்டியொன்று, கொழும்பு CR & FC மைதானத்தில் நடைபெற்றது. கொழும்பு கால்பந்து லீக்கினை பிரதிநிதித்துவம் செய்யும் அணிகளான கொலொன்ஸ் கால்பந்து கழகம் மற்றும் ஓல்ட் றோயலிஸ்ட் விளையாட்டுக் கழகம் ஆகியன இந்த ஆட்டத்தில் மோதியிருந்தன.
ஆட்டத்தின் முதல் கோலை ஓல்ட் றோயலிஸ்ட் அணி சார்பாக துவான் ரிசாத் பத்தாவது நிமிடத்தில் போட்டிருந்தார். எனினும், முதல் கோல் போடப்பட்டு இரண்டு நிமிடங்களில் கொலொன்ஸ் அணியும் மொஹமட் ரிஸ்மி மூலம் கோலொன்றைப் பெற்றுக் கொண்டது.
தொடர்ந்து, ஆட்டத்தின் மூன்றாவது கோல் ஓல்ட் றோயலிஸ்ட் அணிக்காக மொஹமட் சப்ரீன் மூலம் 34ஆவது நிமிடத்தில் பெறப்பட்டிருந்தது. எனினும், இந்த கோலுக்கு முதல் பாதி நிறைவடைய சிறிது நேரத்திற்கு முன் மொஹமட் இர்பான் போட்ட கோலினால் கொலொன்ஸ் அணி பதிலடி தந்தது.
இதனால், முதல் பாதியில் இரண்டு அணிகளுக்கும் தலா 2 கோல்கள் வீதம் கிடைக்கப் பெற குறித்த பாதி சமநிலையில் முடிந்தது.
முதல் பாதி: ஓல்ட் றோயலிஸ்ட் SC 2 – 2 கொலொன்ஸ் FC
இரண்டாம் பாதியில் ஓல்ட் றோயலிஸ்ட் அணியினால் எந்த கோல்களையும் பெற முடியவில்லை. எனினும், கொலொன்ஸ் அணிக்கு மனோஜ் பெரேரா 51ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றைப் பெற்றுத்தந்தார்.
அத்தோடு மொஹமட் இர்பான் ஆட்டம் நிறைவடைய 5 நிமிடங்கள் எஞ்சியிருக்கையில் மீண்டும் ஒரு கோலை கொலொன்ஸ் அணிக்காகச் சேர்த்தார். இதனால், இரண்டாம் பாதி ஆதிக்கத்துடன் கொலொன்ஸ் கால்பந்து கழகத்தினர் 4-2 என்ற கோல்கள் கணக்கில் ஆட்டத்தின் வெற்றியாளர்களாக மாறினர்.
முழு நேரம்: ஓல்ட் றோயலிஸ்ட் SC 2 – 4 கொலொன்ஸ் FC
ThePapare.com இன் ஆட்ட நாயகன் – மொஹமட் இர்பான் (கொலொன்ஸ் கால்பந்து கழகம்)
கோல் பெற்றவர்கள்
கொலொன்ஸ் கால்பந்து கழகம் – மொஹமட் ரிஸ்மி 17′, மொஹமட் இர்பான் 37′ & 85′, மனோஜ் பெரேரா 51’
ஓல்ட் றோயலிஸ்ட் விளையாட்டுக் கழகம் – துவான் இர்சாத் 15′, மொஹமட் சப்ரீன் 34′
மஞ்சள் அட்டைகள்
கொலொன்ஸ் கால்பந்து கழகம் – கன்தசாமி பிரகாஷ் 50’
ஓல்ட் றோயலிஸ்ட் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ரிஸ்மி 37′
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…